அண்ணா நூலகத்தை அரசே சீர் செய்யுமா? அல்லது …!? – ஐகோர்ட் கண்டிப்பு – AanthaiReporter.Com

அண்ணா நூலகத்தை அரசே சீர் செய்யுமா? அல்லது …!? – ஐகோர்ட் கண்டிப்பு

சென்னை ஐகோர்ட்டில், ஓய்வுபெற்ற பேராசிரியர் மனோன்மணியம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘சென்னை கோட்டூர்புரத்தில் தி.மு.க. ஆட்சிகாலத்தில் அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், இந்த நூலகத்தை முறையாக பராமரிக்கவில்லை’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், அண்ணா நூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல்கள் பி.டி.ஆஷா, எம்.சுந்தர் ஆகியோரை சட்ட ஆணையராக நியமித்தது. இந்த வக்கீல்கள் நூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைகளை ஜூன் 31-ந் தேதிக்குள் சரிசெய்யவேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

anna lib jy 23

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, ‘அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் உள்ள குறைகள் அனைத்தையும் அரசு சரிசெய்து வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே அனைத்து பணிகளையும் முடிவுக்கு கொண்டுவர 2 மாதம் கால அவகாசம் வேண்டும்’ என்று கேட்டார்.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘இந்த ஐகோர்ட்டு பல உத்தரவுகளை பிறப்பித்தும் நூலகத்தை முறையாக அதிகாரிகள் பராமரிக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் 1,432 புத்தகங்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளன. புதிய உறுப்பினர்களை சேர்க்கவில்லை. எனவே, இந்த வழக்கில் தமிழ் வளர்ச்சித்துறை செயலாளரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடவேண்டும்’ என்று கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘அரசுக்கு பல முறை காலஅவகாசம் வழங்கப்பட்டுவிட்டன. இப்போது கடைசி வாய்ப்பு தருகிறோம். அதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்கவில்லை என்றால், அண்ணா நூலகத்தை பராமரிப்பதற்கு ஒரு குழுவை உருவாக்கி, பராமரிப்பு பணிகளை அந்த குழுவிடம் ஒப்படைக்க உத்தரவிடுவோம். அந்த பராமரிப்பு பணிக்கு ஆகும் செலவுகளை தமிழக அரசு வழங்கவேண்டிய நிலை ஏற்படும்’ என்று கருத்து தெரிவித்தனர்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து தமிழக அரசு 5-வது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த நூலகத்தில் மேற்கொள்ளவேண்டிய அனைத்து பணிகளையும் தமிழக அரசு ஜூன் 30-ந் தேதிக்குள் செய்து முடிக்கவேண்டும் என்று ஏற்கனவே நாங்கள் (நீதிபதிகள்) கெடு விதித்து இருந்தோம்.

ஆனால், அந்த பணிகளை குறித்த காலத்துக்குள் அரசு முடிக்கவில்லை. மேலும், நூலகத்தில் மேற்கொள்ளவேண்டிய அனைத்து பணிகளும் அக்டோபர் 31-ந் தேதிக்குள் செய்து முடிக்கப்படும் என்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை நாங்கள் பதிவு செய்துகொள்கிறோம். இந்த வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 4-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது