நம் நாட்டில் வரலாறு காணாத அளவில் தூயநீருக்கு தட்டுப்பாடு! – AanthaiReporter.Com

நம் நாட்டில் வரலாறு காணாத அளவில் தூயநீருக்கு தட்டுப்பாடு!

இந்தியாவில் சுமார் 60 கோடி மக்கள் நீர் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றனர். ஆண்டுக்கு 2 லட்சம் பேர் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் இறக்கின்றனர். இந்தியாவில் நீர் பற்றாக்குறை மிக மோசமான வகையில் அதிகரித்து வருகிறது.2030-ம் ஆண்டில் தண்ணீர் தேவை, தண்ணீர் இருப்பை விட மூன்று மடங்காக அதிகரிக்கும் என அண்மையில் நிதி ஆயோக் தெரிவித்திருந்த நிலையில் நம் நாட்டில் வரலாறு காணாத அளவில் தூயநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அண்மையில் ஐ.நா அறிக்கை ஒன்றின் தகவல்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4,600 கன கிலோ மீட்டர் நீரை மனிதர்கள் பயன்படுத்துகின்றனர். இதில் 70% விவசாயம், 20% தொழில் மற்றும் 10% குடும்பங்களுக்குச் செல்கிறது என்று அறிக்கை தெளிவாக சொல்கிறது. உலகத்தின் தண்ணீர் தேவை கடந்த 100 ஆண்டுகளில் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் 1 சதவிகிதம் என்ற வீதத்தில் தண்ணீர் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது உலக அளவில் 7.7 பில்லியனில் இருக்கும் மக்கள்தொகை 2050-ம் ஆண்டில் 9.4 முதல் 10.2 பில்லியன் வரை அதிகரிக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது முன்னரே வெளியான தகவல்தான்.

இதனிடையே உலக அளவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றின் முடிவில் இந்தியாவில் 19.33% மக்களுக்கு தூய்மையான நீர் கிடைப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பி யாவில் 7.17%மும் , நைஜீரியாவில் 7.05%மும், சீனாவில் 6.82% மக்களுக்கும் தூய நீர் கிடைப்ப தில்லை என்று ஆய்வில் கூறப்படுகிறது. மேலும் காங்கோ நாட்டில் நன்னீர் பற்றாக்குறை 5.55%வும் இந்தோனேஷியாவில் 3.2%வும் தான்சானியாவில் 3.16%வும் இருக்கிறது. உகாண்டாவில் 2.82% மக்களும், பாகிஸ்தானில் 2.56% மக்களும் கென்யாவில் 2.27% மக்களும் தூய நீர் கிடைக்க பெறாமல் இருப்பதாக ஆய்வரிக்கை தெரிவிக்கிறது.

தூய நீர் பற்றாக்குறை நிலவும் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2020-ம் ஆண்டுக்குள் 21 முக்கிய நகரங்களின் நிலத்தடி நீர் தீர்ந்துவிடும். இதனால் 10 கோடி மக்கள் பாதிக்கப்படுவர் என்று கூட கடந்த மாதம் ஒரு ரிப்போர்ட் வெளியாகி இருந்தது.

ஆனாலும் இந்தியா, தன் 40 சதவீத தண்ணீர் தேவைக்காக, நிலத்தடி நீரை நம்பி இருக்கிறது. அது வும் குறிப்பாக, டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் 100 சதவீதமும், தமிழ்நாடு, குஜராத் மற்றும் கர்நாடகா 70 சதவீதமும் தம் தேவைக்காக நிலத்தடி நீரை நம்பி இருக்கிறது. இது தான் படுமோசமாக நிலத்தடி நீர் குறைந்து போக காரணமாக இருக்கிறது. முன்பே, தமிழகத்தில் 95 சதவீத கிணறுகள் வற்றிவிட்டன. மிச்சம் இருக்கும் கிணறுகளில் ஆண்டுக்கு 5 அடி வேகத்தில் தண்ணீர் குறைந்து வருகிறது. அத்துடன் நீர்நிலைகள் மாசடைந்து வருவதும் நீர் ஆதாரத்தை பெருக்க சிறப்பு திட்டங்கள் வகுக்கப்படாததுமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.