மதத்தலைவர் ஏதாவதொரு அரசியல் கட்சிக்கு ஓட்டு கேட்டால் 7 ஆண்டு ஜெயில்!- மசோதா தயார் – AanthaiReporter.Com

மதத்தலைவர் ஏதாவதொரு அரசியல் கட்சிக்கு ஓட்டு கேட்டால் 7 ஆண்டு ஜெயில்!- மசோதா தயார்

பார்லி.குளிர் கால கூட்டத் தொடர் இந்த மாதம் 15ம் தேதி துவங்குகிறது. இந்தகூட்டத் தொடரில் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் எம்.பி.. துஷ்யந்த் சவுதாலா தனிநபர் தீர்மானம் ஒன்றை கொண்டு வருகிறார்.

அதன்படி மத வழிபாட்டுத்தலங்கள் (தவறாக பயன்படுத்ததப்படுவதை தடுத்தல்) சட்டம் 1988ல் திருத்தம் கொண்டு வரவேண்டும். அரசியல் கட்சிகளின் துாண்டுதலின்பேரில் மதவழிபாட்டுத்தலங்கள் செயல்படுவதை தடுக்க வேண்டும். எந்தஒரு மத நிறுவனமும் அல்லது அதன் நிர்வாகி அல்லது மதத் தலைவர் யாரும் இந்த கட்சிக்குத்தான் அல்லது இந்த வேட்பாளருக்குத் தான் ஓட்டு போடவேண்டும் என்று கட்டாயப்படுத்தவோ வேண்டுகோள் வைக்கவோ கூடாது.

அதே போல எந்த ஒரு கட்சிக்கு சாதகமாக தேர்தலை புறக்கணிக்கும்படியும் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கக்கூடாது என்று 2015ல் கொண்டுவரப்பட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது. அதை மீறி மதத் தலைவர் செயல்பட்டால் 7ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க திருத்தம் கொண்டு வரவேண்டும். ஒரு லட்சம்முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க அதில்வகை செய்யப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்தத்தில் மதத்தில் அரசியல் கலக்கக்கூடாது என்பதே இந்தமசோதாவின்நோக்கமாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் எப்படி மதவிவகாரத்தில் தலையிடக்கூடாதோ…அதே போல மதவாதிகள் அரசியலில் நுழையக்கூடாது என்று துஷ்யந்த் கூறினார்.ஒரு எம்.பி. என்ற முறையில் இப்படி மசோதா கொண்டு வந்தாலும், அரசு அதை முன்மொழியாததால் பொதுவாக வெற்றி பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.