பான் கார்டு இல்லையென்றாலும் பரவாயில்லை ; ஆதார் இருந்தால் போதும் – ஐ.டி. தகவல்! – AanthaiReporter.Com

பான் கார்டு இல்லையென்றாலும் பரவாயில்லை ; ஆதார் இருந்தால் போதும் – ஐ.டி. தகவல்!

வரி செலுத்துவது உள்ளிட்ட பான் கார்டுகள் கட்டாயம் என்றும்  கறுப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கையாக ரூ.50,000-த்துக்கும் மேலான பணபரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாயம் என்ற விதி அமலில் இருந்து வரும் நிலையில் அறிவிக்கப்பட்டிருந்த பல்வேறு நடைமுறை களுக்கும் ஆதார் அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் வரி செலுத்துவோருக்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

பான் எண் இல்லாதவர்கள் ஆதார் எண்ணை குறிப்பிட்டு வருமான வரி தாக்கல் செய்யலாம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்தார். வருமான வரி செலுத்துவோருக்கு வழங்கப்பட்ட பான் கார்டின் தேவை குறைந்துவிட்டதா என கேள்விகள் எழுந்த நிலையில், இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் பிரமோத் சந்திர மோடி விளக்கமளித்துள்ளார்.

அதில், பான் எண் கண்டிப்பாக உயிர்ப்புடன் இருக்கும் எனவும் பான் கார்டுகள் இல்லாதவர்களும் வரி செலுத்துவதற்கு ஏதுவாக ஆதார் கார்டு மூலம் வரி செலுத்தும் முறை நடைமுறை படுத்தப் பட்டுள்ளதாகவும், அதேபோல் ஆதார் கார்டு மூலம் வரி தாக்கல் செய்வோருக்கு, வருமான வரித்துறை அதிகாரிகள் தாமாக முன்வந்து பான் கார்டு எண் ஒதுக்குவார்கள் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து பேசிய மத்திய வருவாய்த் துறை செயலாளர் அஜய்பூஷன் பாண்டே, `இன்றைய சூழலில் 22 கோடி பான் கார்டுகள், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதேநேரம், 120 கோடிக்கும் அதிகமான மக்களிடம் ஆதார் அட்டை இருக்கிறது. இந்தநிலையில், பான் கார்டு தேவைப்படும் ஒருவர், ஆதார் அட்டை மூலம் அதை உருவாக்கிப் பயன்படுத்தலாம்.

அதாவது வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு அளிக்கப்படும் கூடுதல் வசதி இது. வருமான வரி சட்டப்படி, பான் எண் ஆதார் எண் ஆகிய இரண்டையும் கட்டாயமாக இணைக்க வேண்டும். ஒரு வேளை, வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் பான் எண் இல்லாமல் ஆதார் குறிப்பிட்டு கணக்கு தாக்கல் செய்தால், வருமான வரித்துறை தானாக முன்வந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு புதிய பான் எண் வழங்கும். இதற்கான அதிகாரம் வருமான வரித்துறைக்கு உள்ளது. மத்திய பட்ஜெட்டில் வசதி கருதி கூறியதை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. பான் எண் இல்லாவிட்டாலும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம் என்பது கூடுதல் வசதிதான். அதாவது, பான் எண் இல்லாமல் தாக்கல் செய்தாலும் வருமான வரி கணக்கு நடைமுறைகள் பாதிக்கப்படாது, அவ்வளவுதான்” என்றார்