டாஸ்மாக்கில் ‘சரக்கு’ -க்கு எக்ஸ்ட்ரா வைச்சு வித்தா ஃபைன், ட்ரான்ஸ்பர்! – AanthaiReporter.Com

டாஸ்மாக்கில் ‘சரக்கு’ -க்கு எக்ஸ்ட்ரா வைச்சு வித்தா ஃபைன், ட்ரான்ஸ்பர்!

டாஸ்மாக் கடைகளில் மது வகைகளுக்கு விற்பனை விலையைவிட ஒரு ரூபாய் கூடுதலாக விற்றாலும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

அரசின் வருமானத்தில் முக்கிய அங்கம் வகிப்பது டாஸ்மாக் நிறுவனம். தமிழகம் முழுவதும் மதுபானம் விற்பனையில் ஈடுபட்டு வரும் இந்த அரசு நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் மதுக்கடைகள், பார்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.22 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் சாலை விபத்திற்கு மதுபானம் காரணம் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டு தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேலான கடைகள் மூடப்பட்டன. மேலும் டாஸ்மாக் மீது விற்பனை நேரமும் குறைக்கப்பட்டது. இதனால் மது விற்பனை குறைந்து வருவாயும் சரிந்தது. இதனை சரிகட்ட கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனைத்து மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டன.

பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் போன்ற உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை ரூ.40 வரை உயர்த்தப்பட்டது, மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதால் வருவாய் இழப்பு சரி செய்யப்பட்டது. இப்போது பீர் விலையை உயர்த்த டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அனைத்து பீர் வகைகளும் ரூ.10 விலை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட உள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விலை உயர்வு ஒரு புறம் இருந்தாலும் டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் கூடுதலாக ரூ.10 முதல் ரூ.20 வரை வசூலிப்பதை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று ‘குடி’மக்கள் கவலைப்படுகின்றனர். கம்ப்யூட்டர் பில் முறையை அறிமுகப்படுத்தினாலும் முறையாக பில் தருவதில்லை. எல்லாம் பெயரளவில்தான் உள்ளது. முறைகேட்டை தடுக்க எத்தனை நடவடிக்கை எடுத்தாலும் அதனையும் மீறி கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுகிறது. அதனை அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை என்று மது பிரியர்கள் மனம் குமுறுகிறார்கள். தற்போதைய தமிழகத்தில் குறைந்த குவார்ட்டர் அளவுள்ள மதுபானத்தின் குறைந்தபட்ச விலை ரூ.100. பீர் விலை ரூ.130 ஆக உள்ளது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் இந்த மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதில்லை. குவார்ட்டர் பாட்டில் ஒன்றுக்கு ரூ.5-ம், பீர் பாட்டிலுக்கு ரூ.10-ம் கடையிலிருக்கும் விற்பனையாளர்கள் கூடுதலாக வசூலிக்கிறார்கள்.

இதைப்பற்றி புகார்கள் எழுந்து வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் இதுசம்பந்தமாக வாக்குவாதங்கள் நிகழ்வதும் வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில், டாஸ்மாக் கடையில் எம்.ஆர்.பி விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் அபராதம் விதிக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எம்.ஆர்.பி விலைக்கு மேல் ரூ.1 கூடுதலாக விற்றாலும் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. எம்.ஆர்.பி விலைக்கு மேல் ரூ.10 கூடுதலாக விற்றால் டாஸ்மாக் கடை விற்பனையாளர் பணியிட மாற்றம் செய்யப்படுவார் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் ரூபாய்க்குக் குறைவான வருவாய் உள்ள டாஸ்மாக் கடைக்கு பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்படுவர் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் இதுதொடர்பாக, புகார் தெரிவிக்க வேண்டும் என்றால், அந்தந்த மாவட்டங்களில் உள்ள, மாவட்ட மேலாளர் அலுவலகம் மற்றும் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகங்களில் புகார் அளிக்கலாம். மேலும், சென்னை, எழும்பூர், தலைமை அலுவலகத்தில் இயங்கும், கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் புகார் அளிக்கலாம்.

* கட்டணமில்லா தொலைபேசி எண் – 18004252015

* தொலைபேசி எண் – 044 – 28521970, 28542303

* பேக்ஸ் எண் – 044 – 28524634 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது