அமர்நாத் யாத்திரையில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை: காஷ்மீர் அரசு அலெர்ட்! – AanthaiReporter.Com

அமர்நாத் யாத்திரையில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை: காஷ்மீர் அரசு அலெர்ட்!

சுமார் 3,880 மீட்டர் உயரத்தில் அமைத்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் தோன்றும் பனிலிங் கத்தை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து ஆண்டு தோறும் செல்வது வழக்கம். கடந்த ஜூன் 30 ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஷ்ரவன் பூர்ணிமாவுடன் நிறைவடையும் என்னும் நிலையில் பயங்கரவாத தாக்குதல் களின் அச்சுறுத்தலை அடுத்து அமர்நாத் யாத்திரையை முன்கூட்டியே முடித்துக்கொள்ளுமாறு ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. மாநில உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவால் ஜம்மு காஷ்மீரில் மேலும் பதற்றம் அதிகரிக்கும் என்று பிராந்திய அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த உத்தரவால் கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீர் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறையப் போவதில்லை என்று தேசிய மாநாடு கட்சி தலைவர் ஓமர் அப்துல்லா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ‘‘யாத்திரிகர்கள், சுற்றுலா பயணிகளை உடனடியாக வெளியேறும்படி கூறினால் அவர்கள் மனதில் பதற்றம் அதிகரிக்காதா ? அரசு இது போன்ற உத்தரவை பிறப்பித்த பின் ஜம்மு காஷ்மீரில் தங்கியிருக்க யார் துணிவார்கள் ? இதனால் விமானநிலையங்களிலும் நெடுஞ்சாலைகளிலும் மக்கள் நெரிசல் தான் ஏற்படும்’’ என்று ஓமர் அப்துல்லா  சாடியுள்ளார்.

பிடிபி கட்சி தலைவர் மெஹ்பூபா முஃப்தி இது பற்றி கூறுகையில்  ‘‘மத்திய அரசு, ராணுவ நடவடிக்கை மற்றும் மனரீதியான தாக்குதலை ஜம்மு காஷ்மீரில் பயன்படுத்த துவங்கிவிட்டது’’ என குற்றம்சாட்டியுள்ளார்.

‘‘பல மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்களை கிடங்குகளில் சேமிக்க வேண்டும் என்பது உட்பட மத்திய அரசின் அடுக்கடுக்கான உத்தரவுகளால் மக்கள் மத்தியில் முதலில் பதற்றம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் இப்படிப்பட உத்தரவுகள் மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை அதிகரிக்கும்’’ என்று மெஹ்பூபா முஃப்தி டுவிட்டரில் கூறியுள்ளார்.

அரசியல்வாதியாக மாறிய முன்னாள் ஐஏ.எஸ் அதிகாரி ஷா ஃபாசல் மாநில அரசு உள்ளூர் மக்களுக்கு தனியாக அறிவுரை எதேனும் வழங்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

‘‘ஜம்மு காஷ்மீர் அரசு, சுற்றுலா பயணிகள் மற்றும் அமர்நாத் யாத்திரிகர்களை பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. உள்ளூர் மக்களுக்கும் இதுபோன்ற உத்தரவுகள் மாநில அரசால் பிறப்பிக்கப்படுமா? காஷ்மீர் மக்களும் வேறு இடங்களுக்கு குடிபெயர வேண்டுமா ? அல்லது எங்கள் உயிரை பற்றி உங்களுக்கு கவலை இல்லையா ? என ஷா ஃபாசல்  கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் காஷ்மீரில் தாக்குதல்கள் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆதாரங்களின் படி, காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகள் புகுந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. ஆதாரங்களின்படி, அமர்நாத் யாத்திரைக்கு செல்லும் வழியில், ஷேஷ்நாக் அருகே மனித இலக்குகளைத் தாக்கப் பயன்படும் கண்ணிவெடி வகையை சேர்ந்த கிளேமோர் மீட்கப்பட்டது என்றும், இந்த கிளேமோர் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

அதேவேளையில் ஜம்மு-காஷ்மீரில் முதன் முறையாக கிளேமோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அமர்நாத் யாத்திரையை முடித்தவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், உடனடியாக காஷ்மீர் மாநிலத்தை விட்டு வெளியேறுமாறு அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.

இந்த கிளைமோர் (M18A1 Claymore Antipersonnel Mine) என்பது மறைந்திருந்து மனித இலக்குகளைத் தாக்கவும், படைவீரர்களை தாக்குவதற்கென்று பயன்படும் கண்ணிவெடி வகையை சேர்ந்த ஆயுதமாகும். இதை சிறு வாகனங்களை தாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.