இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து வளர்ச்சி! – ஐ.நா. கணிப்பு – AanthaiReporter.Com

இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து வளர்ச்சி! – ஐ.நா. கணிப்பு

சர்வதேச அளவில் அடுத்த பத்தாண்டுகளில் ஏற்படக் கூடிய பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்பை புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகம் கடந்த வாரம் வெளியிட்டது. அதில், அமெரிக்கா, சீனாவை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுதோறும் 7.9 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கும் என்றும், உலகளவில் முதலிடம் வகிக்கும் என்றும் கூறப்பட்டிருந்த நிலையில் ‘இந்தாண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 7.2 சதவீதமாக உயரும்’ என, ஐ.நா., ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான, ஐ.நா.,வின் பொருளாதாரம் மற்றும் சமூக ஆணையம், ஆசிய பசுபிக் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஜி.எஸ்.டி., அமலாக்கம், வங்கிகளின் வாராக் கடன் சுமை, கார்ப்பரேட் நிறுவன செயல்பாடுகளில் மந்தநிலை போன்றவற்றால், 2017ல், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 6.6 சதவீதமாக சரிவடைந்தது. இது, 2016ல், 7.1 சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியா பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் அறிகுறி தென்பட்டது. கார்ப்பரேட் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு மாறி வருகின்றன. அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கான அரசின் ஒதுக்கீடு அதிகரித்துள்ளது. வங்கிகள், வாராக் கடனை குறைத்து நிதிநிலையை உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதுபோன்ற காரணங்களால் இந்திய பொருளாதாரம், இந்தாண்டு, 7. 2 சதவீதம்; அடுத்த ஆண்டு, 7.4 சதவீதம் என்ற அளவில் உயரும்.வளர்ந்து வரும், ஆசிய – பசிபிக் நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி, 2017ல், 5.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, 2016ல், 5.4 சதவீதமாக இருந்தது.

இந்தாண்டு சீனாவின் பொருளாதார வளர்ச்சி மிதமான அளவிற்கே இருக்கும். இந்த தாக்கத்தை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மீட்சியும், இதர நாடுகளின் நிலையான வளர்ச்சியும் ஈடு செய்யும். அதனால் இந்தாண்டு ஆசிய பசிபிக் நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீத அளவிற்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.