இந்தியா போருக்கு செல்லாமலே வருடத்திற்கு 1600 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு! – AanthaiReporter.Com

இந்தியா போருக்கு செல்லாமலே வருடத்திற்கு 1600 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

ராணுவ வீரர்கள் மற்றும் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் வரிசையில் இந்தியா உலகிலேயே மூன்றாவது இடத்தை பெறுகிறது. ஆனால், ஒட்டுமொத்த கணக்கீடுகளில் 4வது இடத்தை பெறுகிறது. கடந்த ஆண்டு வெளியான தகவல் படி இந்தியாவிடம் 13,25,000 ராணுவ வீரர்கள், 6,464 பீரங்கிகள், 1,905 போர் விமானங்கள், 15 நீர் மூழ்கி போர்க்கப்பல்கள், 2 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன. இந்நிலையில் இந்தியா போருக்கு செல்லாமலே வருடத்திற்கு 1600 ராணுவ வீரர்கள் உயிரிழக்கின்றனர் என்றும்  ராணுவ வீரர்கள் அதிகளவு உயிரிழப்பிற்கு காரணம் சாலை விபத்து மற்றும் தற்கொலையாக உள்ளது எனவு தகவல் வெளியாகி உள்ளது. எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறிய தாக்குதல் மற்றும் பயங்கரவாதிகளுடனான சண்டையில் நேரிடும் உயிரிழப்பைவிட இது அதிகமாக உள்ளது. இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து 6,500 பேரை இழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது..

தற்போது இந்திய ராணுவத்தில் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் என மொத்தம் 13 லட்சத்து 49 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர். அவர்களில் ராணுவத்தில் 11 லட்சத்து 32 வீரர்களும், 41 ஆயிரம் அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர். விமானப்படையில் 12 ஆயிரம் அதிகாரிகளும், 1 லட்சத்து 3 ஆயிரம் வீரர்களும், கடற்படையில் 9 ஆயிரம் அதிகாரிகளும், 52 ஆயிரம் வீரர்களும் உள்ளனர்.

இறுதியாக 1999-ம் ஆண்டில் கார்கில் போர் நடைபெற்றது. அதன்பின்னர் போர் எதுவும் நடைபெறவில்லை. இருந்தாலும் வருடத்துக்கு 1600 ராணுவ வீரர்கள் உயிரிழந்து வருகிறார்கள். விபத்துக்கள் மூலமும், தற்கொலை மற்றும் ராணுவ வீரர்களுக்குள் ஏற்படும் மோதல் போன்றவற்றினால் வீரர்கள் உயிரிழக்கிறார்கள். இதுதவிர காஷ்மீர் எல்லைக் கோடு கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்துடன் நடைபெறும் சண்டை மற்றும் ஊடுருவும் தீவிரவாதிகளுடன் ஏற்படும் மோதலிலும் உயிரிழக்கின்றனர். விபத்துக்களில் 350 வீரர்களும், தற்கொலை மூலம் 120 பேரும் பலியாகின்றனர்.

இந்திய ராணுவத்தில் அதிக கட்டுப்பாடுகள், குடும்ப பிரச்சினைகள், வேலைப்பளு போன்றவற்றால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக தற்கொலைகள் நடைபெறுகின்றன. இதன்மூலம் உலகிலேயே இந்திய ராணுவத்தில் தான் அதிக அளவில் வீரர்கள் தற்கொலை செய்கின்றனர் என்ற நிலை உள்ளது. உடல் ரீதியாக ஏற்படும் காயங்களால் கடந்த உயிரிழப்பு அதிகம் ஏற்படுகிறது. அது போர்க் காலங்களில் ஏற்படும் உயிரிழப்பைவிட 12 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் 1480 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.

எல்லை தாண்டும் பயங்கரவாதிகளுடன் மோதல், பாகிஸ்தான் வீரர்களின் தாக்குதல் உள்ளிட்ட பலத்த காயங்களால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இது குறித்து ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பேசுகையில் இதுபோன்ற உடல் காயங்களால் வருடந்தோறும் 700 முதல் 800 வீரர்களை நாம் இழந்து வருகிறோம் என வருத்தம் தெரிவித்தார் என தகவல்கள் தெரிவித்து உள்ளன. இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படவேண்டும், இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதன்முறையாக 1947-48ல் ஆண்டு ஜம்மு – காஷ்மீரை மீட்க போர் நடந்தது. அப்போது 1,104 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 1962-ல் நடந்த சீன போரில் 3,250 பேரும், 1965-ல் நடந்த பாகிஸ்தான் போரில் 3,264 பேரும் உயிரிழந்தனர். 1971-ம் ஆண்டு வங்காள தேச விடுதலைக்காக நடந்த போரில் 3,843 பேரும், 1987-ல் இலங்கை சென்ற அமைதிப்படை வீரர்கள் விடுதலைப்புலிகளுடன் நடத்திய சண்டையில் 1,157 பேரும், இறுதியாக 1999-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் 522 பேரும் வீரமரணம் அடைந்தனர் என்று தெரிய வந்துள்ளது.