என்கிட்டே சொல்லவே இல்லை! – இலங்கை பயங்கரவாத தாக்குதல் குறித்து சிறிசேனா! – AanthaiReporter.Com

என்கிட்டே சொல்லவே இல்லை! – இலங்கை பயங்கரவாத தாக்குதல் குறித்து சிறிசேனா!

கடந்த ஈஸ்டர்  திரிவிழாவின்போது, இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தற்கொலை பயங்கர வாதிகளின் படத்தை இலங்கைஅரசு வெயியிட்டு உள்ள நிலையில்  இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்த உளவுத்துறையின் தகவல்களை யாரும் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார்.

இலங்கையில், கடந்த ஏப்ரல் 21ம் தேதி, ஈஸ்டர் பண்டிகையன்று 3 தேவாலயங்கள், 3 ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் என மொத்தம் 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப் பட்டன. நேற்று முன்தினம் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தபோது குண்டு வெடித்தது. மேலும், கொழும்பு பஸ் நிலையத்திலும், சர்வதேச விமான நிலையம் அருகிலும் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அடுத்தடுத்த சம்பவங்களால் நாடு முழுவதும் பீதி நிலவி வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு இலங்கையில் அவசர நிலை அமலுக்கு வந்தது.இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. நியூசிலாந்து மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே, இந்த தாக்குதல் நடை பெற்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக இலங்கை ராணுவ துணை அமைச்சர் ருவன் விஜேவர்த்தனே தெரிவித்தார்.

இலங்கையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக இந்திய உளவுத்துறை தகவல் பரிமாறப்பட்டுள்ளது. ஆனால், அதை பொருட்படுத்ததாதே இந்த கோர சம்பவம் நடந்ததற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. உளவுத்துறையின் தகவல்களை புறக்கணித்ததற்காக நாட்டு மக்களிடம் இலங்கை அரசு நேற்று மன்னிப்பு கேட்டது.

இந்நிலையில், தீவிரவாத தாக்குதல் குறித்து உளவுத்துறையின் தகவல்களை யாரும் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இன்று தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பேசிய அவர்,”எனக்கு முன்பே இந்த தகவல் கிடைத்திருந்தால் தேவையான நடவடிக்கை எடுத்திருப்பேன். தங்கள் கடமையை சரியாக ஆற்றத் தவறியவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுப்பேன் இலங்கை பாதுகாப்புத்துறை தலைவர்கள் மாற்றப்பட்டு, பாதுகாப்பு பிரிவு முற்றிலும் சீரமைக்கப்படும்” என்று சிறிசேனா தெரிவித்தார்.

மேலும் இலங்கை ராணுவ செயலர், காவல்துறை தலைவர் ஆகியோரை ராஜினாமா செய்ய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.