பிடிச்சிட்டாங்கய்யா.. பிஜேபி கர்நாடகாவிலும் ஆட்சியைப் பிடிச்சிட்டாங்கய்யா! – AanthaiReporter.Com

பிடிச்சிட்டாங்கய்யா.. பிஜேபி கர்நாடகாவிலும் ஆட்சியைப் பிடிச்சிட்டாங்கய்யா!

கர்நாடக மாநிலத்தில் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது . சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தனிப் பெரும்பான்மையை நோக்கி பாஜக நகர்ந்து வருவதால், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

நம்ம தமிழகத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் இருந்தாலும் பங்காளி மனப்பான்மையுடன் இருக்கும் கர்நாடகாவில் கடந்த 2006-ம் ஆண்டு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் சேர்ந்து பாஜக கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்து இருந்தது. 2006 பிப்ரவரி 3 முதல் 2007 அக்டோபர் வரை குமாரசாமி முதல்வராக பதவி வகித்தார். அதன்பின் இரு கட்சிகளுக்கும் இடையே பிளவு ஏற்பட்ட நிலையில், ஒரு மாதம் ஜனாதிபதி ஆட்சி இருந்தது. அதன்பின், மீண்டும் எடியூரப்பா தலைமையில் 2007 நவம்பர் 12 முதல் 19-ம் தேதி வரை 7 நாட்கள் மட்டுமே பாஜக ஆட்சி அமைத்து அத்துடன் கலைந்து 5 மாதங்கள் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்தது.

அதை அடுத்து நடத்தப்பட்ட தேர்தலில் பாஜக வெற்றி பெற்று எடியூரப்பா முதல்வராகினார். அவர் 2008 மே 30 முதல் 2011 ஜூன் 11 வரை முதல்வராகப் பதவி வகித்தார். அதன் பின் அவர் மீது சுரங்க ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப் பட்டதால், அவர் பதவி விலகினார். அதன்பின் சதானந்தகவுடா ஒரு ஆண்டும், ஜெகதீஸ் ஷெட்டர் ஒரு வருஷமும் முதல்வராக இருந்தனர். அதன் பின்னர் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. இந்நிலையில் அம் மாநிலத்தில் உள்ள 222 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிந்து, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதே சமயம் எதிர்க்கட்சியான பாஜக 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது.

காலை 11 மணி நிலவரப்படி பாஜக 121 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 59 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 40 இடங்களிலும் முன்னிலைபெற்றுள்ளன. முதல்வர் சித்தராமையா பதாமி தொகுதியிலும் 300 வாக்குகள் வித்தியாசத்திலும் சாமுண்டீஸ்வரி தொகுதியிலும் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத் திலும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். மேலும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்டி தேவகவுடா கட்சி மைசூரு மண்டலத்தில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. குமாரசாமி தான் போட்டியிட்ட ராமநகரா, சன்னபட்னா தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார்.

பாஜகவின் முதல்வர் வேட்பாளர் பி.எஸ்.எடியூரப்பா சிகாரிபுரா தொகுதியில் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார். இதையடுத்து மீண்டும் கர்நாடகா முதலமைச்சராகிறார் எடியூரப்பா. இந்த வெற்றியை அடுத்து தனது இல்லத்தில் வழிபாடு நடத்திய பா.ஜ.க முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா நிருபர்களிடம் பேசினார். அப்போது வரம 17-ம் தேதி பதவியேற்பு விழா நடக்கும் என்று தெரிவித்தார். பாஜக முதலமைச்சராக நாளை எடியூரப்பா பதவியேற்பு விழாவுக்காக கன்டீராவா ஸ்டேடியத்தை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா போன்ற தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தகவ்ல் வெளியாகி உள்ளது