ஹார்திக் பட்டேல்: 11வது நாளாக உண்ணாவிரதம்!

ஹார்திக் பட்டேல்: 11வது நாளாக உண்ணாவிரதம்!

குஜராத்தில் உள்ள பட்டேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கோரி ஹார்திக் பட்டேல் மேற் கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதம் இன்று 11வது நாளாக தொடரும் நிலையில் அவர் தனது உண்ணாவிரத்தைக் கைவிட மறுத்து மருத்துவமனை செல்வதைத் தவிர்த்து வருகிறார். இவரின் போராட்டத்தால் குஜராத் அரசுக்கு கடும் நெருக்கடி  ஏற்பட்டு உள்ளது

 

 

பட்டேல் சமூகத்தினரை இதர பிற்படுத்தபட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும் என கோரி குஜராத்தை சேர்ந்த இளைஞர் ஹார்திக் பட்டேல் கடந்த 2015ம் ஆண்டு  ‘பட்டிதர் அனாமத் அந்தோலன் சமிதி’ என்ற அமைப்பை துவங்கினார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி குஜராத்தின் பல்வேறு இடங்களில் ஊர்வலம் நடத்தினார் ஹார்திக் பட்டேல். கடந்த 2015, ஆகஸ்ட் 25ம் தேதி அகமதாபாத்தில் மிகபெரிய அளவில் பேரணி ஒன்றை நடத்தினார். அன்று மாலை அவர் கைது செய்யப்பட்டார். அதை எதிர்த்து பட்டேல் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தால் அகமதாபாத்தில் பல நாள் பதட்டம் நிலவியது.

இந்நிலையில் பட்டேல் சமூகத்தினரின் பேரணி நடந்த மூன்றாம் ஆண்டு நினைவு தினமான ஆகஸ்ட் 25ம் தேதி அன்று ஹார்திக் பட்டேல் தன் கோரிக்கையை வலியுறுத்தி அகமதாபாத்தில் உள்ள அவரது வீட்டில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

அவரது உண்ணாவிரதம் இன்று 11வது நாளாக தொடர்கிறது. ஹார்திக் உண்ணாவிரதம் துவக்கியது முதல் பல அரசியல் தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து வருகிறார்கள். இன்று முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா மற்றும் பாஜக தலைவர் சத்துருஹன் சின்ஹா ஆகியோர் ஹார்திக் பட்டேலை நேரில் சந்தித்து நலன் விசாரித்தனர்.

ஹார்திக் பட்டேலின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர குஜராத் பாஜக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மத்திய அரசு மற்றும் குஜராத் அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

ஹார்திக் பட்டேலின் உண்ணாவிரதம் காங்கிரஸின் தூண்டுதலால் நடக்கிறது என பாஜக குற்றம்சாட்டி வருகிறது. பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் எதிரானவர்கள் தான் ஹர்திக்கின் வீட்டிற்கு செல்கிறார்கள் என மத்திய எரிசக்தி அமைச்சர் சவுராப் பட்டேல் இன்று அறிக்கை வெளியிட்டார். மேலும் ஹார்திக் பட்டேல் தன் உடல்நலனை பரிசோதிக்க மருத்துவ குழுவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உண்ணாவிரதம் ஆரம்பித்தது முதல் இதுவரை ஹார்திக் பட்டேல் 20 கிலோ எடை குறைந்துள்ளார். தன் உடல்நலன் குன்றியதை தொடர்ந்து அவர் உயில் எழுதி வைத்துள்ளார்.

இதற்கிடையில் இடஒதுக்கீடு கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைக்கும்படி முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!