”என்னக் கொடுமை சார் இது?” – ராமமோகன் ராவ் தன்னிலை விளக்க பேட்டி – AanthaiReporter.Com

”என்னக் கொடுமை சார் இது?” – ராமமோகன் ராவ் தன்னிலை விளக்க பேட்டி

கடந்த ஒரு வாரமாக தமிழக சேனல் மற்றும் நாளிதழில்களில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தவர் ராம மோகன்  ராவ். சோதனை முடிந்தது ராமச்சந்திரா ஹாஸ்பிட்டலில் ஒரு நாள் ரெஸ்ட் எடுத்து விட்டு நேற்று வீடு திரும்பியவர் தன்னிடம் நடந்த வருமான வரி சோதனை மற்றும் புகார்கள் குறித்து விளக்கம் அளிக்க இன்று காலை சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்,

cs dec 27

அப்போது அவர், “என்னுடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை கண்டித்து பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தாபானர்ஜி மற்றும் அ.தி.மு.க.வுக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை தொடர்பாக சில முக்கிய விளக்கங்களையும், தகவல்களையும், உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது வீட்டில் நடத்தப் பட்ட வருமான வரித்துறை சோதனை அரசியல் சட்ட அமைப்புகளுக்கு எதிரானது. அந்த சோதனை நடந்த போது என்னை வீட்டுக் காவலில் வைத்தனர். இது முறையற்ற செயலாகும்.

வருமான வரித்துறை அதிகாரிகள் எனது வீட்டை சோதனையிட வந்த போது அதற்குரிய சான்று ஆவணத்தை காட்டினார்கள். ஆனால் அந்த சோதனைக்கான பேப்பரில் எனது பெயர் எதுவுமே இல்லை. எனவே எனது வீட்டில் நடத்தப்பட்ட சோதனை தவறானது. இதை ஏற்க இயலாது. நான் எந்த தவறும் செய்யவில்லை. தலைமை செயலாளராக நீடிக்கிறேன் தற்போதைய சூழ்நிலையில் சட்டப்படி நான்தான் தலைமை செயலாளராக நீடிக்கிறேன். என்னை நியமனம் செய்தது முதல்- அமைச்சர் புரட்சித்தலைவி அம்மாதான். அந்த உத்தரவில் மாற்றம் இல்லை. என் வீட்டில் சோதனை நடந்தபோது அதிகாரிகள் ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்து 320 ரூபாய் மட்டுமே எடுத்தனர். மேலும் எனது மனைவி மற்றும் மருமகளுக்கு சொந்தமான 50 பவுன் நகையை மட்டுமே எடுத்தனர்.மேலும் சில பழைய வெள்ளி பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். மற்றபடி பெரிய அளவில் எதையும் அவர்கள் எடுக்க வில்லை.

எனது வீட்டில் ரகசிய அறை இருப்பதாக வருமான வரித்துறையினர் தகவல் பரப்பி உள்ளனர். அப்படி எந்த ரகசிய அறையும் எனது வீட்டில் இல்லை.எனது மகன் விவேக் இந்த வீட்டில் வசிக்கவில்லை. அவர் தனியாக வசிக்கிறார். எனவே எங்களை சேர்த்து சொல்வது தவறு ஆகும். எனது மகனுக்கும் தமிழக அரசுக்கும் எந்த வர்த்தக தொடர்பும் கிடையாது.என் மகனுக்கு எதிரான வாரண்டை வைத்து தலைமை செயலகத்துக்கு சென்று சோதனை நடத்தி இருக்கிறார்கள்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இப்போது உயிருடன் இருந்திருந்தால் மத்திய அரசுக்கு இந்த தைரியம் வந்திருக்காது. தலைமை செயலகத்துக்குள் துணைநிலை ராணுவத்தை அவர்கள் துணிச்சலுடன் அனுப்பி இருப்பார்களா? மத்திய அரசுக்கு இந்த விஷயத்தில் எந்த துணிச்சலும் இல்லை. என்னை இடமாற்றம் செய்யும் தைரியம் கூட மத்திய அரசுக்கு கிடையாது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் மாநில அரசுக்கும், அதிகாரிகளுக்கும் மரியாதை இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழகத்திற்கு பாதுகாப்பு இல்லை. யாரும் யாருடைய வீட்டிற்குள்ளும் நுழையலாம் என்ற நிலை உள்ளது. வருமான வரி சோதனையில் சிக்கிய சேகர் ரெட் யுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. துப்பாக்கி முனையில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் என் வீட்டிற்குள் நுழைந்தனர்.

தலைமை செயலாளராக இருந்த எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. என்னை குறி வைத்து எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கடந்த 7 மாதங்களாக ஜெயலலிதா உத்தரவுப்படிதான் செயல்பட்டு வந்தேன். ஜெயலலிதா வழிக்காட்டுதல்படிதான் நடந்து வந்தேன்”என்று ராமமோகன ராவ் தெரிவித்தார்.