இலை – திரைப்பட விமர்சனம்!

இலை – திரைப்பட விமர்சனம்!

நவீனமயமாகி விட்ட இன்றைய காலக் கட்டத்தில் பெண்கள் இல்லாத துறையே இல்லை எனலாம். ஆனால் கடந்த நாட்களில் தலைமுறை தலைமுறையாக அடிமைகளாக நடத்தப்பட்ட நம் நாட்டுப் பெண்கள் எப்படி இந்த அளவிற்கு உயர்ந்தனர் என்பதை ஆராய்ந்து பார்த்தால் ‘கல்வியே’ என புலப்படும். ‘கல்விக்கண்’ என்று ஆன்றோரால் அழைக்கப்படும் கல்வியே நம் மக்களின் கண்களைத் திறந்தது எனக் கூறலாம். நம் தேசத்தின் பிதா என அழைக்கப்படும் மகாத்மா காந்தி இதனை நன்கு உணர்ந்ததினால் தான் “ஒரு ஆண் மகன் கல்வி கற்றால் அவனுக்கு மட்டுமே நன்மை பயக்கும். ஆனால் குடும்பத்திலுள்ள ஒரு பெண் கல்வி கற்றால் முழுக் குடும்பமும் நன்மை பெற்றுக்கொள்ளுகிறது. சமுதாயத்திலுள்ள அனைத்து பெண்களும் கல்வி கற்றுக்கொள்ளும் போது, சமுதாயம் முழுவதும் நன்மை பெறுகிறது; அதிநிமித்தம் தேசம் வளர்ச்சி அடைகிறது” எனக் கூறினார். ஆனால் அவர் சொல்லி விட்டாரே தவிர கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கல்வி அறிவை பெற பெண்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. அப்படி ஒரு பெண் தன் கல்வியில் சாதிக்கத் தடைகளைத் தாண்டி எவ்வளவு போராட்டங்களைச் சந்திக்கிறாள் என்பதைச் சொல்லும் படம் தான் “இலை’.

ilai apr 20

அதாவது இது 1991ல் நடக்கும் கதை. பெண்களுக்கு படிப்பு தேவையில்லை என்று பகிங்கரமாக பேசிக் கொள்ளும் ஒரு குக் கிராமத்தில் பிறந்த ஹீரோயின் இலை என்ற நாமகரணம் கொண்ட சுவாதி நாராயணன், தான் நன்றாக படித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா மாதிரி சமூகத்தில் உயர்ந்து சமூகத்தில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் இருக்கிறார், அவரது ஆர்வத்திற்கும் முயற்சிக்கும் அவர் அப்பா முழு ஆதரவு கொடுக்கிறார். அதே சமயம் அதே ஊரில் அதே பள்ளியில் படிக்கும் ஊர் பண்ணையர் மகள் சித்ராவுக்கு தன்னை விட நன்றாக படிக்கும் இலை மீது பொறாமை ஏற்படுகிறது. கூடவே, இலையில் முறை மாமன், இலை பெரிய படிப்பு படித்து விட்டால் தனக்கு கிடைக்காமல் போய்விடுவாளோ என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்.கூடவே இலையில் அம்மா வேறு படிப்பை வேப்பங்காயாக கருதுபவர்.

இப்படி இலையின் படிப்பு ஆர்வத்திற்கு எதிராக உருவாகும் எதிரிகள் சிலர் ஒன்றிணைந்து அவரது அப்பாவை தாக்கி வீழ்த்துவதன் மூலம் இலையை 10 வகுப்பு இறுதி தேர்வுக்கு போக முடியாதபடி செய்ய திட்டமிடுகிறார்கள். ஆனால் தன்னுடைய அப்பாவின் ஆசை தன்னுடைய படிப்பு தான் என்று நினைக்கும் இலை, 10 வகுப்பின் இறுதி தேர்வில் இறுதி பாடத்தை எழுத எதிர் கொள்ளும் பல்வேறு போராட்டங்களும் அதில் வெற்றி பெற்று தேர்வு எழுதினாரா? ரிசல்ட் என்ன? என்பதே இப்படத்தின் கதை.

இலை என்ற பத்தாம் வகுப்பு மாணவி கதாபாத்திரத்தில் நடித்துள்ள டாக்டர் சுவாதி நாராயணன், கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருப்பதுடன் அவரது நடிப்பு அந்த கதாபாத்திரத்தை ரசிகர்களிடம் எளிதாக கொண்டு சேர்க்கிறது. தனது படிப்புக்கு ஆதரவாக இருக்கும் அப்பா உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் இருக்க, அதே சமயம் அவரது ஆசையை நிறைவேற்ற தேர்வு எழுத செல்ல புறப்படும் போது, அவருக்கு ஏற்படும் தடங்கல்களை அவர் எதிர்கொள்வது, அந்த காட்சிகளில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு சில இடங்களில் சலிப்பைத் தந்தாலும் பல இடங்களில் பதட்டத்தை ஏற்படுத்துவதில் வெற்ரி அடைந்துள்ளார்.

இலையின் முறை மாமனாக நடித்துள்ள சுஜித் ஸ்டெபனோஸ், தந்தையாக நடித்துள்ள கிங் மோகன், அம்மாவாக நடித்துள்ள ஸ்ரீதேவி அனில் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் புதுமுகங்களாக இருந்தாலும், அவர்களது நடிப்பு யுதார்தமாக அமைந்துள்ளது.
கதைக்கு ஏற்ப அமைந்துள்ள இசையமைப்பாளர் விஷ்னு வி.திவாகரனின் பாடல்களும், பின்னணி இசையும் நம்மை வருடிச் செல்வது போல, குறிப்பிட்ட சில லொக்கேஷன்களையே திரும்ப திரும்ப காட்ட நேர்தாலும் கேமராமேன் சந்தோஷ் அஞ்சால் அட்டகாசம் செய்திருக்கிறார்..

சினிமா என்பது பல் கோடி முதலீட்டில் கவர்ச்சியும், களேபரமுமாக படம் எடுத்து பாழாய் போய் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் இது போன்ற சமூக நடப்புகளை ஆழமாக வெளிச்சமிட்டு காட்ட வந்துள்ள இலையின் போக்கில் ஆங்காங்கே கொஞ்சம் சலிப்பு வந்தாலும் முன்னரே சொன்னது போல பெண் கல்விக்கு ஏற்பட்ட இடையூறுகளை தெரிந்து கொள்ள ஒவ்வொருவரும் அவசியம் இப்படத்தைப் பார்க்க வேண்டும்! முடிந்தால் தயாரிப்பு நிர்வாகம் பள்ளி மாணவிகளுக்கு சலுகை விலையில் இப்படத்தை போட்டு காட்டுவதன் மூலம் இன்னொரு சமூகத்தை புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்!

error: Content is protected !!