பிளாஸ்டிக் தேசியக்கொடிகளை பயன்படுத்தாதீங்க! – மத்திய அரசு – AanthaiReporter.Com

பிளாஸ்டிக் தேசியக்கொடிகளை பயன்படுத்தாதீங்க! – மத்திய அரசு

இந்தியாவின் 71-வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் வெகு விமரிசை யாகக் கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு உள்துறை அமைச்சகம் வெளி யிட்டுள்ள அறிவுறுத்தலில், பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட தேசியக்கொடிகளை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூறியுள்ள அறிவுறுத்தலில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் இதோ:

சுதந்திர தினத்தன்று, பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளை மக்கள் பயன் படுத்து வது மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. காகித தாள்களைப்போல, பிளாஸ்டிக் பேப்பர்களுக்கு உடனடியாக மக்கும் தன்மை இல்லை என்பதால், தேசியக்கொடியின் கண்ணியத் தை  காப்பதில் நடைமுறை சிக்கல்கள் எழுகின்றன. தேசியக்கொடி அவமதிப்பு தடுப்பு சட்டம் 1971-ன் பிரிவு 2 -ன் படி, தேசியக்கொடியை இழிவுபடுத்தும் வகையில் செயல்கள் மேற்கொண்டால் மூன்றாண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது.

எனவே, கலாச்சார விளையாட்டு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் கொடிகள், பேப்பர்களில் மட்டுமே செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர், இவ்வாறாக பயன்படுத்தப்படும் கொடிகளை கண்ட இடங்களில் விட்டுச்செல்லக்கூடாது. தேசியக்கொடிக்குரிய கண்ணியம் மீறப்படாமல் தனிப்பட்ட இடத்தில் இவற்றை அகற்ற வேண்டும்.

பிளாஸ்டிக்கினால் தயாரித்த தேசியக்கொடிகளை பயன்படுத்தக்கூடாது என்று மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களில் உரிய விளம்பரங்கள் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.