அருண் ஜேட்லி தாக்கல் செய்த பொருளாதார ஆய்வு அறிக்கையின் என்ன அம்சம்! – AanthaiReporter.Com

அருண் ஜேட்லி தாக்கல் செய்த பொருளாதார ஆய்வு அறிக்கையின் என்ன அம்சம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந் உரையுடன் இன்று தொடங்கியது. அதைத் தொடர்ந்து இரு அவைகளிலும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். பிப்ரவரி 1-ஆம் தேதி 2018-2019-ஆம் நிதியாண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதையொட்டி, அதில் கவனம் செலுத்த வேண்டிய அம்சங்கள் குறித்து, முதன்மைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் இந்த ஆய்வறிக்கையைத் தயாரித்து இருந்தார். அதிலேயே இவ்விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன.

அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(பொருளாதார வளர்ச்சி) 2018-19ம் நிதி ஆண்டில் 7 முதல் 7.5 சதவீதமாக இருக்கும்.

வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடு என்ற அடையாளத்தை இந்தியா பெறும்.

நடப்பு 2017-18ம் நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.75 சதவீதமாகவே இருக்கும்.

அடுத்த நிதியாண்டில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், அதை கட்டுப்படுத்த கொள்கை கண்காணிப்பு தேவை.

2017-18ம் ஆண்டில் வங்கித்துறையின் செயல்பாடு குறிப்பாக அரசு வங்கிகளின் செயல்பாடு மந்தமாகவே, சுறுசுறுப்பின்றி இருக்கிறது.கார்ப்பரேட் திவால் தீர்வு நடைமுறை (சிஐஆர்பி) மூலம் வங்கிகள் தங்களின் நிலுவை கடன்களை வசூலிப்பதில் சிறிய அளவு முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தாலும், ஏறக்குறைய 525 நிறுவனங்கள் ரூ. ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 810 கோடி கடனைப் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருக்கின்றன.வாராக்கடனைப் பொறுத்தவரை, வர்த்தக வங்கிகள் (எஸ்சிபி) கடந்த 2017 மார்ச் முதல் செப்டம்பர் வரை 9.6 சதவிகிதத்தில் இருந்து 10.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அரசுத் துறை வங்கிகள் வராக்கடனும் கடந்த 2017 மார்ச் முதல் செப்டம்பர் வரை 12.5 சதவிகிதத்திலிருந்து 13.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

வங்கிகள் மூலம் சேவைத் துறைக்கும், தனிநபர்களுக்கும் கடன் கொடுப்பது தொடர்ந்து பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது.ஆனால், தொழில்துறைக்கு கடன் கொடுப்பதில் கடந்த 2016 அக்டோபர் முதல் 2017-ஆம் ஆண்டு நவம்பர் வரை எதிர்மறையான வளர்ச்சியே ஏற்பட்டுள்ளது.

வரி வசூல் விவகாரங்களில் அரசின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ள அளவிற்கு, அதனால் பயன் கிடைக்கவில்லை உலகின் பல நாடுகளை ஒப்பிட்டால் இந்தியாவில் மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நேரடி வரி வசூல் குறைவாக உள்ளது.எரிபொருள் விலையேற்றம் கவலையளிக்கிறது. வேலைவாய்ப்பு என்பது மற்றொரு கவலையளிக்க கூடிய விஷயமாக உள்ளது.ஆண் குழந்தை மீதான மோகம் குறையவில்லை. ஆண் குழந்தை பெற்றுக்கொள்ளும்வரை பெற்றோர்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்கின்றனர். இதனால், பிறப்பு விகிதாச்சாரம் உயர்கிறது.

வேளாண்மைக்கு ஊக்கம் அளித்தல், ஏர் இந்தியா தனியார் மயம், அரசு வங்கிகளுக்கு மறுமுதலீடு ஆகியவற்றுக்கு அடுத்த ஆண்டு கொள்கை வகுக்க வேண்டும்.

மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளில் வரி வசூல் அளவு குறைவாகவே இருக்கிறது. அது அதிகரிக்கப்பட வேண்டும்.

கல்வி, சுகாதாரத்துடன் கூடிய முழுமையான வளர்ச்சி, அடிப்படை கட்டமைப்புக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும்.நீதித்துறையில் இருக்கும் காலதாமதம், வழக்குகள் தேக்கம், ஆகியவற்றை களைவதும் அவசியம்.தொழிலாளர் சட்டங்களில் தொழில்நுட்பம் சிறப்பாக பயன்படுத்தப்பட வேண்டும்.

நாட்டில் நிலவும் கடுமையான காற்று மாசைக் குறைக்க மத்திய அரசுடன், மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.

மக்கள் உடல்நல முன்னேற்றத்தில் சுத்தம் மற்றும் சுகாதாரம் மிக முக்கியமானதாகும். சுத்தமான இந்தியா இயக்கத்தின் மூலம் கழிப்பறைகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நாடுமுழுவதும் கழிப்பறைகள் உள்ள வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2014ல் 39 சதவீதமாக இருந்த கழிப்பறை உளள வீடுகளின் எண்ணிக்கை, 2018ம் ஆண்டில் 76 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் தற்போது திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலை முற்றிலும் இல்லாத சூழல், எட்டு மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ளன. 90 சதவீத தனிநபர்கள் கழிப்பறையை பயன்படுத்தம் சூழல் உள்ளது. திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை இல்லாத கிராமங்களில், மக்களின் உடல் நிலை முன்னேறியுள்ளது. நோய் பாதிப்பு குறைந்துள்ளது. குழந்தைகளுக்கு கொடூரமான நோய்கள் தாக்குவது குறைந்துள்ளதால், அவர்கள் பள்ளிக்கு செல்வதும் அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவ செலவு குறைவு, அதிகமான நாட்கள் உழைப்பு, வருவாய் இழப்பு குறைவு போன்ற காரணங்களால் ஒரு குடும்பம் மாதந்தோறும் 50,000 ரூபாய் வரை சேமிக்க முடியும். இந்த விவரம் ஐநாவின் யுனிசெப் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.