இந்து அற நிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா சஸ்பெண்ட்! – AanthaiReporter.Com

இந்து அற நிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா சஸ்பெண்ட்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் ‘சோமாஸ் கந்தர்’ சிலை செய்ததில் முறைகேடு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுதலையான இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள பழைய உற்சவர் சோமாஸ்கந்தர் சிலையை மாற்றி, புதிதாக உற்சவர் சிலை செய்ய இந்து அறநிலையத் துறை திட்டமிட்டது. அதன்படி, இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவின்பேரில், சிற்ப சாஸ்திரத்தின்படி சோமாஸ்கந்தர் சிலை 50 கிலோ எடையிலும், சிவகாமி சிலை 65 கிலோ எடையிலும் செய்ய முடிவெடுக்கப்பட்டு ரூ.2.12 கோடி செலவில் புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டு, 2016-ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஆனால் இந்தச் சிலையில் அறநிலையத்துறை குறிப்பிட்ட 5 சதவிகித தங்கம்கூட கலக்கப்படவில்லை என்று பக்தர்கள் தரப்பில் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் அடிப்படையில் சிலை செய்வதில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தலைமை ஸ்தபதி முத்தையா, கோயில் செயல் அலுவலர் முருகேசன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அதிரடியாக இவ்விவகாரத்தில் அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதா கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.

சிலை செய்வதற்கு 5,00,000 ரூபாய் பணம் கவிதாவிடம் கொடுத்திருப்பதாகக் கோயில் அர்ச்சகர் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு கவிதா கைது செய்யப்பட்டார். அதேநேரம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

இந் நிலையில், அறநிலையத்துறை பணிகளில் கவிதா மறைமுகமாகத் தலையிடுகிறார் என யானை ராஜேந்திரன் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் அறநிலையத்துறை நாளை விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 31-ம் தேதி அதாவது கைதான அன்றே பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அற நிலையத் துறை கூடுதல் செயலாளர் வெங்கடேஷ் ஆணை பிறப்பித்துள்ளார். பணியிடை நீக்கம் செய்து, நேர்மையான அதிகாரி கவிதாவை பழிவாங்கி உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.