குலேபகாவலி – திரை விமர்சனம் =பார்ப்போரை மகிழ்ச்சியூட்டுவதில் ஜெயம்! – AanthaiReporter.Com

குலேபகாவலி – திரை விமர்சனம் =பார்ப்போரை மகிழ்ச்சியூட்டுவதில் ஜெயம்!

முழுக்க முழுக்க பொழுது போக்குக்காக உருவாக்கப்பட்ட திரைப்படக் கலையைக் கொண்டு புரட்சி எல்லாம் செய்து அதிகார பீடத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது நம் நம் தமிழ் சினிமா. இங்கு(ம்) கலைப்படம், காதல்படம், காப்பியப்படம், கிராமப்படங்கள், நாடகப்படம், பேய்ப்படம், மசாலாப்படம், வரலாற்றுப்படம், குழந்தைகளுக்கானப் படம், குடும்பப்படம், காமெடிப் படம்என்று பல வெரைட்டி உண்டு என்பதெல்லாம் நம் ரசிகர்களுக்கு தெரியும் என்று தெரிந்து ஒரு சினிமாவை வழங்கி இருக்கிறார்கள்.. அதாவது இந்த படத்தை பார்க்கும் போது மேற்படி வெரைட்டிகளில் மினிமம் நான்காவது ஒவ்வொருக்கும் வந்து போகும் வகையிலான திரைக்கதையில் தயாராகி திரைக்கு வந்துள்ளது குலேபகாவலி.

இந்த படத்தின் கதையைக் கேட்டு நீங்கள் ஒரு முடிவுக்கு வந்து குழம்பிக் கொள்ள வேண்டாம். உங்கள் குடும்பத்தில் கடந்த சில நாட்களாக குளறுபடியான சூழலும், குறு குறு போக்கும் நிலவுகிறதா? உடனடியாக குலேபகவலி படத்துக்கு குடும்பத்தை அழைத்து செல்லுங்கள். தியேட்டரை விட்டு வெளியே வரும் போது குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேர் முகத்திலும் புன்னகை தவழும். உங்கள் வீட்டு வாண்டு டல்லடித்து நீங்கள் சொன்னதை செய்ய சோம்பேறி படுகிறார்களா? உடனே இந்த படத்துக்கு அழைத்து போய் அருகில் அமர்ந்தபடி இருந்து பாருங்கள்.. வாண்டு-வுடன் உங்கள் மனநிலையும் மாறி விடும்.

ஆம்..  எடுத்து கொண்ட விஷயத்தை சினிமா என்னும் பொழுது போக்கு சாதனத்தின் மூலம் எதையதை பிரமிக்கும்படியாக, ரசிக்கும்படியாக, ஒப்புக் கொள்ளும்படியாக, ஆமோதிக்கும்படியாக சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு சொல்லி பல இடங்களில் படம் பார்ப்போரை மகிழ்ச்சியூட்டுவதில் ஜெயித்து இருக்கிறார்கள்.

அதாவது 1945ல் புதைத்து வைக்கப்பட்ட ஒரு வைர  புதையலைச் சுற்றி நடக்கும் இக்கதையில் சீனியர் நடிகை ரேவதி மெயின் ரோலில் நடித்துள்ளார். இடையிடையே அவர் நடிப்பு எரிச்சலை கொடுத்தாலும் மண்வாசனை நாயகியின் அலப்பறை அட்டகாசம் என்று இன்றைய ரசிகன் ‘அட’  சொல்லும் வகையில்தான் உள்ளது. அதிலும் அரங்கேற்றவேளை நாயகியின் பெயரான ,மாஷா, வை மனதில் வைத்து ஓடியாடி நடித்து கவர முயல்கிறார்.

முனிஸாக வரும் ராமதாஸூம் கொஞ்சம் கெக்கேபிக்கேத்தனமாக ஆக்ட் கொடுத்தாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார். நாயகி ஹன்சிகா பப் டான்ஸர் என்ன செய்வாரோ அதை பர்பக்டாக செய்து தன் பங்களிப்பை நிறைவு செய்துள்ளார். ஹீரோவான பத்ரி என்ற பெயரில் வரும் பிரபுதேவா- வின் நடிப்பில் அண்மையில்தான் ‘களவாடியபொழுதுகள்’ பார்த்து ரசித்த சூழ்நிலையில் இந்த குலேபகாவலி நாயகன் ரொம்ப யூத் & அட்ராக்டிவ்..!  டான்ஸ் மாஸ்டரான இவர் பாடல் காட்சிகளில் காட்டிய அக்கறையை பல காட்சிகளிலும்  வெளிப்படுத்தி ‘என்னிடம் இன்னும் நிறைய சரக்கு இருக்கு’ என்ற சமிஞ்சையைக் காட்டுகிறார் ..

மொத்தத்தில் நேரமும், காசும் மிதமிஞ்சிய நிலையில் கையில் இருந்தால் உடனடியாக குடும்பத்தோடு போய் பார்க்கத் தக்க படம்தான் – குலேபகாவலி

மார்க் 5/ 2.75