இந்தியாவில் உள்ள 2.5 லட்சம் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் + விப்ரோவில் அதிகரிக்கும் ஆட்குறைப்பு – AanthaiReporter.Com

இந்தியாவில் உள்ள 2.5 லட்சம் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் + விப்ரோவில் அதிகரிக்கும் ஆட்குறைப்பு

ஐ.டி.களின் மாநகரமான பெங்களூருவை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்தியாவின் 3வது பெரிய சாப்ட்வேர் நிறுவனம் என்ற பெயரினை கொண்ட விப்ரோ கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் 1.79 லட்சம் பணியாளர்களை கொண்டிருந்தது. இந்நிலையில் அந்நிறுவனம் 600 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இந்த பணி நீக்க எண்ணிக்கை 2 ஆயிரத்தினை தொடும் என யூகிக்கப்படுகிறது. இதுபற்றி அந்நிறுவனம் தெரிவித்துள்ள செய்தியில், கடுமையான செயலாக்க மதிப்பீட்டு முறையை சீரான முறையில் விப்ரோ மேற்கொள்கிறது. அதன்படி, வர்த்தக நோக்கங்கள், நிறுவனத்தின் அதிமுக்கியத்துவம் மற்றும் வாடிக்கையாளர் தேவைகள் ஆகியவற்றுடன் தனது பணியாளர்களை வரைமுறைப்படுத்தி கொள்கிறது. இந்த மதிப்பீட்டு முறையால் சில பணியாளர்கள் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் வேறுபடும் என தெரிவித்துள்ளது. எனினும், நீக்கப்பட்ட பணியாளர்கள் எண்ணிக்கையினை பற்றி அந்நிறுவனம் கருத்து தெரிவிக்கவில்லை.

wipro apr 23

விப்ரோவின் விரிவான செயலாக்க மதிப்பீட்டு முறையானது அறிவுரை அளித்தல், மறு பயிற்சி மற்றும் பணியாளர்கள் திறனை உயர்த்துதல் போன்றவற்றை உள்ளடக்கியிருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விப்ரோவின் 4வது காலாண்டு மற்றும் முழுவருட பணியாளர்கள் எண்ணிக்கை பற்றி வருகிற 25ந்தேதி அறிக்கை வெளியிடப்படும்.

இந்திய ஐ.டி. நிறுவனங்களானது அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற பல்வேறு நாடுகளின் பணியாளர் விசா நடைமுறைகளில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளினால் நிச்சயமற்ற சூழலை எதிர்கொள்கின்றன. இந்த நிறுவனங்கள் தற்காலிக பணி விசாக்களை பயன்படுத்தி ஊழியர்களை பணிக்கு அனுப்புகிறது. அந்த நாடுகளில் விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்ட நிலையில் பணியாளர்களை அனுப்புவது மற்றும் பிற செலவுகளால் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.

செயற்கை முறையிலான கருவிகள் பயன்பாடு போன்ற தொழில்நுட்பங்கள் அதிக அளவிலான பணியாளர்கள் தேவையை குறைத்துள்ளது. இந்திய ஐ.டி. நிறுவனங்கள் 60 சதவீத வருவாயை வடஅமெரிக்க சந்தையிலும், 20 சதவீத வருவாயை ஐரோப்பிய சந்தையிலும் மீதமுள்ள வருவாயை பிற நாடுகளில் இருந்தும் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்க்து.

அடிசினல் தகவல் :

நம் நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக எந்தவித வர்த்தகத்திலும் ஈடுபடாமலும், தங்களுடைய நிலைமை குறித்து அரசுக்குத் தெரிவிக்காத காரணத்தால் இந்தியாவில் உள்ள 2.5 லட்சம் நிறுவனங்கள் எந்நேரமும் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய நிறுவனச் சட்டம் 2013 பிரிவு 455யின் படி, இரண்டு வருடங்களுக்கும் மேலாக எந்தவித வர்த்தகத்திலும் ஈடுபடாத நிறுவனங்கள் தங்களின் நிலைப்பாட்டை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். அதாவது, அரசிடம் ‘dormant company’ (செயலற்ற நிறுவனம்) என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்தச் சட்டத்தின் பிரிவு 248-ன் படி, இரண்டு ஆண்டுகளாக எந்தவித வர்த்தகத்திலும் ஈடுபடாமல் இருக்கும் நிறுவனங்களையும், அனுமதி பெற்றபின்னும் அடுத்த ஒரு ஆண்டுக்குள் எந்தவித வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடாத நிறுவனங்களின் அனுமதியை ரத்துசெய்யும் அதிகாரம் நிறுவனங்களின் பதிவாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்களின் நிலைப்பாட்டை அரசுக்குத் தெரிவிக்காத நாடு முழுவதுமுள்ள 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு, ’நிறுவனங்களுக்கான பதிவாளர் அலுவலகம்’ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நிறுவனப் பதிவாளர் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி மும்பையில் 71,000, டெல்லியில் 53,000, ஹைதராபாத்தில் 40,000, பெங்களூருவில் 22,000, சென்னையில் 4000, கான்பூரில் 7,000, ஜெய்ப்பூரில் 6,000 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனப் பதிவாளர் அலுவலகம், இந்த 2,50,000 நிறுவனங்களை வருமான வரித்துறை, கலால் வரித்துறை, சேவை வரித்துறை ஆகியவற்றை ஆய்வு செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளது. ஒருவேளை, நிறுவனப் பதிவாளர் அலுவலகம் நீக்கப்படவுள்ள நிறுவனங்களில் ஊழியர்கள் பணியாற்றியிருக்கும் பட்சத்தில், அவர்களின் அனுபவம் பிற நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படாததால் இந்த நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.