கோவில்பட்டி கடலை மிட்டாய் & தூத்துக்குடி மக்ரூன் ஆகியவைக்கு புவிசார் குறியீடு! – AanthaiReporter.Com

கோவில்பட்டி கடலை மிட்டாய் & தூத்துக்குடி மக்ரூன் ஆகியவைக்கு புவிசார் குறியீடு!

சேலம் பேப்ரிக்..—காஞ்சிபுரம்பட்டு — பவானி ஜமக்காளம் — மதுரை சுங்குடி– கோவை வெட் கிரைண்டர் – தஞ்சாவூர் வண்ண ஓவியங்கள் — நாகர்கோவில் நகைகள் – தஞ்சாவூர் கலைத் தட்டுகள்— ஈஸ்ட் இந்தியா லெதர் — சேலம் வெண்பட்டு — கோவை கோராபட்டு — ஆரணிபட்டு — சுவாமிமலை வெண்கலப்பொருள்கள் — ஈத்தாமொழி நெட்டை தென்னை —தஞ்சாவூர் பொம்மை — விருப்பாச்சி மலை வாழை — சிறுமலை வாழை — மதுரை மல்லி — தஞ்சாவூர் வீணை — பத்தமடைபாய் — நாச்சியார்கோவில் குத்துவிளக்கு — ஆகிய வரிசையில் கோவில்பட்டி கடலை மிட்டாய் மற்றும் தூத்துக்குடி மக்ரூன் ஆகியவைக்கு விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கவுள்ளது.

ஒரு குறிப்பிட்ட இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிப்பிடும் பொருளின்மீது பயன்படுத்தும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு (GEOGRPICAL INDICATION TAG – ஜியாகிரபிக்கல் இன்டிகேசன் ) எனப்படுகிறது. இக்குறியீடு அந்தப் பொருளின் சொந்த இடத்தின் தரத்தையும் நன்மதிப்பையும் பறைசாற்றும் சின்னமாக விளங்கும். அந்த வகையில்16ம் நூற்றாண்டிலிருந்து தூத்துக்குடியில் மக்ரூன் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல கடலை மிட்டாய் உற்பத்திக்கு கோவில்பட்டி மிகவும் புகழ்பெற்றது. தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் இவையிரண்டுக்கும் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பு எப்போதும் உள்ளது. தனிச்சிறப்பு மிக்க இவையிரண்டுக்கும் விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து அறிவுசார் சொத்துரிமை சங்கத்தின் தலைவர் சஞ்சய் காந்தி இன்று (நவம்பர் 5) செய்தியாளர்களிடம் பேசுகையில், “தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், திருவில்லிபுத்தூர் பால்கோவா, மணப்பறை முருக்கு போன்ற பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படவுள்ளது.

இது தீபாவளிக்கு கிடைத்துள்ள இனிப்பான செய்தியாகும். இதுதவிர தமிழ்நாட்டில் 30 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்துள்ளோம். இவற்றுக்கும் புவிசார் குறியீடு கிடைத்தால் இந்தியாவிலேயே அதிக புவிசார் குறியீடு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு இருக்கும். புவிசார் குறியீடு கிடைத்தால் குறிப்பிட்ட அந்தத் தொழிலை குடிசைத் தொழிலாக மேற்கொள்ளும் மக்களுக்கு மிகவும் பயன்படும். இனி ’தூத்துக்குடி மக்ரூன்’ என்று மற்ற ஊர்களில் தயாரித்து விற்பனை செய்ய இயலாது” என்றார்.

இதன் படி, கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கிவிட்டால் வர்த்தகம் அதிகரித்து, ஏற்றுமதி வாய்ப்புகள் கிடைக்கும் என்று கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். மேலும், இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வந்தோம் என்றும், தற்போது எங்கள் கோரிக்கை நிறைவேறவுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.