உணவுப் பொருள்களுக்கான விளம்பரங்களில் பல வார்த்தைகளுக்குத் தடை! – AanthaiReporter.Com

உணவுப் பொருள்களுக்கான விளம்பரங்களில் பல வார்த்தைகளுக்குத் தடை!

அவசர மயமாகி விட்ட இக்காலக்கட்டத்தில் வீட்டில் சமைக்கச் சோம்பேறிப் பட்டுக் கொண்டு, உடனடி உணவுப் பொருட்களை வாங்குவது அதிகரித்து உள்ளது. அடிப்படையில் உடல் செயல்படுவதற்குத் தேவையான சக்தியை-ஊட்டத்தை வழங்கும் உணவு என்ற உயிர் ஆதாரத்தில் இருந்து, சத்தற்ற – நோய்களை உருவாக்கக்கூடிய செயற்கை உணவு வகைகளுக்கு மாறிவருகிறோம். மொபைல் உலகில் சுழன்று கொண்டிருக்கும் நம்மில் பலரும் வேறு வழியில்லாமல் பதப்படுத்தப்பட்ட – தொழில்மயப்படுத்தப்பட்ட உணவு வகைகளை வாங்கும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். அதே சமயம் அப்படி வாங்கும் பல்வேறு உணவு பொருட்கள் குறித்து அவ்வப்போது சர்ச்சைகள் வெளியான நிலையில் உணவு விளம்பரங்களில் ‘இயற்கை’, ‘பாரம்பரியம்’, ‘புதிய’, ‘அசல்’ உள்ளிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்த மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதிக்கப் பரிசீலித்து வருகிறது.இதற்கான வரைவு அறிக்கையை இந்தியப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நேற்று (நவம்பர் 23) வெளியிட்டுள்ளது. தவறான விளம்பரங்கள் மற்றும் கோரிக்கைகளை நிறுத்தவே இந்த வரைவு அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்று ஃஎப்எஸ்எஸ்எஐ சிஇஓ பவன் அகர்வால் கூறியுள்ளார்.

இதன்படி,

”ஃப்ரெஷ் (fresh) என்னும் வார்த்தையை கழுவுவது, உரிப்பது, குளிரவைப்பது உள்ளிட்ட அடிப்படை செயல்பாடுகளை மட்டும் மேற்கொள்ளும் பொருட்களுக்கே பயன்படுத்த வேண்டும்.

உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் பதனப் பொருட்கள் இருந்தாலோ, பதப்படுத்துவது, கிட்டங்கியில் வைக்கப்படுவது உள்ளிட்ட சப்ளை சங்கிலித்தொடர் நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டால் ‘புத்தம்புதிதாக பேக் செய்யப்பட்டது’ (freshly packed) என்ற வார்த்தையைக் கொண்டு விளம்பரப்படுத்தக் கூடாது.

‘இயற்கையான’ (natural) என்ற வார்த்தையை, தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் அல்லது தாதுக்கள் மூலம் பெறப்படும் உணவுப் பொருட்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். முக்கியமாக அதில் மற்ற வேதியியல் பொருட்களின் கலப்பு இருக்கக் கூடாது.

அத்துடன் கூட்டு உணவுப் பொருட்களுக்கு ‘இயற்கையான’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது. தேவையெனில் ‘இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது’ என்று விளம்பரப்படுத்தலாம்.

‘பாரம்பரியமான’ (traditional)என்னும் வார்த்தை, அடிப்படையான பொருட்கள் அல்லது தலைமுறைகளாக இருந்துவரும் பொருட்களுக்கான தயாரிப்பு நடைமுறை, அந்தப் பொருளின் தன்மை குறிப்பிட்ட சில காலத்துக்கு மாறாததாக இருக்கும் பட்சத்தில் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்.

‘அசலான’ (original) என்னும் வார்த்தையை, உணவின் ஆரம்பப் புள்ளியைக் (origin) கண்டறிந்த பிறகு உருவாக்கப்படும் உணவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அவை காலத்தால் மாறிவிடும் தன்மையைப் பெற்றிருக்கக் கூடாது. அத்துடன் முக்கிய மூலப் பொருட்களுக்குப் பதிலாக வேறு பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உணவுகளுக்கு அந்த வார்த்தையைப் பயன்படுத்த முடியாது”.

இவ்வாறு அந்த வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.