நம்ம நாட்டுலே புழங்கற கள்ள நோட்டோட மதிப்பு ஜஸ்ட் 400 கோடி ரூபாய்தானாம்! – AanthaiReporter.Com

நம்ம நாட்டுலே புழங்கற கள்ள நோட்டோட மதிப்பு ஜஸ்ட் 400 கோடி ரூபாய்தானாம்!

நம்ம நாட்டில் காகித ரூபாய் நோட்டை பொறுத்தவரை 18ம் நூற்றாண்டு வாக்கில்தான் புழக்கத்திற்கு வந்தது. பாங்க் ஆஃப் ஹிந்துஸ்தான், ஜெனரல் பாங்க் ஆஃப் பெங்கால் மற்றும் பெங்கால் பேங்க் ஆகியவை இதனை வெளியிட்டன.இந்திய அரசு வெளியிட்ட முதல் நோட்டுகளில், விக்டோரியா மகாராணியின் படங்கள் இடம் பெற்றிருந்தன. தொடக்கத்தில் ரூபாயின் பாதுகாப்புக்காக, அவை இரண்டாக வெட்டப்பட்டு, முதலில் ஒரு பாதி தபாலில் அனுப்பப்பட்டது. அது வந்து சேர்ந்துவிட்டது என தகவல் பெறப்பட்டதும் இரண்டாவது பாதி அனுப்பப்பட்டது. 1867ல் இம்முறை விலக்கிக் கொள்ளப்பட்டது.

faku note

]பிரிட்டிஷ் அரசாட்சியின் போது, நமது ரிசர்வ் வங்கி வெளியிட்ட முதல் நோட்டு, 5 ரூபாய் மதிப்பு கொண்டது. இதில் இங்கிலாந்து மன்னர் 6வது ஜார்ஜின் படம் இடம் பெற்றிருந்தது.ரிசர்வ் வங்கியின் சரித்திரத்தில் அது வெளியிட்டுள்ள உயர்ந்த மதிப்புகொண்ட நோட்டு 10 ஆயிரம் ரூபாய் நோட்டு ஆகும். 1938ம் ஆண்டு புழக்கத்தில் விடப்பட்ட 1000, 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 1946ல் விலக்கிக் கொள்ளப்பட்டன.1954ல் 1000, 5000, 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மீண்டும் வெளிவந்து மீண்டும் 1978ல் விலக்கிக் கொள்ளப்பட்டன.சுதந்திரம் அடைந்தபின், ரிசர்வ் வங்கி வெளியிட்ட முதல் ரூபாய் நோட்டு, ஒரு ரூபாய் நோட்டு. 1, 2, 3, 5, 10, 20, 25 பைசாக்கள் 2011ம் வருடம் ஜூன் 30ம் தேதியுடன் வாபஸ் பெறப்பட்டன.

1996ல் வெளியிடப்பட்ட மகாத்மா காந்தி வரிசை நோட்டுகள், 2005ல் விலக்கிக் கொள்ளப்பட்டு, அதற்கு பதில், சில மாற்றங்களுடன் புதிய மகாத்மா காந்தி வரிசை நோட்டுகள் அறிமுகமாயின. ஆனால் பழைய மகாத்மா காந்தி வரிசை நோட்டுகள் 2015ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை வங்கிகளில் வாங்கப்பட்டன.

இந்திய நோட்டுகளில், ரிசர்வ் வங்கி ஆங்கில எழுத்துக்களில் 20 எழுத்துகளை மட்டுமே பயன்படுத்துகிறது. I, J, O, X, Y, Z ஆகியவை இவற்றில் இடம் பெறுவதில்லை. மேலும் நோட்டுகளை அச்சடிக்கும்போது அவை எந்த ஆங்கில எழுத்துக்களில் வெளியிடப்படுகின்றன என்பதில் ரகசியம் காக்கப்படுகிறது.

இதனிடையே இந்தியாவில் புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.400 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு 10 லட்சம் நோட்டுகளிலும் 250 நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்றும் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சந்தையில் புழக்கத்தில் உள்ள சுமார் ரூ.70 கோடி வரையிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. கள்ள நோட்டு புழக்கம் தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் மையம் நடத்திய ஆய்வில் தான் இந்த திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.இது தொடர்பான ஆய்வு முடிவுகளை அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்காக இது போன்ற பொருளாதார தீவிரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக புலனாய்வு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கண்டுபிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளில் 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு சம அளவிலும் அதே நேரத்தில் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பை விட 10 சதவீதம் கூடுதலாகவும் காணப்பட்டன. பிடிப்பட்ட கள்ள நோட்டுகளின் மொத்த மதிப்பில் 50 சதவீதம் 1000 ரூபாய் நோட்டுகள் ஆகும்.இது தொடர்பாக என்ஐஏ நடத்திய விசாரணையில் தீவிரவாத இயக்கங்களுக்கு உதவுவதற்கும், கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடவும் பாகிஸ்தான் மிகப் பெரிய பங்கு வகிப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் சுமார் 10 வழக்குகள் பாகிஸ்தானில் இருந்து கடல் மற்றும் விமான மார்க்கமாக கள்ள நோட்டுகளை கொண்டு வர முயன்றதாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்று என்ஐஏ அதிகாரி அலோக் மிட்டல் தெரிவித்துள்ளார்.