?இன்னிய கூகுள் டூடுலை அலங்கரிப்பவர் ஹர் கோவிந்த் குரானா…❤ – AanthaiReporter.Com

?இன்னிய கூகுள் டூடுலை அலங்கரிப்பவர் ஹர் கோவிந்த் குரானா…❤

ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஓர் இந்தியர், தனது அறிவுத் திறனாலும், ஆராய்ச்சியாலும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியாக உயர்ந்தார். மூலக்கூறு உயிரியல் (Molecular biology) துறையில் அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய அந்த விஞ்ஞானி, ஹர் கோவிந்த் குரானா. பிரிக்கப்படாத பாரதத்தின் பஞ்சாப் மாகாணத்தில் (இப்போதைய பாகிஸ்தான்), ராய்ப்பூர் கிராமத்தில், 1922, ஜன. 9-இல், கிராம தண்டல்காரர் ஒருவரின் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார் ஹர் கோவிந்த் குரானா.

தனது குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்தபோதும், குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் தந்தை மிகுந்த கவனம் செலுத்தினார். அந்தக் கிராமத்தில் எழுதப் படிக்கத் தெரிந்த ஒரே குடும்பமாக குரானா குடும்பம்தான் இருந்தது.    தற்போது மேற்கு வங்கத்தில் உள்ள மூல்தானில் இருந்த டி.ஏ.வி. பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்த குரானா, லாகூரிலுள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. பட்டமும், வேதியியலில் எம்.எஸ்சி. பட்டமும் (1945) பெற்றார்.

பிறகு அரசாங்க உதவித்தொகையுடன் பிரிட்டன் சென்று, லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்தார். அங்கு பேராசிரியர் ரோஜர் ஜே.எஸ்.பீர் வழிகாட்டுதலில் பி.எச்டி. பட்டம் (1948) பெற்றார். இந்தக் காலகட்டத்தில் மேற்கத்திய நாகரிகத்தால் குரானா கவரப்பட்டார்.

1948-49 ஆண்டுகளில் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஃபெடரல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக குரானா பணிபுரிந்தார். 1949-இல் மீண்டும் பிரிட்டன் திரும்பிய குரானா, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உதவித்தொகை பெற்று, உயிரி வேதியியல் விஞ்ஞானிகளான அலெக்ஸாண்டர் டோட், ஜி.டபிள்யூ.கென்னர் ஆகியோருடன் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டார். புரதங்கள் (Proteins), நியூக்ளிக் அமிலம் (Nucleic acids) தொடர்பான ஆய்வுகள் அப்போது தான் வேகம் பெற்றிருந்தன. அதில் குரானா தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். 1952 வரை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.

கனடாவைச் சேர்ந்த பேராசிரியர் கார்டன் எம் ஷ்ரம், குரானாவின் ஆற்றலை உணர்ந்து அவரை பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பிய ஆராய்ச்சி அமைப்பில் சேருமாறு அழைத்தார். அதையேற்று வான்கூவர் நகருக்குச் சென்ற குரானா, 1952 முதல் 1960 வரை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அப்போது ஸ்விட்சர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினரின் மகள் எஸ்தர் எலிஸபெத் சிப்லரை காதல் திருமணம் செய்துகொண்டார்.

கனடாவில் விஞ்ஞானிகளான ஷ்ரம், ஜாக் கேம்பெல், கார்டன் எம் டெனர் ஆகியோரின் ஒத்துழைப்புடன், பாஸ்பேட் ஈஸ்டர்கள் தொடர்பான ஆய்வுகளில் அவர் ஈடுபட்டார்.

1960-இல் அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் உள்ள நொதி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Institute for Enzyme Research) விஞ்ஞானியாகச் சேர்ந்தார். 1966-இல் அமெரிக்கக் குடியுரிமை அவருக்கு வழங்கப்பட்டது. அதே ஆண்டில் அமெரிக்க அரசு பெருமைக்குரிய தேசிய அறிவியல் விருதை குரானாவுக்கு அளித்தது. அதன்பின் தனது வாழ்நாள் முழுவதும் அமெரிக்கக் குடிமகனாகவே குரானா வாழ்ந்தார்.

விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது, சக விஞ்ஞானிகளான மார்ஷல் டபிள்யூ நோரென்பர்க், ராபர்ட் ஹாலி ஆகியோருடன் இணைந்து செயற்கை உயிரி உற்பத்திக்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார் குரானா. மூலக்கூறு உயிரியலில் இன்றியமையாத ரைபோ கரு அமிலம், ஆக்ஸிஜனற்ற ரைபோ கரு அமிலம் (RNA- DNA) ஆகிய நியூக்ளியோட்டைடுகளை (Nucleotide) ஆராய்ந்த இக்குழுவினர், மரபுக் குறியீடுகளின் வடிவம் (Genetic Code), புரதத்தை செயற்கையாக உருவாக்குவதில் அவற்றின் பங்களிப்பு ஆகியவை குறித்த புரட்சிகரமான ஆய்வு முடிவுகளை வெளியிட்டனர்.

இந்த ஆராய்ச்சியின் முடிவால், மரபுவழியில் வரும் நோய்களுக்குத் தீர்வு காண முடிந்தது. இந்த மரபுக் குறியீடு கண்டுபிடிப்புக்காக, மருத்துவத்துக்கான நோபல் பரிசு 1968-இல் ஹர் கோவிந்த் குரானா, மார்ஷல் டபிள்யூ நோரென்பர்க், ராபர்ட் ஹாலி ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டது.

ஆலிகோ நியூக்ளியோட்டைடுகளை (oligo nucleotide) வேதியியல் முறையில் தொகுக்க முடியும் என்று நிரூபித்த முதல் விஞ்ஞானி குரானா தான். அதுமட்டுமல்ல, பாலிமரேஸ், லிகேஸ் ஆகிய நொதிகளைக் கொண்டு செயற்கையான மரபுக் குறியீடுகளை உருவாக்குவதிலும் அவர் கவனம் செலுத்தினார்.

இன்று உயிரியலில் பெரும் விந்தைகளை நிகழ்த்திவரும் படியெடுப்பு (Cloning), மரபணு மாற்றுப் பயிர்கள் ஆகியவற்றுக்கு முன்னோடியான ஆய்வு அது. நாம் விரும்பும் விதமான மரபுக் குறியீடு கொண்ட ஆலியோ நியூக்ளியோட்டைடுகளை மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் வாங்க முடியும் அளவுக்கு தற்போது மூலக்கூறு உயிரியல் வளர்ந்திருக்கிறது.

1970-இல் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் வேதியியல் மற்றும் உயிரியல் இருக்கைப் பேராசிரியராக குரானா சேர்ந்தார். அங்கு நிறக்குருடுக்குக் காரணமாகும் விழித்திரைப் புரதமான ரோடோப்ஸின், பாக்டீரியா ரோடோப்ஸின் ஆகியவை குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார்.

1969-இல் இந்திய அரசு குரானாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியது. 1978-இல் அவருக்கு லண்டன் ராயல் சொûஸட்டியால் எஃப்ஆர்எஸ் வழங்கப்பட்டது. உலக அளவிலான மேலும் பல விருதுகளை குரானா அலங்கரித்தார்.

இந்திய அரசும் அமெரிக்க அரசும் இணைந்து 2007-இல் உருவாக்கிய கூட்டுறவுத் திட்டத்துக்கு ‘குரானா நிகழ்வு’ (Khorana Program) என்று பெயரிடப்பட்டிருந்தது. பட்டதாரி மாணவர்களை விஞ்ஞான ஆராய்ச்சியில் ஊக்குவிப்பது, ஊரக வளர்ச்சியில் அவர்களைப் பயன்படுத்துவது, அதில் இரு நாடுகளின் அரசுத் துறை- தனியார் துறைகளை ஈடுபடுத்துவது ஆகியவையே குரானா நிகழ்வின் நோக்கங்களாகும்.

2011, நவ. 9-இல் குரானா அமெரிக்காவில் காலமானார். தனது தளரா ஆராய்ச்சியால் அமெரிக்காவின் கௌரவமாக உயர்ந்த குரானாவால் இந்தியாவும் பெருமை பெற்றது.

அன்னாரது பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவே இன்று கூகுள் டுடுள் மிளிர்கிறது