நாட்டிய தாரகை மிருணாளினி சாராபாய்! – AanthaiReporter.Com

நாட்டிய தாரகை மிருணாளினி சாராபாய்!

இன்றைய கூகுள் டூடுளில் சிறப்பித்துள்ள மிருணாளினி சாராபாய் இதே மே மாதம் 11, 1918 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் பிறந்தார். இவர் “உங்களால் மூச்சுவிடாமல் இருப்பதைப் பற்றி யோசிக்க முடியுமா… எனக்கு நாட்டியம் அப்படித்தான்” என்று நாட்டியத்தின் மீதான தன் காதலை வெளிப்படுத்திய மிருணாளினிக்கு இன்னிக்கு 100 வயசு.

நம்ம நியர் ஸ்டேட்டான் .கேரளாவில் சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் எம்.பி.யுமான அம்மு சுவாமிநாதனின் மகளாகப் பிறந்தவர். பரதத்துக்கு மிருணாளினி குடும்பத்துக்குமான தூரம் அதிகம் என்றாலும், முதல் முயற்சியாக தன் குழந்தைக்கு நாட்டியம் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்தார் அவரின் தாய். அதே சமயம் சிறு வயதில் இருந்தே நடனத்தில் ஆர்வம் கொண்டிருந்த மிருணாளினி பல மேடை நடனங்களில் ஆடி தனது திறமையை வளர்த்துக் கொண்டார்.

அகமதாபாத்தில் 1948-ல் தர்பணா கலை அகாடமி தொடங்கிய இவர், 18,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரதம், கதகளி ஆகிய கலைகளை பயிற்றுவித்து அவர்களையும் மிகச் சிறந்த கலைஞர்களாக உருவாக்கினார். பரதநாட்டியம், கதகளி, மோகினியாட்டம் உள்ளிட்ட நாட்டியக்கலைகளில் வல்லவராக திகழ்ந்த மிருணாளினி வாழும் காலங்களில் அடைந்த புகழ் ஏராளம்.

குறிப்பாக சொல்வதென்றால் இள வயதிலிருந்தே கலைகள் மீது ஆர்வம் காட்டிய மிருணாளினி, வளர்ந்ததும் அமெரிக்காவில் உள்ள நாடக கல்விக்கழகத்தில் இணைந்து அதற்கான பயிற்சியைப் பெற்றார். பின் சுவிட்சர்லாந்து நாட்டில் டால்குரோசு பள்ளியில் மேற்கத்திய நடனம் பயின்றார். மேலும், மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பரதநாட்டியம், தகழி குஞ்சு குரு என்பவரிடம் கதகளி நடனம் மற்றும் கல்யாணக் குட்டியிடம் மோகினி ஆட்டத்தைப் பயின்றார். ரவீந்திரநாத் தாகூரின் ஆளுமையால் ஈர்க்கப்பட்டு, பின்னாளில் தன்னுடைய குரு தாகூரைப் போற்றி வந்ததாகப் பலரிடம் கூறியிருக்கிறார்.

பெங்களூரில் படிக்கும் போது இந்திய விண்வெளியின் தந்தை என அழைக்கப்படும் `விக்ரம் சாராபாயினை’ மணந்து கொண்டார். விக்ரம் சாரபாய் போன்று பாரம்பர்ய மிக்க குடும்பத்திலிருந்து வரும் பெண்கள் நாட்டிய நாடகங்களில் பங்கேற்கமாட்டார்கள் என்று விமர்சித்தவர்களே அசந்து போகுமளவுக்கு நாட்டியத்தாலேயே பதில் தந்தார் மிருணாளினி. வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து கலைச்சேவை ஆற்றிவந்த முதல் நடனக்கலைஞர் என்கிற பாராட்டைப் பெற்றவர்.

மிருணாளி இறப்பதற்கு முன்பு வரை 300க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளுக்கு நடனம் பயிற்றுவித்தார். அதுமட்டுமல்லாமல், தனது நடனத்தின் மூலம், குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களிடமிருந்து பாராட்டை பெற்றுள்ளார். இன்னும் சொல்வதென்றால் நடனம் என்பது குறிப்பிட்ட மக்கள் மட்டுமே கற்றுக்கொள்ளும் கலை என்கிற பிம்பத்தை உடைத்தார். நிச்சயம் மேல்தட்டு மக்களுக்கானது மட்டுமில்லை. அவை அனைத்துத் தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும் என்கிற கருத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் தீவிரமாக இருந்தார். இதற்காக 1948-ல் அகமதாபாத்தில் தர்பணா என்ற கலைக்கல்லூரி ஒன்றைத் தொடங்கி 18,000 மக்களுக்கு தான் கற்ற கலையான பரதம் ,கதகளி போன்றவற்றை பயிற்றுவித்தார். மக்களின் அன்றாட பிரச்னை, வாழ்க்கை போராட்டம் போன்ற கருத்துகளைக் கதைக்களமாகக் கொண்டு 300க்கும் மேற்பட்ட மேடை நாட்டியங்களை அரங்கேற்றிய மிருணாளினி ஜஸ்ட் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 2016-ம் ஆண்டு மறைந்தார்.