வயசாயிடுச்சு.. போதும் -இந்த போஸ்ட்! – குஜராத் முதல்வர் ராஜினாமா – AanthaiReporter.Com

வயசாயிடுச்சு.. போதும் -இந்த போஸ்ட்! – குஜராத் முதல்வர் ராஜினாமா

குஜராத் மாநில பாஜக முதல்வர் ஆனந்திபென் படேல் தனக்கு விரைவில் 75 வயதை அடைய இருப்பதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கட்சித்தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதையடுத்து வந்த தகவல்களின் படி அவரது ராஜினாமாவை கட்சித் தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது. இவர் தனது ராஜினாமா கடிதத்தை தனது முகநூலிலும் வெளியிட்டுள்ளார். மேலும் ஆளுநரை சந்திக்க ராஜ்பவன் சென்றுள்ளார் படேல் என்ற செய்தியும் தற்போது வெளியாகியுள்ளது. அடுத்த குஜராத் முதல்வராக ருபானி தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது.

guj au 2

பாஜக அரசில் 1998-ம் ஆண்டிலிருந்து அமைச்சராக இருந்து வந்த ஆனந்திபென் படேல், 2014-ம் ஆண்டு முதல்வரானார். பதவியேற்றது முதல் கடுமையான எதிர்ப்பலை சூழல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. நவம்பர் 21-ம் தேதி இவருக்கு 75 வயதாகிவிடும் என்று கூறிய ஆனந்திபென், அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் பாஜகவுக்கு புதிய முகம் தேவை என்று கூறியுள்ளார்.

“பாஜக-வில் சிலகாலமாக இருந்து வரும் பழக்கத்தின் அடிப்படையில் 75 வயதாகிவிட்டால் அவர்கள் தாமாகவே பதவியிலிருந்து விலக வேண்டும் எனவே நான் விலகுகிறேன்” என்று கூறும் ஆனந்திபென் குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற அந்தஸ்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது காலக்கட்டத்தில்தான் ஊராட்சி தேர்தல்களில் பாஜக சமீபமாக சில தோல்விகளைச் சந்தித்தது. காங்கிரஸ் ஊராட்சித் தேர்தல்களில் பலம் பெற்றது. மேலும் படேல் சமூகத்தினரின் எழுச்சி இவருக்கு பெரிய சவாலாக அமைந்ததோடு, உள்ளாட்சி தேர்தல்களில் பாஜகவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. சமீபத்தில் உனாவில் இறந்த பசுமாட்டுத் தோலை உரித்ததற்காக தலித்துகள் சிலரை ஒரு கும்பல் அடித்து உதைத்தது மாநிலம் தழுவிய தலித் எழுச்சிக்கு வித்திட்டதோடு, கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியது.