40% திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாக ஆய்வு முடிவுகள் – ஐகோர்ட் ஜட்ஜ் அப்செட்! – AanthaiReporter.Com

40% திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாக ஆய்வு முடிவுகள் – ஐகோர்ட் ஜட்ஜ் அப்செட்!

மனிதர்கள் வேலை காரணமாகவும் பொருளாதாரரீதியாகத் தனித்து இயங்க விரும்புவதாலும் அண்ணன், தம்பிகளே பெற்றோரையும் விட்டுப் பிரிந்து தனித் தனிக் குடும்பங்களாக வாழ்கின்றனர். அவர்களிடத்தில் மனப் பதற்றமும் சோர்வும் அதிக நேரம் காணப்படுகிறது. மனிதர்களும் கூட்டுக் குடும்பமாகவோ சமூகமாகவோ சேர்ந்து வாழ்வதன் மூலமோ மனப் பதற்றங்களைக் குறைத்துக்கொள்ளலாம், மனச் சோர்வை விரட்டலாம், மனம் விட்டுப் பேசுவதன் மூலம் புத்துணர்ச்சி பெறலாம். அதாவது கூட்டுக் குடும்பமாக அல்லது மிகப் பெரிய குடியிருப்பில் ஏராளமான குடும்பங்களுடன் சேர்ந்து, கலந்து பழகி வாழ்வதால் மனப்பதற்றம் குறைகிறது, நினைவாற்றல் அதிகரிக்கிறது, இடைவிடாத மன அழுத்தத்திலிருந்து விடுபட முடிகிறது என்று கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஓர் ஆய்வு தெரிவித்திருந்தது. மனிதர்களுக்குப் பொருந்தக்கூடிய இந்த முடிவை, எலிகளை வைத்து சோதனை நடத்திக் கண்டுபிடித்திருந்தது நினைவிருக்கும்.

இந்நிலையில் வாழ்க்கை முறை மாறி விட்டது வருந்தலுக்குரியது.நம் நாட்டில் கூட்டுக்குடும்பத்தில் உள்ள சில குறைபாடுகளால் தனித்தனி குடும்ப வாழ்க்கை முறை உருவாகியுள்ளது. 40% திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு நீதித்துறை அகாடமி ஆகியவை இணைந்து நடத்தும் நான்காவது மண்டல கருத்தரங்கு சென்னையில் இன்று நடந்தது கூடவே. குடும்ப நல நீதிமன்ற விவகாரங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கருத்தரங்கும் நடந்தது.

கருத்தரங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப், ஜார்கண்ட் உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி திருபாய் நரன்பாய் பட்டேல், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். தென்மண்டல மாநிலங்களை சேர்ந்த நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள் கலந்துகொண்டனர்.

இந்த கருத்தரங்கில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் பேசிய போது, “பெண்கள் மீதான மனித உரிமை மீறல் காரணமாகத்தான் அவர்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்கள். சென்னையில் வழக்குகளுக்கு வருபவர்களின் குழந்தைகள் நீதிமன்ற சூழலை உணரக்கூடாது என்பதற்காக புதிய வசதிகளை தலைமை நீதிபதி ஏற்படுத்தி கொடுத்துள்ளார். கணவன் மனைவி நீதிமன்றம் வருவதால் குழந்தைகள்தான் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். நீண்ட நாட்கள் வழக்கு செல்வதால் அவர்கள் பாதிப்புப் தொடர்வதால் குடும்ப நல வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.” என்று பேசினார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி தன் உரையில், “குடும்ப ஒருமைப்பாட்டுக்கு நமது சமூதாயம் அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறோம். வாழ்க்கைமுறை மாற்றத்தால், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையை இழந்துவிட்டோம். கூட்டுக்குடும்பத்தில் உள்ள சில குறைபாடுகளால் தனித்தனி குடும்ப வாழ்க்கை முறை உருவாகியுள்ளது. 40% திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.ஒரு குடும்பத்தை பாதுகாக்க வேண்டிய முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை குடும்பநல நீதிமன்ற நீதிபதிகள் உணர வேண்டும். குடும்ப உறவில் எந்த உறவினர் பிரச்சினைக்கு காரணமாக இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து, கணவன் மனைவி இடையேயான பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

திருமணத்தை பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். துரதிஷ்டவசமாக மேற்கு வங்கத்தில் ஒரே ஒரு குடும்ப நல நீதிமன்றம் மட்டுமே உள்ளது. குடும்பத்தினரின் தூண்டுதலால் விவாகரத்துகள் நடக்கின்றன. வழக்குகளை இழுத்தடிப்பது பிரச்னையை தீவிரப்படுத்தும். ஜீவனாம்ச வழக்குகளையும், குழந்தைகளை ஒப்படைக்க கோரும் மனுக்களையும் விரைந்து தீர்வு காண வேண்டும். விவாகரத்து வழக்குகளை தீர்வு காணும் போது குழந்தைகளின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்தார்.

இறுதியாக உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் பேசிய போது, “குடும்பநல நீதிமன்ற நீதிபதி பணியிடங்கள் தான் 62 வயது வரை தொடர முடியும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். ஒரு தம்பதியினர் இடையேயான குடும்ப நல தகராறு தொடர்பாக 112 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. குடும்பநல நீதிபதிகளுக்கு எத்தனை வழக்கு கள் முடித்தோம் என்பதை காட்டிலும், நீதிமன்றத்தை நாடுபவர்களுக்கான பாதுகாப்பான விரைவான தீர்வுக்கு வழிகாண வேண்டும்.

பிரச்சினைக்கான முக்கிய புள்ளி எது என்பதை கண்டறிந்து தீர்வுகாண முயற்சியுங்கள். பெரும்பாலும் சமரசத்துக்கு முயற்சிக்க வேண்டும். மாவட்டத்துக்கு ஒரு குடும்ப நல நீதிமன்றம் என்பது அவசியம். ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொருவகை, அதேபோல அனைத்து வழக்குகளும் ஒரே வழக்கு இல்லை என்பதை உணருங்கள். ஒவ்வொரு வழக்கும் ஒவ்வொரு வகையிலானது. ஒவ்வொரு வழக்கிற்கான பிரச்சினை என்பது நிச்சயம் மாறுபடும். அதை கண்டறிந்து தீர்வு காணுங்கள்”என்றார் அவர்.