800 மீட்டர் ஓட்டத்துக்கான பொதுவான விதிமுறை இது! – AanthaiReporter.Com

800 மீட்டர் ஓட்டத்துக்கான பொதுவான விதிமுறை இது!

ஓட்டங்களில் 800 மீட்டர் ஓட்டம் ரொம்பவே விந்தையானது. குறுந்தொலைவு (Sprint) ஓட்டங்களான 100, 200, 400 மீட்டர் ஓட்டங்களுக்குப் பிறகு, நடுத்தர தொலைவு ஓட்டங்களில் முதல் ஓட்டம் 800 மீட்டரில்தான் தொடங்கும். தடகள ஓடுபாதையின் ஒரு சுற்றின் (Lap) நீளம் 400 மீட்டர். 800 மீட்டர் ஓட்டத்துக்கு இந்த ஓடுபாதையை நீங்கள் இரண்டு முழுரவுண்டுகள் அடிக்க வேண்டியிருக்கும். மனிதப்பிறவிகளால் ஒரே மூச்சில் அதிகஅளவு வேகத்தில் ஓடக்கூடிய தொலைவு 400 மீட்டர்தான். அதையும் தாண்டி அதேவேகத்தில் யாரும் தலைதெறிக்க ஓடிவிடமுடியாது. இது அறிவியல். அதனால்தான் குறுந்தொலைவு ஓட்டங்களில் கடைசி ரக ஓட்டமாக 400 மீட்டர் இருக்கிறது.

இப்போது 800 மீட்டர் ஓட்டத்துக்கு வருவோம். 800 மீட்டர் ஓட்டம் என்பது உடல்திறன், அதிவிரைவு ஓட்டத்திறன் அதாவது ஸ்டாமினா, ஸ்பிரிண்ட் ஆகிய இரு சங்கதிகளையும் சேர்த்துப் பிசைந்த ஒரு கலவை. 800 மீட்டர் ஓடுபவர்களில் முன்பெல்லாம் இரு ரகத்தினர் இருந்தார்கள். முதல் ரகத்தினர் முதல் 400 மீட்டரில் பறப்பார்கள். 2ஆவது சுற்றில் (Lap) கொஞ்சம் நிதானித்து ஓடி வெற்றிக்கோட்டை எட்டிப் பிடிக்க முயல்வார்கள். இரண்டாவது ரகத்தினர் முதல் சுற்று ஓடும் போது நிதானமாக ஓடிவிட்டு, 2ஆவது சுற்றில் தங்கள் வேலையைக் காட்டுவார்கள்.

800 மீட்டர் ஓட்டம் தொடங்கும்போது, அதிவேக ஓட்டத்தில் ஓடுபவர்களைப் போலவே முதல் ஆளாக விரைவாக கிளம்பி ஓடுவது உத்தமம். ஓட்டம் தொடங்கும் இடத்தில் வீரர்கள் தனித் தனியாக நிறுத்தி வைக்கப்படுவதால் ஆரம்பத்தில் டிராபிக் பிரச்சினை எதுவும் இருக்காது. ஒரு கட்டத்தில் வீரர்கள் இணைந்து ஒரு கொத்தாக ஓடத் தொடங்குவார்கள். இந்த கட்டத்தில் முதல் டிராக்கில்தான் நான் ஓடுவேன் எனறு அடம்பிடிக்காமல் கிடைத்த இடத்தில் ஓடி வருவது நல்லது.

200 முதல் 400 மீட்டர் தூரத்தில் சற்று ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம். இந்த இடத்தில் திடீரென வேகமாக ஓடுவது கூடவே கூடாது. இந்த இடத்தில் வேகத்தைத் திடீரென கூட்டினால் தொங்கிப் போவீர்கள். வேகம் குறைகிற மாதிரி தெரிந்தால் கொஞ்சம் கூட்டிக் கொள்ளலாம். அவ்வளவுதான். 2ஆவது சுற்றில் நீங்கள் ஓடும்போது எந்த இடத்தில் உங்களை நிலைநிறுத்திக் கொள்ள நினைக்கிறீர்களோ அந்த இடத்துக்காக (Position) இப்போதே தயாராகிக் கொள்வது நல்லது.

இப்போது நீங்கள் பாதித் தொலைவை (400 மீட்டரை) கடந்து விட்டீர்கள். இதை அறிவிக்க கிணுகிணுவென மணி ஒலிக்கும். இனி 400 முதல் 600 மீட்டர் பகுதி. இந்த இடத்தில் முகத்தையோ உடலின் மேற்பகுதியையோ விறைப்பாக வைத்துக் கொள்ளக் கூடாது. இறுகிய தசை வேகத்தைக் குறைத்துவிடும். உங்களுக்கு முன்னே ஓடுபவர்களைக் கடந்து செல்வதில் இப்போது கவனம் செலுத்துங்கள். இந்த இடத்தில் ரிலாக்ஸ் கூடவே கூடாது.

இப்போது 600 முதல் 800 மீட்டர் தொலைவு. கிளைமாக்ஸ் நேரம். மிகமிக கடினமான கட்டம் இது. உங்களின் கால்கள் எரியும். மூச்சு வாங்கும். தாராளமாக வாயைத் திறந்து ஒரே நேரத்தில் வாயாலும், மூக்காலும் காற்றை இழுத்து விடுங்கள். தலையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள். உங்களுடன் ஓடும் சிலர் பல்லைக் கடிப்பார்கள். சிலர் கைவிரல்களைக் குவித்து இறுக்கிக் கொள்வார்கள். நீங்கள் இப்படிச் செய்ய வேண்டாம். ஏற்கெனவே சொன்னது போல இறுக்கமாகும் தசை வேகத்தைக் குறைத்துவிடும்.

இப்போது வளைவில் திரும்பும் நேரம். இங்கே வேகத்தை விட்டுக் கொடுக்காதீர்கள். கடைசி நேரத்தில் வலுவைக் கூட்டி ஓடலாம் எனவும் காத்திருக்காதீர்கள். கவணில் இருந்து புறப்படும் கல் போல பாய வேண்டிய தருணம். இதேநிலையில் இழுத்துப் பிடித்து ‘தம்’ கட்டினால், இதோ.. இதோ…கிட்டே வந்துவிட்டது வெற்றிக்கோடு.

800 மீட்டர் ஓட்டத்துக்கான பொதுவான விதிமுறை இது. ஆனால் கோமதி மாரிமுத்து என்ன மாதிரியான நுணுக்கங்களை கைக் கொண்டு ஓடினாரோ, அதில் எத்தனை எத்தனை வலி வேதனைகளோ தெரியாது. நல்வாழ்த்துகள் தங்கப் பெண்ணே!

மோகன ரூபன்