பலான ‘கணக்கு பேராசியை நிர்மலாதேவி விவகாரம்: கவர்னர் தனி விசாரணை! – AanthaiReporter.Com

பலான ‘கணக்கு பேராசியை நிர்மலாதேவி விவகாரம்: கவர்னர் தனி விசாரணை!

மதுரை காமராஜர் யுனிவர்சிட்டி நிர்வாகத்தில் இயங்கும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை யில் உள்ள தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியில் பணிபுரிந்து வரும் கணிதத் துறை பேராசிரியை நிர்மலா தேவி அக்கல்லூரி,மாணவிகள் சிலரிடம் பேசிய ஆடியோ பதிவு ஒன்று வெளியானது. அதில் மாணவிகள் சில இடங்களில், சிலரிடம் அட்ஜெஸ்ட் செய்தால் 85 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண்களுடன் , பணமும் தருவதாக பல்கலைக்கழகத்தில் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் கூறியதாக அவர் பேசியது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து பேராசிரியை நிர்மலா தேவி 15 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டார். ஆனால் தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டதாக நிர்மலா தேவி விளக்கமளித்திருந்தார்.

இதனிடையே, பேராசிரியை நிர்மலா தேவி மீது அருப்புக்கோட்டை நகர காவல்நிலையத்தில் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது இந்நிலையில் நிர்மலா தேவியை அவரது வீட்டிற்கு காவல்துறையினர் கைது செய்தனர். முன்னதாக அருப்புக்கோட்டையில் உள்ள அவரது வீட்டில் பலமணி நேரமாக உட்புறமாக பூட்டிக்கொண்டு இருந்துள்ளார். இதனால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து கைது செய்தனர்.

இந்நிலையில், பேராசிரியை நிர்மலாதேவி ஆடியோ விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளிடம் பேசிய ஆடியோ குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும். விசாரணை அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் நியமிக்கப்பட்டுள்ளார். குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என கூறப்பட்டு இருக்கிறது

ஆனால் இவ்விவகாரத்தில் உயர்மட்ட விசாரணையில் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை இல்லை. அவரை கருவியாக பயன்படுத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத் தலைவர் சதாசிவம் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.