உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளால் பாழாகும் மண் + வாழை! – AanthaiReporter.Com

உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளால் பாழாகும் மண் + வாழை!

முக்கனிகளில் ஒன்று எனச் சொல்லப்படும் வாழைப்பழங்களில் பலவகைகள் உண்டு. எல்லாவகை வாழைப்பழங்களிலும் பலவகை சத்துக்கள் உள்ளன. அதுமட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் , எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய பழம் வாழைப்பழம், இதை ஏழைகளின் கனி என்றும் கூறு வார்கள். இந்த வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும் மற்றும் சோடியம் குறைவாக வும் உள்ளதால், இதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளடங்கியுள்ளது. அதிலும் நீரிழிவு, இதய நோய், சிறு நீரக நோய்கள் மற்றும் புற்றுநோய் உள்ளவர்கள் கூட எவ்வித அச்சமும் இல்லாமல் வாழைப் பழத்தை சாப்பிடலாம் என்றெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி வந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பயிரிடப்படும் வாழை விளைச்சலுக்காக பயன் படுத்தப்பட்ட உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளால் மண்ணில் மக்னீசியத்தன் அளவு மிக அதிகமாக அதிகரித்து நிலம் பாழ்பட்டு அதில் பயிரிடப்படும் வாழைப்பழங்களும் ஆபத்தானதாக மாறி வருகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் அதிகம் வாழை பயிரிடப்படும் மாநில தமிழகம் விளங்கி வருகிறது. தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகாவிலும் அதிகஅளவு வாழை சாகுபடி செய்யப்படுகிறது. வாழை சாகுபடிக்காக அதிக அளவு உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது.

இந் நிலையில், தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து 250 க்கும் அதிகமான மண் மாதிரிகள் பற்றிய விரிவான ஆய்வு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றில் பல பத்தாண் டுகளாக உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதன் விளைவாக மண்ணுக்கு வேண்டிய இயல்பு தன்மை முற்றிலும் மாறி விட்டனவாம்.

இதனால் அதில் இப்போது தொடக்கத்திலிருந்த அளவைக் காட்டிலும் பன்மடங்கு கால்சியம், செப்பு, மக்னீசியம், குரோமியம் கோபால்ட் ஆகியவை காணப்படுகிறது. இவற்றில் அதிக அளவில் காணப் படுவது மெக்னீசியம் என்கிறது ஆய்வு.

கோட்டயம், மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் தாவர அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள், பல்வேறு மண் மாதிரிகள் சேகரித்தனர், மண் வகைப்பாட்டின் படி அவற்றை வகைப்படுத்தினர் இதில், பல்வேறு கனரக உலோகங்கள் அளவை ஆய்வு செய் வதற்காக அணு உறிஞ்சுதல் எனப்படும் ஸ்பெக்ட்ரோஸ்கோபி ஆய்வுகளும் செய்யப்பட்டன.

சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் மாசு ஆய்வில் முதல் புத்தகத்தை வெளியிட்டுள்ள நாகாலாந்து மாநிலத்தில் திமாப்பூர் செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கே.எஸ்.நிதீஷ் இது குறித்து தெரிவிக்கையில், ”தென் இந்தியாவில் வாழைத் தோட்ட நிலங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் மெக்னீசியம் அளவு இருப்பதை நாங்கள் படிப்படியாக கண்டறிந்துள்ளோம்.

30 கிராமிலிருந்து 220 மில்லி கிராமிற்குள்ளாக உள்ள தென்னிந்திய மண்ணில் மக்னீசியம் கணிச மாக இருப்பதைக் காணலாம். முறையான மண் பரிசோதனை இல்லாமல், பரிந்துரைக்கப் பட்ட மட்டத்திற்கு மேலே பூச்சிக்கொல்லி உள்ளிட்ட வேதியியல் உரங்களைப் பயன்படுத்தியதன் விளைவு இது. இதனால் பூச்சி, பூச்சிக்கொல்லிகள், மண்ணில் தங்கியுள்ள கனரக உலோகங்கள் அதிகம் திரண்டு வாழைப்பழங்களிலேயே நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும்” இவ்வாறு டாக்டர் நிதீஷ் தெரிவித்து  உள்ளார்.

உயிர் அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோசப் ஜார்ஜ் தெரிவிக்கையில், ”இது ஆரம்ப ஆய்வறிக்கைதான். இங்கு விளையும் பழங்களை முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இன்னும் முழுமையாக ஆய்வுகள் மேற்கொண்டால் பல கசப்பான உண்மைகளை நாம் பெற வேண்டிவரும். பலவருடங்களாக பூச்சிக்கொல்லி மற்றும் உரங்கள் பயன்படுத்தியத்தின் விளைவால் மண் தன் இயல்பிலிருந்து திரிந்துவிட்டது. இங்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் வாழைப் பழங்களில் கனரக உலோகங்கள் இருக்கிறது என்பதற்கு சான்றுகள் உள்ளன. இதனால் வாழை பழத்தின் தன்மை மாறியுள்ளதுடன், மண்ணும் தனது தன்மையை இழந்து விட்டது” என்கிறார்.

ஆக..பூச்சிக்கொல்லி மருந்துகள் கொல்வது பூச்சியை மட்டுமல்ல, மனிதனையும்தான் என்பதை உணர பல பத்தாண்டுகள் நமக்கு தேவைப்பட்டுள்ளது. இனி மனிதனின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமெனில் மண்ணின் உயிரையும் பாதுகாக்க வேண்டும் என்பதை உடனடியாக புரிந்து கொள்ள வேண்டும்.