கூகுள் ப்ளஸ் சேவையை குளோஸ் பண்ணப் போறாங்க! – AanthaiReporter.Com

கூகுள் ப்ளஸ் சேவையை குளோஸ் பண்ணப் போறாங்க!

உலகின் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்துக்குப் போட்டி யாக 2011-ம் ஆண்டு, ஜூன் மாதம் கூகுள் ப்ளஸ் சேவையை தொடங்கியது. பயனாளர்கள் தரும் அழைப்பின் பேரில் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது கூகுள் பிளஸ் மூலம் அதன் பயனாளர்கள் பற்றிய தகவல்கள் திருடப் படுவதாக, அமெரிக்காவின் பிரபல ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் நேற்று செய்தி வெளியானது. இந்தச் செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே கூகுள் பிளஸ் சமூகவலைத்தளம் நிரந்தரமாக மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது.

இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “கூகுள் ப்ளஸ் உருவாக்கம் மற்றும் பராமரித்தலில் குறிப்பிடத்தக்க சவால்கள் இருப்பதாலும், பயனர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாத காரணம் மற்றும் மிகக் குறைவான பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்,

.கடந்த மார்ச் மாதத்தில், பாதுகாப்பு தணிக்கைக்குழு வெளியிட்ட தகவல்படி, மென்பொருள் தொழில்நுட்ப பிழை காரணமாக, கூகுள் ப்ளஸ் பயனர்கள், அவர்களது நண்பர்களுடன் மட்டுமே பகிரும் தகவல்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. இந் நிலையில், எந்தெந்த கணக்குகள் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம், 500,000-க்கும் மேற்பட்ட கணக்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும் இந்த அசம்பாவிதத்திற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்க வில்லை, எந்த பயனர்களின் கணக்குகளிலும் அதற்கான சாட்சிகளும் இல்லை என்றும் கூகுள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

அதனால் 10 மாதங்களுக்குள் பயனாளர்கள் தங்களின் தகவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் அடுத்த ஆகஸ்ட் மாதம் வரை கூகுள் ப்ளஸ் கணக்கை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.