இயேசு உயிர்தெழுந்தது குறித்து இளையராஜா பேசிய (சர்ச்சை) பேச்சு – வீடியோ! – AanthaiReporter.Com

இயேசு உயிர்தெழுந்தது குறித்து இளையராஜா பேசிய (சர்ச்சை) பேச்சு – வீடியோ!

இயேசு உயிர்தெழுந்த ஈஸ்டர் திருநாள் நெருங்கிக் கொண்டிருக்கிற வேளையில், கிறிஸ்த வர்களின் அடித்தளமான மத நம்பிக்கையான உயிர்த்தெழுதல் குறித்தும், அது நடக்கவில்லை என்று இளையராஜா பேசி இருப்பதை கண்டித்து, தி.நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜா வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று சிறுபான்மை மக்கள் நலக்கட்சி அறிவித்திருந்தது. இதனால், இளையராஜா வீட்டின் அருகே போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். திட்டமிட்டபடி சிறுபான்மை மக்கள் கட்சி தலைவர் சாம் ஏசுதாஸ் தலைமையில் 50க்கும் மேற்பட்ேடார் நேற்று இளையராஜா வீட்டை முற்றுகையிட வந்தனர்.

அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால், அவர்கள் இளையராஜாவை கைது செய்யும் வரை நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கூறி இளையராஜா வீட்டை நோக்கி சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சாம் ஏசுதாஸ் உட்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.  பின்னர் அனைவரையும் தி.நகர் சோமசுந்தரம் பூங்கா அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து மாலை விடுவிக்கப்பட்டனர்.

அதாவது அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமையகத்துக்குச் சமீபத்தில் வருகை தந்த இளையராஜா, அங்குப் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பேசிய போது, “உலகில் தோன்றிய ஞானிகளில் ரமண மகரிஷியைப் போல ஒருவர் கிடையாது. இயேசு உயிர்த்தெழுந்து வந்தார்கள் என்று சொல்வார்கள். அடிக்கடி ஆவணப் படங்கள் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அதில் இயேசு உயிர்த்தெழுந்து வந்தார் என்பது நிரூபணமாகவில்லை என்று சொல்லப்படுகிறது. உண்மையான உயிர்த்தெழுதல் நடந்தது ஒருவருக்குத்தான். 16 வயதில் ரமண மகரிஷிக்கு மட்டும் தான் உயிர்த்தெழுதல் நடந்துள்ளது”என்றார். இளையராஜாவின் இந்தப் பேச்சுதான் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இளையராஜாவின் இந்தப் பேச்சு கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைக் கொச்சைப்படுத்தி கிறிஸ்தவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக சிறுபான்மை மக்கள் நலக் கட்சி அறிவித்தது. மேலும் தன் பேச்சுக்கு இளையராஜா மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் வலியுறுத்திய படி உள்ளது. இதையடுத்து இளையராஜாவின் வீட்டுக்குக் காவல்துறைப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.