ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்றார்! – AanthaiReporter.Com

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்றார்!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜேஎம்எம் 30 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சி களான காங்கிரஸ் 16 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 1 இடத்திலும் வெற்றி பெற்றன. இதையடுத்து, ஜேஎம்எம் – காங்கிரஸ் – ஆர்ஜேடி கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான ஹேமந்த் சோரன் பதவியேற்க முடிவு செய்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் (ஜேஎம்எம்) செயல் தலைவர் ஹேமந்த் சோரன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்றார்.

81 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் ஜேஎம்எம், காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஜேஎம்எம் கட்சித் தலைவராக ஹேமந்த் சோரன் கடந்த செவ்வாய்கிழமை தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் ஆளுநர் திரௌபதி முர்முவைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதை அடுத்து, ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக 29-ஆம் தேதி பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, மொர்ஹாபாதி மைதானத்தில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. அதில் முதல்வர் ஹேம்நாத் சோரனுக்கு ஆளுநர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தார். இவருடன் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஆலாம்கர் அலாம், மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ்வர் ஓரோன் மற்றும் ஆர்ஜேடி எம்எல்ஏ சத்யானந்த் போக்தா ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

இந்தப் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், இந்தியக் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி. ராஜா, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.