குஜராத்தில் தொடரும் வன்முறை: வெளியேறும் வெளிமாநிலத்தார்! – AanthaiReporter.Com

குஜராத்தில் தொடரும் வன்முறை: வெளியேறும் வெளிமாநிலத்தார்!

காந்திஜி பிறந்த மண்ணான குஜராத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த வாரம் 14 மாத பெண் குழந்தை பீஹாரை சேர்ந்த ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. இந்த  வன் கொடுமையைக் கண்டித்து குஜராத் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு வாழும் வெளிமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு வாழ பயப்படும் வெளிமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தங்களது மாநிலத்திற்கு மீண்டும் திரும்புகின்றனர்.

உத்தரபிரதேசம், பீஹார் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக வேலை தேடி நாள் தோறும் பலர் குஜராத் மாநிலத்துக்குச் செல்கின்றனர். அவர்கள் அங்குக் கட்டட வேலை, வியாபாரம் போன்ற பல தொழில்களைச் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் குஜராத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் 14 மாத பெண் குழந்தை பீஹாரை சேர்ந்த ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து குஜராத் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

போராட்டங்கள் தீவிரமடைந்ததை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை போன்ற பிற வழக்குகளில் சுமார் 150 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் உ.பி, பிஹார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதனால் பிறமாநிலத்தவர்களை கண்டாலே குஜராத் மக்கள் அடிக்கத் தொடங்கி விடுகின்றனர். மக்கள் அமைதி நிலைக்கு திரும்ப வேண்டும் என காங்கிரஸ், மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் கேட்டுக்கொண்ட போதிலும் பல இடங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இதனால் குஜராத்தில் தொடர்ந்து வாழ்வதற்கு பயப்படும் வெளிமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். கிட்டத்தட்ட 1500-க்கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்கள் கடந்த சில நாட்களில் குஜராத்தை விட்டு சென்றுவிட்டனர்.

இதுகுறித்து கட்டுமான ஒப்பந்ததாரனான கிருஷ்ணசந்ரா ஷர்மா என்பவர் கூறும்போது, “ கடந்த 22 வருடங்களாக அகமதாபாத்தில் வசித்து வருகிறேன். இப்போது நடப்பது போன்று இதற்கு முன் நான் ஒருபோதும் பார்த்தே இல்லை. அதனால் சொந்த ஊருக்கே செல்கிறேன்” என கூறியுள்ளார்.

இதனிடையே மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்டா இதுகுறித்து கூறும்போது, “ இளைஞர்களிடையே வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தில் அவர்கள் மத்தியில் அதிக கோபம் நிலவுகிறது. சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட காரணத்தினால் வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது அதிகரித்துள்ளது. ஒருநபர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த வெளிமாநில தொழிலாளர்களும் தவறானவர்கள் என குறிப்பிட முடியாது. இருந்தாலும் அந்த நபரின் குற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மாநில அரசு மக்களை பாதுகாக்கவும், ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.