ட்விட்டர் மூலமா புரளிகள் மற்றும் தவறான தகவல்களே வேகமா பரவுது! – AanthaiReporter.Com

ட்விட்டர் மூலமா புரளிகள் மற்றும் தவறான தகவல்களே வேகமா பரவுது!

சமூக ஊடகங்களில் குறிப்பாக ட்விட்டர் மூலம் கடந்த 11 ஆண்டுகளில் புரளிகள் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாக கொண்ட 1,26,000 செய்தி கட்டுரைகளை ஆய்வு செய்ததன் மூலம் உண்மையான செய்திகளைவிட போலிச் செய்திகள் வெகுவிரைவாக மக்களை சென்றடைவது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் குறித்து ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது. 11 ஆண்டுகளில் சுமார் 1,26,000 பொய்யான செய்திகள் மற்றும் தகவல்கள் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சியில், மக்கள் உண்மையான செய்தியை விடப் பொய்யான செய்தியை அதிகமாக அநம்புவதாகவும், இதனால் அவர்கள் பொய்யான செய்தியைச் சமூக ஊடகங்களில் மிக விரைவாகப் பகிர்வதும் தெரியவந்துள்ளது.

அதாவது உண்மை செய்திகளைவிட போலிச் செய்திகள் 70 சதவீதம் அதிகளவில் ரீ-ட்வீட் செய்யப்படுகிறது. 1500 பேரை சென்றடைவதற்கு போலிச் செய்திகள் எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட ஆறு மடங்கு அதிக நேரத்தை உண்மையான செய்திகள் எடுத்துக்கொள்கின்றன. மேலும் உண்மையான செய்திகள் ஆயிரத்திற்கும் அதிகமானோர்களால் பகிரப்படுவது அரிதாக இருக்கும் நிலையில், மிகவும் பிரபலமான போலிச் செய்திகள் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரால் பகிரப்படுகிறது.

அதிலும் இப்போது நாம் ஒவ்வொருவரும் செய்திகளால் நிரம்பியுள்ளோம். எனவே, ஒரு செய்தி பலரது கவனத்தை பெறவேண்டுமெனில் அது மிகவும் வியப்பளிக்கும் வகையிலோ அல்லது வெறுக்கத்தக்க வகையிலோ இருக்க வேண்டும் என்பதாலும் மக்கள் புதிய மற்றும் வித்தியாசமாகச் செய்திகளை விரும்புவதே பொய்யான செய்திகளைப் பகிர்வதற்கான முக்கிய காரணமாக உள்ளது. அவர்களுக்கு வரும் செய்தி உண்மையா, பொய்யா என்பதை ஆராயாமல் அதனை அவர்கள் பகிர்ந்து விடுகின்றனர்.

குறிப்பாக அரசியல் செய்திகள் பொய்யாகப் பகிரப்படுகிறது. அல்லது இது போன்ற பொய்யான செய்திகளில் அரசியல் செய்திகள் அதிகளவில் உள்ளது. அது தவிர, நகர்ப்புற கதைகள், வணிகம், பயங்கரவாதம், அறிவியல், பொழுதுபோக்கு மற்றும் இயற்கைப் பேரழிவுகள் குறித்துப் பொய்யான செய்திகள் பகிரப்படுகிறது.

தவறான செய்தி மிகவும் சுவாரஸ்யமான கதை போன்றது. எனவே அது மக்களால் அதிகம் பகிரப்படுகிறது என்றும் தான் பகிரும் செய்தி சரியானதோ அல்லது தவறானதோ என்று பார்க்காமல் மற்றவருக்கு தெரியாத செய்தியாக இருந்தால் அதை பகிர்வதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர் என்றும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்தனர்