ஏப்ரல் 1ம் தேதி முதல் இ-வே பில் நாடு முழுவதும் கட்டாயம்! – AanthaiReporter.Com

ஏப்ரல் 1ம் தேதி முதல் இ-வே பில் நாடு முழுவதும் கட்டாயம்!

ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு சரக்கு எடுத்து செல்வதற்கு இ-வே பில், ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடுமுழுவதும் கட்டாயமாக்கப்படுகிறது.

சரக்கு வாகனங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கோ அல்லது ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கோ பொருட்களை எடுத்துச் செல்லும் போது சரக்கு வாகன ஓட்டிகள் இ-வே பில் வைத்திருப்பது கட்டாயமாகும்.கடந்த 15 நாட்களாக சோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட இ-வே பில் முறை நேற்றுடன் முடிந்துவிட்டது. இன்று முதல் முறைப்படி இ-வே பில் வைத்திருப்பது கட்டாயமாகிறது.

ஜிஎஸ்டியில் பதிவு செய்யப்பட்ட வர்த்தகர் ரூ.50 ஆயிரம் மதிப்புக்கு அதிகமான பொருட்களை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு அனுப்பும் போது, இ-வே பில்லை உருவாக்க வேண்டும்., ஜிஎஸ்டி வர்த்தகரின் பெயர், எந்த இடத்துக்கு பொருட்கள் செல்கிறது, இன்வாய்ஸ் எண், தேதி, பொருட்களின் மதிப்பு, எச்எஸ்என் கோட், வாகனத்தின் எண், அல்லது ரயில்வே, விமானம் குறித்த விவரம், காரணம், வாகன எண் ஆகியவற்றை அந்த இ-வே பில்லில் குறிப்பிட வேண்டும்.

இந்த இ-வே பில் இருந்தால் மட்டுமே ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். இந்த நடைமுறை தமிழகம் உட்பட 14 மாநிலங்களில் ஏற்கெனவே அமலில் உள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இது, நாடுமுழுவதும் கட்டாயமாக்கப்படுகிறது. டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

தற்போதுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் தாக்கல் செய்யும் நடைமுறையில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. இதற்கு மாற்றாக புதிய மற்றும் எளிமைப் படுத்தப்பட்ட ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை செயல்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதால் மேலும் மூன்று மாதங்கள் வரை பழைய நடைமுறையை தொடர்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.