கோடை வெயிலை சமாளிக்க மண்பானை தொழிலுக்கு போட்டியாக வந்தாச்சு டின் பியர்! – AanthaiReporter.Com

கோடை வெயிலை சமாளிக்க மண்பானை தொழிலுக்கு போட்டியாக வந்தாச்சு டின் பியர்!

சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் , மாடர்ன் மண்பானைகளின் விற்பனை சூடு பிடித்துள்ளது. அதே சமயம் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் டின் பியர் விற்பனை செய்யப்படுவதாக, டாஸ்மாக் நிறுவனம் வியாழக்கிழமையன்று அறிவித்துள்ளது.

கடந்த நான்காம் தேதி தொடங்கிய கத்திரி வெயில், சென்னை வாசிகளை வாட்டி வதைத்து வருகிறது. அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தை தணிக்க பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை மிகவும் விரும்புவது குளிர்ந்த நீர். ரெப்ரிஜிரேட்டர்களில் வைத்த தண்ணீரை குடித்தால் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் போன்றவை வருவதால் பழையபடி மீண்டும் மண்பானைகளில் தண்ணீர் வைத்து பருக தொடங்கியுள்ளனர் சென்னை வாசிகள். பழைமையான முறைக்கு திரும்பி மக்கள் பானைகளை வாங்க முன்வந்தாலும், காலத்திற்கேற்ப சில மாற்றங்களை எதிர்பார்க்க தான் செய்கின்றனர். அதனால் தான் மாடர்ன் பானைகள் எனப்படும் தண்ணீர் கேன்களை போன்ற குழாய் பொருத்திய பானைகள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த முறை விற்பனை நன்றாகவே இருப்பதாகவும், பல்வேறு விதமான பானைகளும், வீட்டு உபயோக பொருட்களையும் மக்கள் ஆர்வத்தோடு வாங்கி செல்வதாக தெரிவிக்கிறார் பானை விற்பனையாளர்கள்
நூறு ரூபாய் முதல் ஆயிரத்து முன்னூறு ரூபாய் வரையில் குழாய் வைத்த மண் பானைகள் கிடைப்பதாகவும், களி மண் எடுப்பதை அரசு எளிமையாக்கினால் மண் பானைகளின் விலை குறைவதோடு தங்களின் வாழ்வாதாரமும் பெருகும் என்பதே மண் பாண்ட விற்பனையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு மதுபானக் கடைகளில் டின் பியர் விற்பனை செய்யப்படுவதாக, டாஸ்மாக் நிறுவனம் வியாழக்கிழமையன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஸ்டேட் மார்கெட்டிங் கார்ப்பரேஷன் (TASMAC) வெளியிட்ட அறிக்கையில்,“ தமிழக மதுபானக் கடைகளில் இனிமேல் டின் பியர் விற்கப்பட உள்ளது. இது டாஸ்மாக்கின் வருவாயை உயர்த்த மேற்கொள்ளப்படும் அடுத்தக்கட்ட நடவடிக்கையாகும். டின் பியர் தயாரிக்க பத்து நிறுவனங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 500 மில்லி லிட்டர் பியரின் விலை ரூ.110-ல் இருந்து 120 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கோடைகாலத்தில் குடிமகன்கள் மத்தியில் பியர் பாட்டில்களைக் காட்டிலும், டின் பியருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன், டாஸ்மாக் கடைகளில் சராசரியாக 15 பெட்டிகள் வரை பீர் விற்பனையானது. ஆனால், தற்சமயம் பல டாஸ்மாக் கடைகளில் 20 முதல் 25 வரை பீர் பெட்டிகள் விற்பனையாகிறது. இதையடுத்து, ஒருசில மதுபானக் கடைகளில் குளிரூட்டப்பட்ட பியர்களை அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதைக்கண்டறிந்து எம்.ஆர்.பி. விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்படும்”என்று, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.