என் கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா! – இளையராஜா 75 தொடக்க விழாவில் விஷால்!

என் கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா! – இளையராஜா 75 தொடக்க விழாவில் விஷால்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நிதி திரட்டும் விதமாகவும், இசையமைப்பாளர் இளையராஜாவின் திரையுலக சாதனைகளைப் போற்றும் வகையிலும் ’இளையராஜா 75‘ என்ற பெயரில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரமாண்டமான கலைவிழா நடக்கிறது! இதற்கான ஏற்பாடுகளை நடிகர் விஷால் தலைமையின்கீழ் இருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப் பாளர் சங்கம் செய்துள்ளது. இந்த விழாவையொட்டி நேற்றும், இன்றும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுள்ளன. நேற்று மாலை கோலாகலமாக தொடங்கிய இவ்விழாவை ஆளுநர் பன்வாரி லால் புரோகித் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் இசையமைப் பாளர் ஏ.ஆர்.ரகுமான் உட்பட தமிழ் திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்களும், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள பட உலகைச் சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகளும் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசும்போது, ‘இளையராஜா 75’ விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. இளையராஜாவின் இசை பயணம் என்றும் நிலைத்திருக்கும். எத்தனை இடையூறுகள் வந்தாலும், அதையெல்லாம் தாண்டி தனது லட்சியத்தில் உறுதியாக இருந்ததால் தான் உயரத்தில் இருக்கிறார். 1000 படங்களில் 7000 பாடல்களை இசையமைத்து, 20,000 கச்சேரிகளை நடத்திய அவரை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. பத்மவிபூஷன் இளையராஜா விற்கு இப்படி ஒரு விழா எடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கௌரவப்படுத்தி இருக்கிறது. இந்நிகழ்ச்சி பல வருடங்களுக்கு எல்லோர் மனதிலும் நிலைத்திருக்கும்” என்றார்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேசும்போது, “எல்லா நாட்டிலும் ஆள்வதற்கு ஒரு ராஜா இருப்பார். ஆனால், பாடல் என்று வரும்போது ஆள்வதற்கு ஒரே ராஜா தான். அது ‘இசைஞானி’ இளையராஜா தான். அவரின் இசை இல்லையென்றால், நீண்ட தூர பயணம் என்றோ அழிந்து இருக்கும். ஒரு கார் டிரைவர் பெட்ரோல் இருக்கிறதா என்று பார்ப்பதற்கு முன் இளையராஜா பாடல்கள் கொண்ட கேசட் இருக்கிறதா என்று தான் முதலில் பார்ப்பார். காஷ்மீர் வரைக்கும் என்றால் கூட அவருடைய பாடல்கள் தான் பயணத்தை இனிமையாக்கும்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ‘இளையராஜா 75’ விழாவை நடத்துவதில் பெருமை மட்டுமல்ல, கடமைப் பட்டிருக்கிறோம். இளையராஜா போன்ற ஒரு மாமேதை பிறக்கவும் முடியாது, இப்படிப்பட்ட ஒரு சாதனையைப் படைக்கவும் முடியாது. தந்தைக்காக மகன் கணக்கில் லாமல் செலவு செய்வது தப்பில்லை. அதைப் பார்த்து பக்கத்து வீட்டுக்காரர்கள் தப்பு என்று சொல்வதும் சரியல்ல. ஏனென்றால், தந்தைக்கு செய்வது கடமை. அதுபோல், இளையராஜா விற்காக இந்த விழா நடத்துவதில் எந்த தப்புமில்லை.

‘திருவிளையாடல்’ படத்தில் இடம் பெறும் வசனம் தான் தோன்றுகிறது. ‘சில பேர் பாராட்டியே பேர் வாங்குவார்கள், சிலர் குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்குவார்கள்’ என்ற வசனத்திற்கேற்ப நாங்கள் இளையராஜாவை பாராட்டி வரலாற்றில் இடம்பெறுவோம். அதேபோல், இந்நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்று எதிர்த்தவர்களும் இடம் பெறுவார்கள்.

இதெல்லாம் நடக்குமென்று தெரிந்து தான் அன்றே இளையராஜா இசையமைத்திருக்கிறார் ‘என் கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா, வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா’ என்று. இது புரிய வேண்டியவர்களுக்கு புரியும். தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவிற்கே மாணிக்கமாக விளங்குபவர் இளையராஜா. நீங்கள் இந்த இரண்டு நாளும் ஒரு சிறந்த இசை விருந்தை சுவைக்கப் போகிறீர்கள்.

இந்நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் சன் டிவிக்கும், கலாநிதி மாறனுக்கும் நன்றி. எத்தனையோ ஆளுநர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், பன்வாரிலால் புரோஹித் மிகச் சிறந்தவர். அவரைப் பற்றி தவறான வதந்திகளை செய்திதாள்களில் படிக்கிறோம். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் கடமைகளைத் தவறாமல் செய்து வருகிறார். அவர் எல்லோருக்கும் முன்மாதிரியாக விளங்குகிறார். இவ்விழாவிற்கு வருகை தந்து, விழாவை துவக்கி வைத்த ஆளுநருக்கு நன்றி” என்றார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, “என்னுடைய தலைமை ஆசிரியர் இளையராஜா. அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். பொதுவாக இசையமைப்பாளர்கள் என்றாலே கெட்ட பழக்கங்கள் இருக்கும். ஆனால், இளையராஜாவை பார்த்து இப்படியும் இருக்க முடியும் என்று தெரிந்துக் கொண்டேன். எங்கள் இருவருக்கும் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் இசை தான். நான் விருது பெற்றதும் இளையராஜாவின் பாராட்டு தான் மகிழ்ச்சியளித்தது. ஏனென்றால், மேதைகளிடம் இருந்து எளிதில் பாராட்டுக்கள் வராது. அப்படி வந்தால் அது உண்மையான திறமை இருந்தால் தான் வரும். அவரிடம் இருந்து பாராட்டு வந்தது மகிழ்ச்சி” என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இளையராஜா பேசும்போது, ஏ.ஆர்.ரஹ்மான் அவர் அப்பாவிடம் இருந்ததை விட என்னுடன் இருந்த நேரம் தான் அதிகம். கிட்டத்தட்ட 500 படங்களில் என்னுடன் பணியாற்றியிருக்கிறார். என்றார். மேலும், ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்க இளையராஜா பாடினார் என்றார்.

error: Content is protected !!