ஜிஎஸ்டி – சில சந்தேகங்கள் + விளக்கங்கள்!

ஜிஎஸ்டி – சில சந்தேகங்கள் + விளக்கங்கள்!

ஜிஎஸ்டி வந்தா விலைவாசி குறையும்னு சொல்றாங்களே சார்…?

• இந்த நாட்டுல எந்தக் காலத்துலயாவது வரிகளை மாற்றுவதால் விலை குறைஞ்சிருக்கா? இப்போ மட்டும் எப்படிக் குறையும்? • ஜிஎஸ்டியினால் விலை குறையும்னு சொன்னா, ஜிஎஸ்டி வர்றதுக்குள்ள கார்லிருந்து மோர் வரைக்கும் இப்பவே வாங்கிக்குங்கன்னு உங்க போனுக்கு எஸ்எம்எஸ் வராது. • சர்வீஸ் டேக்ஸ் இப்போ சுமார் 15%தான். ஜிஎஸ்டியில் இது 18%.  • பெரும்பாலான பொருட்கள் 12% – 18% விகிதத்திலும், மிகச்சில விஷயங்கள்தான் 28% விகிதத்திலும் இருக்குன்னு சொல்லுவாங்க. அதாவது, பெரும்பாலான பொருட்கள் / சேவைகளுக்கு வரி விகிதம் 12-18%தான் அப்படீன்னு சொல்லுவாங்க. ஆனா, 12-18% விகிதத்தில் இருக்கிற பொருட்கள்தான் மக்கள் மிக அதிகமாகப் பயன்படுத்துகிற பொருட்களாக இருக்கும்கிறது பத்தி சொல்ல மாட்டாங்க. உதாரணமா, தங்கத்துக்கு 3%தான்! விலை உயர்ந்த கார்க ளுக்கு 55% இருந்தது இப்போ 43%. செல்போன் இப்போ பரவலான சாதனம், எல்லாரும் பயன்படுத்தற, எல்லாரும் எக்கச்சக்கமா செலவு செய்யற விஷயம். இதுக்கு 15%தான் இருந்தது, இப்போ 18%.

— அத்தியாவசியமான பல பொருட்களுக்கு வரி இல்லைன்னு சொல்லியிருக்காங்களே….?

— உடனே ஆஹான்னு சந்தோஷப்பட்டுடாதீங்க. சர்வீஸ் டேக்ஸ் வந்தப்பவும் இப்படித்தான். 1993இல் வெறும் இரண்டே சேவைகளுக்கு மட்டும்தான் சர்வீஸ் டேக்ஸ் போட்டாங்க. அப்புறம்? டேக்சும் படிப்படியா அதிகமாச்சு, பட்டியலையும் நீட்டிகிட்டே போனாங்க, கடைசியில பட்டியலே இல்லாத நெகடிவ் லிஸ்ட்-னு சொல்லி முடிச்சுட்டாங்க. அதே மாதிரி, இப்போ 0% ஆக இருப்பது நாளை 5% ஆகலாம். இப்போ 5% ஆக இருப்பது நாளை 10% ஆகும். இப்படியே மாறிட்டே போகுமே தவிர, வரி குறையும்கிறதும் சாத்தியமில்லை, விலை குறையும்கிறதும் சாத்தியமில்லை. அடுத்தடுத்து ஆப்பு வந்துட்டே இருக்கும், தயாரா இருங்க.

ஜிஎஸ்டி மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும்னு சொல்றாங்களே… மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி உரிமை இருக்கு இல்லையா?

