கை குலுக்குவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை அறிஞ்சிக்கலாம்! – AanthaiReporter.Com

கை குலுக்குவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை அறிஞ்சிக்கலாம்!

கை குலுக்குதல், தொலைபேசி உபயோகித்தல், கதவின் கைப்பிடியை தொடுதல், வாய், மூக்கை கையால் தொடுதல் இவற்றின் மூலம் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது என்பதெல்லாம் பழைய தகவலாகி போன நிலையில் ஒருவரது கைப்பிடி இறுக்கமாக இல்லாமல் தளர்வாக காணப்படுகிறதா? ஒரு கண்ணாடி தம்ளரையோ அல்லது பொருளையோ பிடிக்கும் போது இறுக்கம் இல்லையா? அப்படியென்றால் அவர் டாக்டரிடம் செல்ல வேண்டிய சரியான தருணம் இதுதான். என்கிறார்கள் டாக்டர்கள். காரணம் இந்த தளர்வு இதய செயல்பாடு மற்றும் கட்டமைப்பில் ஏற்படும் மாறுதலினால் ஏற்படுவதாகவும், அது இதயநோயின் ஆரம்ப அறிகுறி என்றும் லண்டனில் நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக் கழகப் பேராசிரியர் ஸ்டீபன் பீட்டர்சன் கூறுகையில், சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் டைனமோ மீட்டரை 3 நிமிடங்கள் பிடிக்கும்படி கொடுக்கப்பட்டது. அப்போது யாருடைய கை பிடி இறுக்கமாக உள்ளதோ அவர்களின் இதயங்கள் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது எனக் கூறினார்.

இதில் யாருடைய கை பிடி இறுக்கமாக இருந்ததோ அவர்களது இதயத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு வலுவாக இருந்தது. கை பிடி வலுவை சோதிக்கும் செலவு மலிவானது, மறுசீரமைப்பு மற்றும் எளிதாக நடைமுறைப்படுத்தக் கூடியது.

இதன் மூலம் எதிர்காலத்தில் வரவிருக்கும் மாரடைப்பு உள்ளிட்ட இதயம் தொடர்பான நோய்கள் குறித்து எளிதில் அறிந்து தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கான சோதனையின் போது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் கை பிடி தளர்வாக இருந்ததாகவும் அவர்கள் நோய் வாய்ப்பட்ட இதயத்துடன் இருப்பதாகவும் அவர்களது ரத்த ஓட்டம் மற்றும் ரத்தத்தை இதயம் பம்ப் செய்வதில் குறைபாடுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது. தளர்வான பிடி உடையவர்களின் இதயங்கள் விரிவடைந்திருப்பதும் பாதிக்கப்பட்டிருப்பதும் ஆய்வில் தெரிய வந்தது.

இறுகிய பிடி உடையவர்களின் ஒவ்வொரு இதயத் துடிப்பிலும் அதிகளவு ரத்தம் பம்ப் செய்யப்படுவதாகவும் அவர்களுடைய இதய துடிப்பு, நரம்புகள் மற்றும் இதய தசைகள் சீராக இருப்பதாகவும் அவர்களுக்கு மாராடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இது தவிர அவர்களின் குடும்பப் பின்னணி குறித்தும் தெரிந்து கொள்வதன் மூலம் ரத்த அழுத்தம், கொழுப்பு சத்து அளவு ஆகியவற்றின் அடிப்படையில் மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய் தாக்குதல்களில் இருந்து அவர்களை எளிதாக காப்பாற்ற முடியும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.