சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி நீக்கப்படுவாரா?

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி நீக்கப்படுவாரா?

சுப்ரீம் கோர்ட்டின் சீஃப் ஜட்ஜாக இருக்கும் தீபக் மிஸ்ரா மீது கடந்த ஜனவரி மாதத்தில் 4 மூத்த நீதிபதிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்கள். வழக்குகளை ஒதுக்குவதில் பார பட்சம் காட்டப்படுகிறது என்று நீதிபதிகள் வைத்த முக்கிய குற்றச்சாட்டு. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில் தலைமை நீதிபதி நீக்கப்படுவாரா?

முதலில் அதற்கான நடைமுறை என்னவென்று பார்ப்போம். என்ன குற்றங்களுக்காக நீக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு அதற்கான மனுவை மக்களவைத் தலைவர், அல்லது மாநிலங் களவைத் தலைவரிடம் அளிக்க வேண்டும். அதில் மக்களவையாக இருந்தால் 100 எம்.பிக்கள், மாநிலங்களவையாக இருந்தால் 50 எம்.பிக்கள் கையெழுத்திட்டிருக்க வேண்டும். அந்த கோரிக்கை யில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருக்கிறதா என அறிந்து கொள்ள அவைத் தலைவர் ஒரு குழுவை அமைத்து அறிக்கை தரக் கோரலாம். அல்லது அந்தக் கோரிக்கையை எடுத்த எடுப்பில் அவரே நிராகரிக்கலாம்.

குழு குற்ற்சசாட்டுக்களில் முகாந்திரம் இருப்பதாகக் கருதினால் அதன் அறிக்கையின் அடிப்படையில் பதவி நீக்கும் தீர்மானம் தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வைக்கப்படும். மூன்றில் இரண்டு பங்கு எம்.பிக்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் நீதிபதி பதவி நீக்கம் செய்யப்படுவார்

இப்போது எத்தனை எம்பிக்கள் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்?

71 மாநிலங்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ள மனு மாநிலங்களவைத் தலைவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் கையெழுத்திட்டுள்ள 7 பேரின் பதவிக் காலம் முடிந்து விட்டது . எனவே 64 பேர் எனக் கணக்கில் கொள்ளப்படும்.

காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், தேசிய வாத காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் ஆகிய ஆறு கட்சி களின் உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். காங்கிரஸ் உறுப்பினர்களே சிலர் கையெழுத்திட வில்லை. உதாரணம் : ப.சிதம்பரம் .. &  திமுக, அதிமுக, திரிணாமூல் காங்கிரஸ் ஆகியவை கையெழுத்திடவில்லை

காங்கிரஸ் உறுப்பினர்களில் சிலரும், காங்கிரசிற்கு நெருக்கமான கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஏன் கையெழுத்திடவில்லை என்பது தெரியவில்லை. “அதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன” என்கிறார் கபில் சிபில்..அவை என்னவென்று தெரியவில்லை. கையெழுத்திடாத கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் சில வழக்குகளை எதிர் கொண்டுள்ளார்கள் என்பது நாடறிந்த செய்தி

தீர்மானம் நிறைவேறும் சாத்தியங்கள் உள்ளதா?

அது பாஜக எடுக்கும் நிலைபாட்டைப் பொறுத்தது. அது நீதிபதிக்கு ஆதரவான நிலையை எடுக்கு மானால் தீர்மானம் நிறைவேற் வாய்ப்பில்லை. ஏனெனில் மற்ற கட்சிகளால் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெறும் வாய்ப்புக் குறைவு. மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆரம்ப கட்டத்திலேயே கோரிக்கையை நிராகரித்து விடலாம். அல்லது குழு அமைத்து அறிக்கை கோரலாம். அறிக்கை, அதனடிப்படையில் தீர்மானம் என்பதெல்லாம் நீதிபதி ஓய்வு பெறும் முன் கிடைக்க/தயாராக வேண்டும்.

தலைமை நீதிபதி அக்டோபர் மாதம் ஓய்வு பெறுகிறார்

வாய்ப்புக் குறைவாக இருக்கும் சூழ்நிலையில் காங்கிரஸ் ஏன் இதை முன்னெடுக்கிறது?

அரசியல்தான். நீதிபதி லோயா மரண்ம் பற்றிய விசாரணை கோரிய வழக்கு நேற்று முன் தினம் தள்ளுபடியாகிவிட்டது. அது அரசியலில் அமித ஷாவிற்கு சாதகமானது என்பது மட்டுமல்ல, காங்கிரசிற்கு, குறிப்பாக ராகுல் காந்திக்கு ஒரு மூக்குடைப்பு. ராம் ஜென்ம பூமி வழக்கில் தலைமை நீதிபதி ஓய்வு பெறும் முன் தீர்ப்பு வந்து விடக் கூடும். அந்தத் தீர்ப்பு குறித்து காங்கிரசிற்கு அச்சம் இருக்கக் கூடும்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இது ஒரு மோசமான அணுகுமுறை. நீதிபதிக்கு ஆதரவாக அல்லது எதிராக எப்படி முடிவானாலும் நீதிபதிகள் அரசியல் வாதிகளைச் சார்ந்திருக்கும் மன நிலை உறுதிப்படும். அதாவது நீதிபதிகளின் அரசியல் கட்சி சார்பு தவிர்க்க முடியாததாகி விடும். அது நீதித்துறைக்கும் நாட்டிற்கும் நல்லது அல்ல.

இப்போதே, ஏன் எப்போதுமே, சில நீதிபதிகள் அரசியல் கட்சி சார்புடையவர்களாக இருக்கிறார்கள், இருந்திருக்கிறார்கள். வி.ஆர் கிருஷ்ணய்யர் மார்க்சிஸ்ட் அரசில் அமைச்சராக இருந்தார். ரத்னவேல் பாண்டியன் திமுக அனுதாபி. ஆந்திர பிரதேச உயர் நீதி மன்ற நீதிபதியாக இருந்த பி.சிவசங்கர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி அமைச்சரவைகளில் அமைச்சராக இருந்தார். நாராயணசாமி முதலியார் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இடம் பெற்றார். நீதிபதிகளாக இருந்து ஓய்வு பெற்ற சந்துரு, ஹரிபரந்தாமன் ஆகியோர் மாணவப் பருவத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடசியின் மாணவ அமைப்பில் இருந்தவர்கள்.

நீதிமன்றங்கள் முன்பு போல சட்ட விளக்கம் கோருமிடமாக மட்டுமின்றி அரசியல் பிரச்சினை களில் பஞ்சாயத்துச் செய்யும் அமைப்புகளாகவும் மாறி வரும் சூழலில் அது அரசியல்கட்சிகளின் பிடிக்குள் சிக்குமானால் அது ஆபத்தாக முடியும்.

மாலன் நாராயணன்

error: Content is protected !!