— ஜிஎஸ்டி வர்றதுக்கு முன்னாடி எந்நெந்த வரிகள் இருந்துச்சு, அதில் எந்தெந்த வரிகளை விதிக்கிற உரிமை மாநில அரசுகளுக்கு இருந்துச்சுன்னு யோசிச்சுப் பாருங்க. இப்போ அது எல்லாம் போச்சு. நாட்டுக்கே பொதுவா ஜிஎஸ்டின்னு ஆகிப்போச்சு. ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநில அரசுகளுக்கும் இடம் உண்டுன்னாலும், மேலாண்மை மத்திய அரசிடம்தான் அதிகம் இருக்கும். அது மட்டுமில்லே, மத்தியில் ஆட்சியில் இருக்கிற கட்சியே பல மாநிலங்களிலும் ஆட்சியில் இருந்தா – அது பாஜக ஆனாலும் சரி, யாரா இருந்தாலும் சரி – மத்தியின் குரலைத்தான் மாநிலங்கள் கேட்க வேண்டியிருக்கும், மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். ஜிஎஸ்டியால் வரி நிர்வாகம் சுலபம் ஆனாலும், மாநிலங்களுக்கு இருந்த இன்னொரு உரிமை பறிபோயிருக்கு என்பது நிஜம்.

— பின்னே எதுக்கு இதை எல்லா மாநிலங்களும் ஏத்துகிட்டாங்க…?

— ஒரு வகையில், ஏகப்பட்ட வரிகளுக்குப் பதிலா ஒரே வரியில் பலதும் அடங்கினா நிர்வாகம் சுலபம். வரி போடப்படும் பொருட்களும் சேவைகளும் அதிகமானா அரசுக்கு வரி வருவாயும் அதிகமாகும். இது ஒரு வசதி. இன்னொரு பக்கம், மாநிலங்களில் பலதும் பாஜகதான் ஆட்சியில் இருக்கு. மத்தியில் என்ன சொல்றாங்களோ அதுக்கு தலையசைக்கிறது தவிர வேற வழியில்லை. தமிழ்நாடு மாதிரியான மாநிலங்களுக்கு நஷ்டம்தான் வரும். இதையெல்லாம் புரிஞ்சுக்கிற அளவுக்கு அரசு இங்கே இல்லை. ஜெயலலிதா இருந்த வரைக்கும் ஜிஎஸ்டியை கடுமையா எதிர்த்தாங்க.

— ஜிஎஸ்டிக்காக ராத்திரி பார்லிமென்ட் கூட்டப் போறாங்களாமே… அவ்ளோ பெரிய விஷயமா இது?

— ஹாஹாஹாஹா…. இது ஒரு சாதாரண சட்டம் / சட்டத்திருத்தம். எல்லா சட்டத் திருத்தமும் ராத்திரியில்தான் செஞ்சாங்களா என்ன? 1ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்னு சொன்னா போதும். ஆனா ராத்திரி ஸ்பெஷல் செஷன்னு டிராமா காட்டப்போறாங்கன்னா அதுல ஏதோ விஷயம் (விஷமம்) இருக்கு. இதுக்கு முன்னாடி பார்லிமென்ட் ராத்திரியில் கூடினது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சப்போ. அன்னிக்கி நேரு பேசினது உலக அளவில் மிகப் புகழ் பெற்ற பேச்சு. “உலகமே உறங்கிக் கொண்டிருக்கிற நள்ளிரவில் இந்தியா விழித்தெழுந்து வாழ்க்கைக்கும் விடுதலைக்கும் கிளர்ந்து எழுகிறது……” ஞாபகம் இருக்கா… இந்த கவர்மென்ட் ஆட்சிக்கு வந்த மூணு வருசத்துல நல்லது எதுவும் நடக்கலே. எல்லாம் வெத்துப் பேச்சுன்னு தெரிஞ்சு போச்சு. ரூபாய் நோட்டு விவகாரத்துலயும் கிழிஞ்சு தொங்குது. இப்போ பில்டப் காட்ட என்ன செய்யறது? ஜிஎஸ்டி கிடைச்சது. ஜிஎஸ்டி நாட்டுக்கு மிக முக்கியமான விஷயம்னு பில்டப் காட்ட வேண்டியிருக்கு… இதையெல்லாம் பாக்கும்போது எனக்கு என்ன தோணுதுன்னா, அநேகமா ராத்திரி மோடி ஒரு டிராமா காட்டப்போறாரு. டி.ராஜேந்தர் மாதிரி அவரோட பாணியில அடுக்குமொழியில உளறப் போறாரு. அதை, “இந்திய சுதந்திரத்தின்போது நள்ளிரவில் நாடாளுமன்றம் கூடியதற்குப் பிறகு இன்றுதான் முதல்முறையாக இரவில் கூடுகிறது…”ன்னு எலும்புத்துண்டு பொறுக்கின மீடியா எல்லாம் கூவும். நேருவுக்கும் மேலே மோடியைப் புகழ்ந்து பாடும். இதை அப்படியே கூவிக்கூவி மக்கள் மனசுல பதிய வைக்கும். இதைத்தான் பாசிஸ்ட் பாணின்னு சொல்றது. பொய்களை திரும்பத்திரும்ப உரக்கச் சொல்வது. இப்படிப் பொய்களைச் சொல்லியே ஆட்சியைப் பிடித்தபின், அந்தக் கட்சியின் அரசும் பொய்களைச் சொல்வது இயல்புதானே?

