நடுரோட்டில் இருந்த கோயிலால் சென்னைவாசிகளுக்கு சொத்து வரி அதிகரிப்பு! – AanthaiReporter.Com

நடுரோட்டில் இருந்த கோயிலால் சென்னைவாசிகளுக்கு சொத்து வரி அதிகரிப்பு!

சென்னை மட்டுமின்றி தமிழக மக்களால் மறக்க முடியாத் 2015-ம் வருஷம் டிசம்பர் மாதம், சென்னை மற்றும் புறநகரில் ஏற்பட்ட பெரு வெள்ளம் 289 உயிர்களை பலிகொண்டதும். 23.25 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கியதும் மின்சாரம், தொலை தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. பல நாட்களுக்கு மாநகரம் முடங்கியதும் யாருக்கும் மறக்காது. ஆனால் அதையொட்டி இந்த நாச பாதிப்புகளுக்கான காரணங்கள் குறித்து மத்திய தணிக்கைத்துறை தலைவர் அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டிருந்தன. குறிப்பாக குளங்கள், ஏரிகள், ஆற்றுப்படுகைகள் ஆகியவற்றில் இருந்த ஆக்கிரமிப்புகள், இந்த பெரு வெள்ளத்தை ஏற்படுத்துவதில் பெரும் பங்காற்றியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏரி ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்த 2007-ல் சட்டம் இயற்றப்பட்ட போதும், ஆக்கிரமிப்பு சதவீதம் உயர்ந்தது குறிப்பிட்டிருந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை மாற்றி அமைப்பது குறித்து தமிழக அரசு 2 வாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது சென்னை நுங்கம்பாக்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, ஆலய வழிபாடு நடத்தப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் என்.கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் ஆஜராகி, விதிமீறல் கட்டிடங்களை இடிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.

பிறகு நீதிபதிகள் தமது தீர்ப்பில் கூறியதாவது:

விதிமீறல் கட்டிடங்களை இடிப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும், அதிகாரிகள் அதை செயல் படுத்துவது இல்லை. எனவே, இதுவரை அமல்படுத்தப்பட்ட, அமல் படுத்தப்படாத உத்தரவுகள் எத்தனை என்று 2 அதிகாரிகளும் அடுத்த விசாரணையின்போது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சென்னை மாநகராட்சிக்கான சொத்துவரியை மாற்றி அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதை பரிசீலித்து நகராட்சி நிர்வாகத் துறை செயலர் 2 வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

கடந்த 1998-ம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை, சென்னையின் விரிவாக்கத்துக்கு ஏற்ப சொத்து வரி மாற்றி அமைக்கப்படவில்லை. அடுக்குமாடிகள் பெருகிவிட்ட சென்னையில் அதற்கேற்ப கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் இல்லை. ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிகள் அமைக்க தனியாக கட்டணம் வசூலிக்க மாநகராட்சி, சிஎம்டிஏ, கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் குறித்து தனியாக வலைதளம் ஏற்படுத்தி ஆன்லைன் மூலமாக தெரியப்படுத்த வேண்டும். விதி மீறல் கட்டிடங்களை ஆரம்பத்திலேயே தடுக்க ஏன் தனியாக சிறப்பு படைகளை உருவாக்கக்கூடாது? இதுதொடர்பாக 2 அதிகாரிகளும் பதில் அளிக்க வேண்டும். விதிமீறல் கட்டிடங்களுக்கு எவ்வாறு மின் இணைப்பு வழங்கப்படுகிறது என்பது குறித்து தமிழ்நாடு மின்வாரிய தலைவர் அடுத்த வழக்கு விசாரணை நாளனறு நேரில் ஆஜராகி தெரிவிக்க வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மைக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும். வழிபாடு நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், நுங்கம்பாக்கத்தில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து மற்றவர்களுக்கு இடையூறாக வழிபாடு நடத்துவதை ஏற்க முடியாது. அந்த ஆக்கிரமிப்புகளை போலீசாரின் துணையுடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.