உலக தடகள போட்டியில் இந்திய வீராங்கனை தங்கம் வென்று சாதனை ! – AanthaiReporter.Com

உலக தடகள போட்டியில் இந்திய வீராங்கனை தங்கம் வென்று சாதனை !

இருபது வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள போட்டியில் 400 மீ சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.   தடகள போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முதலமுறையாக சாதனை ப்புரிந்துள்ளார் ஹிமா தாஸ். இவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை உடனடியாகத் தெரிவித்துக்கொண்டனர்.

 

பின்லாந்தின் தாம்பியேரில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகளப் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் அஸ்ஸாமைச் சேர்ந்த ஹிமா தாஸ் கலந்துகொண்ட அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

இந்நிலையில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள 400 மீட்டர் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

400 மீ ஓட்டத்திற்கான இறுதிப் போட்டியில் ஹிமா தாஸ் 51.46 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இதுகுறித்து ஹிமா தாஸ் கூறுகையில்,”உலக தடகள சாம்பியன்ஷிப் ஓட்டப் பந்தயத்தின் இறுதி போட்டியில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு ஊக்கமளித்த அனைத்து இந்தியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தினார்.

குடியரசு தலைவர் வாழ்த்து

தங்கப் பதக்கத்தை வென்றுள்ள ஹிமா தாஸுக்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். குடியரசு தலைவர் தனது டுவிட்டரில்,”20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் 400மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ள ஹிமா தாஸுக்கு எனது வாழ்த்துக்கள். உலக சாம்பியன்ஷிப் போட்டியின் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும். அசாமிற்கும் இந்தியாவிற்கும் இது மிகவும் பெருமையான தருணம் இது. ஒலிம்பிக் மேடை ஹிமாவை இப்போது அழைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி டுவிட்டரில்,”20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் 400மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்று சாதனை படைத்த ஹிமா தாஸால் இந்தியா மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது. எனது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இவரது திறமையும் சாதனையும் இளைய வீர வீராங்கனைகளை பெரிதும் ஊக்குவிக்கும்” என்று பதிவிட்டிருந்தார்.