தூக்குத் தண்டனை கைதிகள் எக்கச்சக்கம்: ஆனால் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை! – AanthaiReporter.Com

தூக்குத் தண்டனை கைதிகள் எக்கச்சக்கம்: ஆனால் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை!

கடந்த 2016-ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் பல்வேறு வழக்குகளில் 136 பேருக்கும் 2017ல் 109 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றங்கள் தீர்ப்பளித்திருந்தன. அதிலும் நாட்டில் அதிகப் பட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 67 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட மரணதண்டனைகள் ஒன்று கூட நிறைவேற்ற ப்பட வில்லை என சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

நம் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, கிரிமினல் சதிச்செயலில் ஈடுபட்டால்; இந்திய அரசுக்கு எதிராக போர் தொடுப்பது, போர் தொடுக்க முயற்சிப்பது, போரைத் தொடுப்பவர்களுக்கு உதவுவது போன்றவற்றில் ஈடுபட்டால், அரசுக்கு எதிராகக் கலவரத்தைத் தூண்டினால், பொய் சாட்சி கூறி அப்பாவியின் மரண தண்டனைக்குக் காரணமாக இருந்தால், கொலை செய்தால், பணத்துக்காக ஆள்களைக் கடத்தினால், கொள்ளை, கொலை ஆகியவற்றை ஒருசேரச் செய்தால், ஐந்து பேரோ அல்லது அதற்கும் மேற்பட்டவர்களோ கொள்ளை அடிக்கும்போது கொலை செய்திருந்தால் – அந்த கும்பலிலிருந்த ஒவ்வொருவருக்கும், பாலியல் வல்லுறவு அல்லது பாலியல் வல்லுறவில் ஈடுபட்டால் அல்லது அப்போது பெண்ணைத் தாக்கிச் செயலிழக்கச் செய்தால் அல்லது கொன்றால், சாதி – மத வெறியில் காதலர்களைக் கொன்றால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.

இன்னும், உயிரிழந்த கணவனுடன் மனைவியையும் சிதையில் ஏற்றி உயிரோடு கொளுத்தும் ‘சதி’ என்னும் கொடூரத்தை அரங்கேற்றுவோருக்கு, பழங்குடிகள், பட்டியல் இனத்தவருக்கு எதிரான வழக்கில் பொய் சாட்சியம் சொல்லி அவர்களுக்கு மரண தண்டனை பெற்றுத்தருகிறவருக்கு, போதைப்பொருள் கடத்தலில் தொடர்ந்து ஈடுபடுவோருக்கு, பொது இடங்களில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பயங்கர வாதச் செயல்களில் ஈடுபடுவோருக்கும் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று சட்டமெல்லாம் இருந்து அதன் படி தண்டனையும் பெற்றவர்களில் ஒருவரும் கடந்தாண்டு தூக்கில் இடப் படவில்லை என்று ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் மரண தண்டனைகளும் அவற்றில் நிறைவேற்றப்பட்டவையும் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல் இதுதான்

கடந்த ஆண்டில் 109 மரண தண்டனைகள் அளிக்கப்பட்டன. ஆனால் அவற்றில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை.. அதற்கு முந்தைய ஆண்டு 136 மரண தண்டனைகள் அளிக்கப்பட்டன.

2016ல் கொலைக்குற்றங்களுக்கு 87 மரண தண்டனைகள் அளிக்கப்பட்டன. 2017ல் இந்த எண்ணிக்கை 51 ஆக குறைந்தது. பாலியல் குற்றங்களுக்கு 43 மரணதண்டனைகள் அளிக்கப்பட்டன. போதை மருந்துகள் தொடர்பாக 2 மரண தண்டனைகள்அளிக்கப்பட்டன.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்நோக்கி 371 பேர் உள்ளனர். இதில் மன்னிப்பு அளிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தகவல் பெற முடியவில்லை.

சீன நாடே மரண தண்டனைகளை அளிப்பதி்ல் உலகிலேயே முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் ஆயிரக்கணக்கில் மரண தண்டனைகள் அளி்க்கப்படுகின்றன.. மரண தண்டனை குறித்த தகவல்கள் அரசு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன

ஈரானைப் பொருத்தவரை 507 மரண தண்டனைகளும், சவுதி அரேபியாவில் 146ம் ஈராக்கில் 125ம் பாகிஸ்தானில் 60ம் அளிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 23 மரண தண்டனைகள் அளிக்க பட்டுள்ளன” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளது..