பாலின சர்ச்சையில் சிக்கிய தடகள வீராங்கனை சாந்தி நிரந்தர பயிற்சியாளராக நியமனம்!

பாலின சர்ச்சையில் சிக்கிய தடகள வீராங்கனை சாந்தி நிரந்தர பயிற்சியாளராக நியமனம்!

புதுக்கோட்டை மாவட்டம், கத்தக்குறிச்சியை சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தி சர்வதேச அளவில் 11 பதக்கங்கள் வென்றவர். கடந்த 2006-ம் ஆண்டு கத்தாரில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 800 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார். ஆனால், அவரது பாலினம் குறித்து சர்ச்சை எழுந்ததால் பதக்கம் பறிக்கப்பட்டு தடகளப் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது. இதனால் வறுமையில் வாடிய சாந்தி செங்கல் சூளையில் வேலை பார்த்த தகவலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது தேசிய விளையாட்டு ஆணையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பயிற்சியாளராக பணியாற்றி வரும் சாந்திக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நிரந்தர பயிற்சியாளர் பணியை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

sports oct 16

இது குறித்து வந்த தகவல்படி, ‘தமிழக தடகள வீராங்கனை சாந்தி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண். 2006-ல் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் சாந்தி. அதன் பிறகு பாலின சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட சாந்திக்கு ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டு, அவரின் அனைத்து பதக்கங்களும் பறிக்கப்பட்டன. போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் வெள்ளி மங்கை சாந்தி கொஞ்ச காலம் செங்கல் சூளையில் வேலை செய்துவிட்டு, இப்போது ஒப்பந்த அடிப்படையில் தேசிய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தற்காலிகப் பயிற்சியாளராக மயிலாடுதுறையில் பணிபுரிந்து வருகிறார்.

தமிழக வீராங்கனை சாந்திக்கு ஏற்பட்ட அதே சிக்கல் ஒடிஷா வீராங்கனை டூட்டி சந்துக்கும் ஏற்பட்டது. டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாகக் கூறி, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஒடிஷா அரசு அதைக் கடுமையாக எதிர்த்து, வீராங்கனைக்கு ஆதரவாக இருந்தது. தடையை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஹார்மோன்களை மட்டும் அடிப்படையாக வைத்து பாலினத்தை நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறு, அறிவியல் பூர்வமற்றது என்று கூறி பெண் பாலின பரிசோதனை விதிமுறைகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது. சர்வதேச தடகள விளையாட்டு சம்மேளனம், பாலின பரிசோதனை முறை குறித்து உரிய பதில் தாக்கல் செய்யாத பட்சத்தில், பாலின பரிசோதனை நடைமுறை ஒட்டுமொத்தமாக நீக்கப்படும் என்று தீர்ப்பளித்தது.

டூட்டி சந்துக்கு நீதி கிடைத்து அவர் கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற நிலையில், தமிழ்ப்பெண் சாந்திக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. இதனிடையேதான் சாந்தி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நிரந்தர பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளார்’ என்று தகவல் வெளியாகியுள்ளது

Related Posts

error: Content is protected !!