— இந்த அரசு பாசிஸ்ட் அரசுங்குறீங்களா?

— இல்லை. ஆர்எஸ்எஸ் உருவான காலத்திலிருந்தே பாசிச வழிமுறைகளை கற்றுத் தெளிஞ்ச கட்சி நடத்தும் அரசு. வரி ஏத்தறதிலும் சரி, சமூக நல்லிணக்கத்தைக குலைப்பதிலும் சரி, சடார்னு ஒரேயடியா செய்யாது. நீங்களே யோசிச்சுப் பாருங்க. மூணு வருசத்துல சர்வீஸ் டேக்ஸ் எப்படி படிப்படியா கொஞ்சம் கொஞ்சமா ஏத்துனாங்க? ரயில்வே கட்டணங்களை பட்ஜெட் நேரத்தில் மட்டும் மாத்தாம, அப்பப்போ அறிவிப்புகள் மூலமா கொஞ்சம் கொஞ்சமா ஏத்துனாங்க…? ஞாபகம் இருக்கா? இது மெல்லக் கொல்லும் விஷம். எப்படி எல்லாத்துக்கும் ஒரே நேரத்தில் வரியை ஏத்தாம, உங்களால உணர முடியாதபடி கொஞ்சம் கொஞ்சமா வரி ஏத்துனாங்களோ அதே மாதிரி தலித்துகள், கிறித்துவர்கள், முஸ்லிம்கள்னு எல்லார் மேலயும் ஒரே நேரத்துல தாக்குதல் நடத்தாம அப்பப்போ ஒவ்வொரு பிரிவா தாக்குவாங்க. இதுதான் பாசிச பாணி… சந்தேகம் இருந்தா ஜெர்மனியில் ஹிட்லர் செய்ததையும் இப்போ இந்தியாவில் நடக்கிற எல்லாத்தையும் ஒப்பிட்டுப் பாருங்க. ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே சந்தை, ஒரே வரின்னு சொல்லிட்டே இனி அடுத்து எங்கே போவாங்கன்னு நீங்களே யோசிச்சுப் புரிஞ்சுக்குங்க. இது பாசிச அரசு இல்லை, ஆனா பாசிசத்தை நோக்கி பாதி தூரத்துக்கும் மேலே போய்விட்ட அரசு. மக்களுக்கு இது புரிஞ்சு நடந்தா நல்லது. இல்லேன்னா 2024இல் தேர்தலே இருக்குமாங்கிறதே சந்தேகம்தான்.

— அப்போ ஜிஎஸ்டி மக்களுக்கு விரோதமானதுன்னு சொல்றீங்களா?

— இல்லை. நிர்வாக ரீதியா ஜிஎஸ்டி நல்லதுதான். ஜிஎஸ்டி மட்டுமல்ல, எந்தவொரு வரியும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு விதிக்கப்பட்டால் நல்லதுதான். ஆனா இங்கே ஆட்சி செய்யறவங்க மக்கள் நன்மைக்காக எதையும் செய்யலே. அவர்கள் முன்வைக்கும் ஜிஎஸ்டி மக்களுக்கு தீமைதான் செய்யும், சாமானிய / நடுத்தர மக்கள் மீதான சுமையை கூட்டவே செய்யும். அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை.

ஷாஜஹான்

error: Content is protected !!