தீபா வீட்டிற்கு வந்த போலி ஐ.டி. ஆசாமி : மாதவனின் கைக்கூலியாம்! – AanthaiReporter.Com

தீபா வீட்டிற்கு வந்த போலி ஐ.டி. ஆசாமி : மாதவனின் கைக்கூலியாம்!

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டில் வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்து தப்பி ஓடிய பிரபாகரன் போலிசில் சரணடைந்தார். தீபாவின் கணவர் மாதவன்தான் அவரிடம் இருந்து பணம் பறிக்க தன்னை அங்கு அழைத்ததாகவும், அவரே பின்னர் அங்கிருந்து தப்பி ஓடச் சொன்னதாகவும் வாக்குமலம் அளித்துள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபாவின் வீடு, சென்னை தி. நகரில் உள்ளது. கடந்த சனிக்கிழமை வருமானவரித்துறையின் துணை ஆணையர் மித்தேஷ் குமார் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபர், அந்த வீட்டைச் சோதனையிட வந்திருப்பதாகக் கூறினார். தகவல் அறிந்த செய்தியாளர்களும், போலீசாரும் அங்கு வந்ததால் பதற்றமடைந்த அந்த நபர், திடீரென சுவரேறிக் குதித்து தப்பி ஓடினார். இந்த சம்பவத்திற்கு முன்பே, தீபாவின் வீட்டு கண்காணிப்புக் கேமராக்கள் அனைத்தும் வேறு திசையில் திருப்பி வைக்கப்பட்டிருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், போலி அதிகாரி நேற்று இரவு சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், தான் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பதும், விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரியில் ஹோட்டல் நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தனது கடைக்கு தீபாவின் கணவர் மாதவன் அடிக்கடி வந்ததாகக் கூறிய பிரபாகரன், சினிமாவில் நடிக்கவைக்க வாய்ப்புத் தருவதாக மாதவன் கூறியதாகவும் தெரிவித்தார். வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்குமாறு கூறி, கூரியர் மூலம் அடையாள அட்டையை அனுப்பியதாகவும், அதனை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வருமாறு மாதவன் தன்னிடம் கூறியதாக பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

மாதவன் கூறியதால் அவரது வீட்டுக்கு தான் சென்றதாகவும், அவர் கூறியபடியே தான் நடந்து கொண்டதாகவும் பிரபாகரன் தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீட்டில் சோதனைக்கான ஆவணத்தையும் மாதவனே வழங்கி, பின் தீபாவுக்கும் போன் செய்து வருமான வரித்துறை சோதனை நடப்பதாக கூறியதாகவும் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தீபாவின் வழக்கறிஞர், ஊடகங்கள் மற்றும் போலீசார் வந்ததால் தனக்கு மிகவும் பதற்றம் ஏற்பட்டதாகவும், அதனை மாதவனிடம் கூறியபோது, அருகில் இருந்த சந்துப் பகுதி வழியே தன்னை தப்பிச் செல்லுமாறு அவர் கூறியதாகவும் பிரபாகரன் தெரிவித்துள்ளார். மேலும் வருமானவரித்துறை சோதனை நடத்தப்படுவதாகக் கூறி தீபாவிடம் பணம் பறிப்பதற்காக மாதவன் தன்னை பயன்படுத்திக் கொண்டதாகவும், அதன் பின்னரே தான் போலீசில் சரணடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.இப்படி இந்த வழக்கில் போலி வருமான வரித்துறை அதிகாரி, தப்பியோடட்டம் என தொடர்ந்து பல டுவிஸ்ட்களை சந்தித்து வருகிறது