கந்தக வாயுவை அதிக அளவில் வெளியிடும் நாடு இந்தியா!

கந்தக வாயுவை அதிக அளவில் வெளியிடும் நாடு இந்தியா!

ஒவ்வொரு மனிதனும் ஆரோகியமாக வாழ அடிப்படையானது காற்று. அதிலும் சுத்தமான காற்றை சுவாசிக்கத் தான் நாம் எல்லோரும் விரும்புவோம். ஆனால் இன்றைய நிலையில் நாம் சுவாசிப்பது சுத்தமான காற்றா? என்று கேட்டல் இல்லை என்பதை எல்லோரும் கோரஸாக சொல்வார்கள். பெருகிவரும் வாகனங்கள், தொழிற்சாலைகள், எரிபொருள் பயன்பாடுகள் என இந்தியாவே தற்போது குப்பையாக மாறிக் கொண்டிருக்கிறது. அதுவும் காற்று மாசுபாட்டால் இந்தியர்களின் ஆயுட்காலமே குறைந்துக் கொண்டிருக்கிறது என்ற புள்ளிவிபரங்கள் நம்மை ஏற்கெனவே அச்சுறுத்துகின்றன. இவைகளால் நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா என காற்று மாசுபாட்டால் ஏற்படக் கூடிய நோய்கள் ஏராளம். இவற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டா லும் அதுவும் பெரிதாக வெற்றி அடைவதில்லை. அரை கிலோமீட்டர் தொலைவுக்கே வண்டியை எடுத்துச் செல்லும் நாம் எப்படி மாசுபாட்டை குறைக்கப்போகிறோம் என்றும் நாட்டின் தலைநகரான டெல்லியில் நாளுக்கு நாள் பீதியை கிளப்பி வரும் காற்று மாசுவை குறைக்க ராணு வ உதவையை நாடும் போக்கே நிலவுகிறது. இந்நிலையில்தான் காற்று மாசுபட முக்கிய காரணமாக விளங்கும் சல்பர் டை ஆக்சைட்-ஐ உலக அளவில் அதிகமாக வெளியிடும் நாடு இந்தியா என்று சமீபத்திய ஓர் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள யூனிவர்சிட்டி ஆஃப் மேரிலாண்ட் ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், சல்பர் டை ஆக்சைட் அதிக அளவில் வெளிப்படுத்தும் நாடுகள் குறித்த ஆய்வினை நடத்தினர். இந்த ஆய்வு 2007க்கு பின்னர் தற்போது நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில் இந்தியா மட்டுமே காற்றை மாசுபடுத்தும் சல்பர் டை ஆக்சைட்-ஐ அதிக அளவில் வெளியிடுவதாக தெரியவந்துள்ளது. சல்பர் டை ஆக்சைட் காரணமாக அமில மழை, காற்று மாசு ஆகியவை ஏற்படுகின்றன. இதன் காரணமாக மனிதர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது.

அதாவது மின்சாரத்தை உற்பத்தி செய்ய நிலக்கரியை எரிக்கும்போது அதிக அளவிலான சல்பர் டை ஆக்சைட் வெளியாகின்றன. நிலக்கரியை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முன்னணியில் உள்ளது. எனினும் சீனா காற்று மாசுக்கு முக்கிய காரணமான சல்பர் டை ஆக்சைட்-ஐ கட்டுக்குள் கொண்டுவர சீனா பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. இதன் காரணமாக சீனாவில் சல்பர் டை ஆக்சைட் அளவு 75 சதவீதம் குறைந்துள்ளது. நிலக்கரி உபயோகம் 50 சதவீதம் உயர்ந்தபோதிலும் இந்த சல்பர் டை ஆக்சைட் அளவு குறைந்துள்ளது என நாசாவின் கோட்டார்ட் ஸ்பேஸ் ஃபிளைட் செண்டர் ஆராய்ச்சியாளர் லீ தெரிவித்தார்.

அதே சமயம் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் எடுக்கப்பட்ட ஆய்வில் சல்பர் டை ஆக்சைட் அளவு 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனை குறைக்க தேவையான நடவடிக்கைகளை சீனா போன்று இந்தியா எடுக்கவில்லை. மின்சாரம் தேவை அதிகமுள்ள இந்தியாவில் மேலும் இதன் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதை மத்திய அரசு கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டியது அவசியம்..

error: Content is protected !!