ஓரினச்சேர்க்கை குற்றமா? இல்லையா ? நீங்களே சொல்லுங்க மை லார்ட்! – AanthaiReporter.Com

ஓரினச்சேர்க்கை குற்றமா? இல்லையா ? நீங்களே சொல்லுங்க மை லார்ட்!

தற்போது இந்தியாவில் அதிகரித்து வரும் ஓரினச்சேர்க்கை குற்றமா இல்லையா என்று முடிவெடுக்கும் உரிமையை சுப்ரீம் கோர்ட்டிடமே விட்டு விடுவதாக மத்திய அரசு இன்று சுப்ரீம் கோர்ட்டில் ல் தெரிவித்தது.

பிரிட்டிஷ் ஆட்சி காலகட்டத்தில் சட்டதிட்டங்கள் ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டு நீதிமன்றங்கள் செயல்படுத்தப்பட்டன, அதில் பலவற்றை இந்திய சட்டம் இணைத்துக்கொண்டு பின்பற்றுகிறது. இந்திய சட்டத்தில் செக்ஷன் 377 ஓரினச்சேர்க்கை என்பது குற்றம் என்று சொல்கிறது. செக்ஷன் 377, இயற்கைக்கு மாறான குற்றங்கள் மற்றும் இயற்கைக்கு மாறாக எந்த ஆணுடனும், பெண்ணுடனும் மற்றும் விலங்குங்களிடம் உடலுறவு வைத்துக்கொள்பவர்களுக்கு தண்டனையாக ஆயுள் தண்டனை அல்லது குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு சிறை போன்ற தண்டனைகள் வழங்கப்படும். இல்லையென்றால் அபராதம் கட்ட நேரிடும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயம் வயது வந்த இருவர் விரும்பி ஓரினசேர்க்கையில் ஈடுபடுவதை குற்றமாக கருத முடியாது. இருப்பினும் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 377வது பிரிவின்படி, வயதுக்கு வந்த 2 ஆண்களோ அல்லது 2 பெண்களோ ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமாக கருதப்படுகிறது. கடந்த 2009ம் ஆண்டு டெல்லி ஐகோர்ட் `ஓரின சேர்க்கை குற்றமல்ல’ என்ற பரபரப்பு தீர்ப்பை அளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2013 ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில், ‘ஓரினசேர்க்கையில் ஈடுபடுவது குற்றச்செயல்’ என உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், கன்வில்கர் சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகிய 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ‘‘வாழ்க்கையின் அடிப்படை உரிமை குறித்தும், பாலியியல் சுதந்திரம் குறித்தும், ஓரினச் சேர்க்கை வழக்கில் 2013 ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை சரிசெய்வது குறித்து ஆய்வு செய்வோம்’’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று 2-வது நாளாக விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் உதாரணமாக ஒருவர் தன் உடன்பிறந்தவரைத் தேர்வு செய்து விடக்கூடாது இது இந்து தர்மத்துக்கு விரோதமானது என்றார்.

உறவுகளின் இயல்பு மற்றும் அரசியல் சாசன சட்டப்பிரிவு 21, அதாவது வாழ்வதற்கான அடிப்படை உரிமையின் கீழ் அந்த உறவுக்கு பாதுகாப்பு அளிப்பது பற்றித்தான் இந்த வழக்கு. அதாவது உறவுக்கு ஒப்புக்கொண்ட வயது வந்த இருவரும் கிரிமினல் குற்றம் இழைக்கவில்லை என்பதற்கான விவகாரம் இது என்று நீதிபதி சந்திரசூட் பதிலளித்தார்.

ஒப்புக்கொண்ட இரண்டு வயது வந்தோரின் உறவு என்பதே அரசியல் சாசன 21-ன் வெளிப்பாடுதானா என்பதை ஆய்வு செய்கிறோம். உறவுகளின் இயல்பு பற்றித்தான் பரிசீலிக்கிறோம், திருமணம் பற்றி பேசவில்லை எனவும் நீதிபதி சந்திரசூட் விளக்கமளித்தார். இந்நிலையில் தங்கள் 4 பக்க பிரமாணப்பத்திரத்தை நீதிபதிகள் அமர்விடம் சமர்ப்பித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மேத்தா, இது குறித்த முடிவை நீதிமன்ற அமர்வின் கருத்துக்கே விட்டு விடுகிறோம் என்று கூறினார்.