பெண்கள் மார்பக அறுவைச் சிகிக்சைக்குத் தடை! – பிரான்ஸ் அறிவிப்பு! – AanthaiReporter.Com

பெண்கள் மார்பக அறுவைச் சிகிக்சைக்குத் தடை! – பிரான்ஸ் அறிவிப்பு!

சர்வதேச அளவில், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் அமெரிக்கா, சீனா மற்றும்  இந்தியா முதல் மூன்று இடங்களில் உள்ளது தெரியவந்துள்ளது. இதுவரை 50 வயதுக்கு மேற்பட்டோர் மத்தியில் அதிகமாகக் காணப்பட்ட இந்நோய், தற்போது 30 வயதிலேயே வருகிறது. இந்நிலையில் மார்பக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் பெண்களுக்கு ‘அனபிளாஸ்டிக் லார்ஜ் செல் லிம்போமா’ (ஏ.எல்.சி.எல்) என்ற புற்றுநோய் தாக்க வாய்ப்புள்ளதால், மார்பக அறுவை சிகிச்சைக்கு பிரான்ஸ் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க உள்ள பெண்கள் தற்போதைய காலக் கட்டத்தில் தங்களது மார்பக அழகிற்காக, அதன் அளவை குறைக்கவும், அதிகரிக்கவும் மார்பக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வது தற்போது பிரபலமாகி வருகிறது. பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் செயற்கை மார்பகம் பொருத்திக் கொள்வதால் புற்றுநோய் வருகிறது என்று பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

அதாவது, மார்பக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் பெண்களுக்கு மார்பகத்தின் அருகே நீர்கட்டிகள் போன்று ஏற்படுகிறது. அந்த நீர்கட்டிகளை நீக்க, அவர்கள் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் போது, ‘அனபிளாஸ்டிக் லார்ஜ் செல் லிம்போமா’ (ஏ.எல்.சி.எல்) என்ற புற்று நோய் தாக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், மார்பக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதனால் புற்றுநோய் ஏற்பட்டு 9 பெண்கள் மரணமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, பிரான்ஸ் நாடு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தற்போது அந்நாட்டில் பெண்கள் மார்பக மாற்று சிகிச்சை செய்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரான்ஸ் நாட்டின் தேசிய புற்றுநோய் சிகிச்சை நிறுவனம், பிரான்ஸில் 53 பேர் இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

அதே நேரத்தில் இதற்கு முன்னதாக செயற்கை மார்பகம் பொருத்திய பெண்கள் அதனை நீக்க தேவையில்லை, இனிமேல் எந்த பெண்களும் இதனால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்க்து.