ஆல் இஸ் வெல் – ஆர்.பி.ஐ. அறிக்கை குறித்து நிதி அமைச்சர் திருப்தி! – AanthaiReporter.Com

ஆல் இஸ் வெல் – ஆர்.பி.ஐ. அறிக்கை குறித்து நிதி அமைச்சர் திருப்தி!

ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், ”கறுப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, புழக்கத்தில் உள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள மத்திய அரசு அவகாசம் அளித்தது.

பழைய 500 ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டு, புதிய 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. ஆனால், 1000 ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டு, அவை மீண்டும் அச்சிடப்படவில்லை. அதற்கு பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அசசடித்து விநியோகம் செய்யப்பட்டன.

அதன்படி, மொத்தமுள்ள 632.6 கோடி மதிப்பிலான 1000 ரூபாய் நோட்டுகளில் 8.9 கோடி ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பி வரவில்லை. அதாவது, 1.4 சதவீதம் 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பவில்லை.

இதேபோல், மார்ச் 2017 வரையில் 588.2 கோடி ரூபாய்க்கு புதிய மற்றும் பழைய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்துள்ளது. ஆனால், கடந்த நிதியாண்டில் 1,570.7 கோடி மதிப்பில் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்துள்ளது.

முந்தைய நிதியாண்டில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்ட வகையில் 3,421 கோடி ரூபாய் செலவானது. இந்த நிதியாண்டில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க 7,965 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இந்த ஆண்டில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் செலவு மட்டும் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது “என்று கூறப்பட்டு இருந்தது.

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் திரும்ப வரவில்லை. இது ஒரு வகையில் ரிசர்வ் வங்கிக்கு லாபம். ஆனால் இந்த மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கு செலவிட்ட தொகை ரூ.21,000 கோடி. இதை பரிந்துரை செய்து அமல்படுத்திய பொருளாதார நிபுணர்கள் நோபல் பரிசை வெல்வார்கள். 99 சதவீத நோட்டுகள் திரும்ப வந்துள்ளன. அதாவது பணமதிப்பு நீக்கம் மூலம் எளிதாக கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றியுள்ளார்கள்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நிலையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கைப் பின்னர் பெரிய அளவிலான தொகை வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது; இதன் மூலம் யாருடைய பணம் என்று தெரியாமல் இருந்த நிலை மாறிவிட்டது என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அருண் ஜெட்லி பேசும் போது, “பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது என்று சொல்ல முடியாது. இப்போதும் சிலர் அது போன்ற பணப்பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு வரலாம். கருப்புப் பணத்தில் பெரும்பான்மை தொகை வங்கிகளுக்கு வந்துள்ளது.பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது, எவ்வளவு கோடி பணம் திரும்ப வரும் என்று ஊகங்கள் இருந்தன. இப்போது அது தெளிவாகி இருக்கிறது. யாருடையது என்பதே தெரியாமல் இருந்த நிறைய பணம் வங்கிகளுக்கு வந்துள்ளது. இது நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் நல்ல விஷயம் ஆகும்.

இந்த நடவடிக்கை மோசடியாளர்களுக்கு வேறு பல வழிகளை திறந்து விட்டிருக்கலாம். ஆனால், வங்கிகளுக்கு வந்த பணம் அனைத்தும் சட்டப்பூர்வமானது என்று அவர்கள் எண்ண வேண்டும். வங்கிகளில் டெபாசிட் செய்தாலே கருப்புப் பணம் வெள்ளையாகி விடும் என்றும் நம்ப வேண்டும்.வங்கிகள் மூலம் இல்லாமல் வேறு வழிகளில் நடந்து வந்த பணப்பரிமாற்றம் முடிவுக்கு வந்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 2016-17ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது.

அதேசமயம், கூடுதலாக 25 சதவீதம் பேர் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்தனர்.புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க அதிக பணம் செலவானதாக சொல்கிறார்கள். புதிய ரூபாய் நோட்டுகள் தொலைநோக்குப் பார்வையுடன் வெளியிடப்பட்டுள்ளன. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவது வழக்கமான ஒன்று. இது தேவையற்ற வாதம் ஆகும்”இவ்வாறு அருண் ஜெட்லி பேசினார்.