சிலைக் கடத்தல் விவகாரம்: பொன்.மாணிக்கவேல்தான் விசாரிக்கோணும் – ஐகோர்ட் ஆர்டர்! – AanthaiReporter.Com

சிலைக் கடத்தல் விவகாரம்: பொன்.மாணிக்கவேல்தான் விசாரிக்கோணும் – ஐகோர்ட் ஆர்டர்!

சில பல விஐபி-கள் தொடர்புடன் நடந்த சிலைக் கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சிபிஐக்கு மாற்றத் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்  இந்த தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன்மணிக்கவேல் தலைமை யில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை அமைத்து, 2017ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்..

முன்னதாக கடத்தப்பட்ட சிலைகள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருப்பதால் அவற்றை மீட்க வசதியாக சிபிஐக்கு நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் மாற்று வதாகத் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதைதொடர்ந்து, சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றிக் கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், “அரசியல்வாதிகள், முக்கிய நபர்கள், உயர் அதிகாரிகளைக் காப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதற்குத் தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இத்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, தமிழக அரசின் இந்த அரசாணைக்குக் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இந்நிலையில் சிபிஐ அமைப்பும் சிலைக் கடத்தல் வழக்குகளை தங்களால் விசாரிக்க இயலாது என இந்த வழக்கில் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று வழங்கிய தீர்ப்பின் போது, அரசாணை என்ற பெயரில் பல வர்ணங்களைப் பூசி தமிழக அரசு உண்மையை மறைக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், ஐஜி பொன்மாணிக்கவேல் பணி ஓய்வு பெற்றாலும், சிலைக் கடத்தல் வழக்குக ளை அவரே விசாரிக்கும் வகையில் ஒரு வருடத்திற்கு சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக அவர் நியமிக்கப்படுவதாகத் தீர்ப்பளித்தனர்.

“ஐஜி பொன்மாணிக்கவேலே சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் குழுவிற்கு தலைவராகச் செயல்படுவார். அவருடன் இந்த வழக்குகளில் பணியாற்றிய அதிகாரிகளை அரசு மாற்றக் கூடாது. ஐஜி பொன்மாணிக்கவேல் விசாரணைக்கு சிபிஐ போதுமான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட வேண்டும். சிலைக் கடத்தல் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தமிழக அரசிடம் தாக்கல் செய்ய வேண்டாம். நீதிமன்றில் தாக்கல் செய்யலாம்” என்றும் தங்களுடைய தீர்ப்பில் தெரிவித்துள்ளனர் நீதிபதிகள்.

அது சரி யாரிந்த பொன்.மாணிக்கவேல் என்று கேட்பவர்களுக்கான பதில் இதோ:

கடந்த 1989ஆம் ஆண்டு டி.எஸ்.பி.யாக தமிழக காவல் துறையில் சேர்ந்த பொன் மாணிக்கவேல் ராமேசுவரத்தில் பணியைத் தொடங்கினார். தமிழக காவல் துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ள பொன் மாணிக்கவேல், தான் பணிபுரிந்த இடங்களில் குற்ற வழக்குகளின் விசாரணையில் தனி முத்திரை பதித்து வந்தார். இதையடுத்து அவர், கடந்த 2012ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார்.

அந்த நாள் முதல் இது வரை தமிழக கோயில்களில் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 201 உலோக சிலைகள், 653 கற்சிலைகள், 80 மரச்சிலைகள், 212 ஓவியங்கள் உள்பட 1,146 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு விற்பனை செய்யப் பட்ட 17 சிலைகளை சர்வதேச போலீஸார் மூலம் பொன் மாணிக்கவேல் மீட்டு, தமிழகத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

கடந்த 1983ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு 2011ஆம் ஆண்டு வரை 28 ஆண்டுகளில் 175 கற்சிலைகள்,135 உலோகச் சிலைகள், 3 மரச்சிலைகளை மட்டுமே மீட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிலையை மாற்றி, 7 ஆண்டுகளில் 1,146 சிலைகளை மீட்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கும் தமிழக காவல் துறைக்கும் பெருமை சேர்த்துள்ளார் பொன் மாணிக்கவேல். சிலை கடத்தல் பிரிவில் உள்ள 29 போலீஸாரின் துணையுடன் கடந்த 7 ஆண்டுகளில் புதிதாக 45 வழக்குகளைப் பதிவு செய்து, 47 குற்றவாளிகளை பொன் மாணிக்கவேல் கைது செய்துள்ளார்.

ராஜராஜன் சோழன் சிலை: தஞ்சாவூர் பெரிய கோயிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ராஜராஜன் சோழன் சிலை உள்ளிட்ட பல்வேறு முக்கியமான சிலைகளையும் பொன் மாணிக்க வேல் தலைமையிலான போலீஸார் மீட்டது தமிழக மக்களிடம் மிகுந்த பாராட்டையும், தமிழக காவல் துறைக்குப் பெருமையையும் பெற்றுத் தந்தது. மேலும் ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தனியார் அருங்காட்சியகங்களில் இருக்கும் 8 சிலைகளை மீட்பதற்குரிய நடவடிக்கை ளை பொன் மாணிக்கவேல் மேற்கொண்டார்.

கலைப் பொருள்களை விற்பனை செய்வதாகக் கூறி, சிலை கடத்தலில் ஈடுபட்டு வந்த தீனதயாளன் உள்ளிட்ட சிலரை கடந்த 2016ஆம் ஆண்டு துணிவுடன் பொன்மாணிக்கவேல் கைது செய்தது தமிழகத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இதன் பின்னர், அருங்காட்சியகம் வைத்து இருப்பதாகவும், கலைப் பொருள்களை விற்பதாகவும் கூறி அரை நூற்றாண்டுகளாக கோயில் சிலைகளைத் திருடி விற்ற கும்பலை அடுத்தடுத்து கைது செய்தார். மேலும் சர்வதேச சிலை கடத்தல் கும்பலோடு, இங்குள்ள திருட்டுக் கும்பல் வைத்திருந்த ரகசிய தொடர்பை உடைத்து எறிந்து, முற்றிலுமாக அந்தக் கும்பலை பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.

வழக்கு விசாரணையில் மட்டுமன்றி, இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சிலை பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை பயன்படுத்துவதிலும், சட்ட நுணுக்கங்களை கையாளுவதிலும் பொன் மாணிக்கவேல் சிறந்து விளங்குபவர். அவரது திறமையை இன்றைய தலைமுறை காவல்துறை அதிகாரிகள் கற்றுக் கொள்ள வேண்டும் என தமிழக காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார்.