கமலின் மக்கள் நீதி மய்யம் வாங்கிய வாக்குகள் நெசமாவே எம்புட்டு தெரியுமா? – AanthaiReporter.Com

கமலின் மக்கள் நீதி மய்யம் வாங்கிய வாக்குகள் நெசமாவே எம்புட்டு தெரியுமா?

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அமமுக, நாம் தமிழர் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் குறிப்பிடத்தகுந்த வாக்குகளைப் பெற்றுள்ளது என்று விகடன் உள்ளிட்ட பத்திரிகைகள் நேற்று மதியத்திலிருந்தே எழுத ஆரம்பித்து விட்டன.அதற்கு உதாரண மாக சென்னை, கோவை என்று இரண்டொரு தொகுதிகளைக் காட்டுகிறார்கள்.

“மக்கள் நீதி மய்யத்திற்கான வாக்கு என்பது அதிகபட்சம் 2 சதவிகிதம்தான். ஆனால் பரவலாக பல கட்சிகள் பிரிந்து நிற்கும் இந்தச் சமயத்தில் கூடுதலாக ஒன்றரை சதவிகிதம் வரை கிடைத்தால் கிடைக்கலாம். அதற்கு மேல் வாய்ப்பே இல்லை. நாம் தமிழர் கட்சிக்கும், மக்கள் நீதி மய்யத்திற்கும் கடும் போட்டி இருக்கும்” என்று நான் தொடர்ந்து கூறி வந்தேன்.

பிரபல ஊடகவியலாளர் ஒருவர், “கமல் கட்சிக்கு சர்வசாதாரணமாக ஆறு சதவிகித வாக்குகள் விழும்” என்று துண்டு போட்டுத் தாண்டினார்.

தேர்தலுக்குப் பிறகு கூட நிறைய நண்பர்கள், “இந்தத் தடவை இளைஞர்கள் வோட்டெல்லாம் மக்கள் நீதி மய்யத்திற்குத்தான்” என்றார்கள். ஆனாலும் நான் என்னுடைய கருத்தில் பெரிய மாற்றமிருக்காது என்று நம்பினேன்.

கீழே உள்ள தகவல் 24-ம் தேதி காலை 5.30 மணியளவில் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தகவல்களிலிருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை.

பதிவான மொத்த வாக்குகளில் அமமுக வேட்பாளர்களுக்கு 5.20% வாக்குகள் கிடைத்துள்ளன.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு 3.91% வாக்குகள் கிடைத்துள்ளன.

மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களுக்கு 3.79% வாக்குகள் கிடைத்துள்ளன.

இதில் மக்கள் நீதி மய்யத்தை விட 23 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியினர் கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

14 தொகுதிகளில் அமமுகவினரை விட நாம் தமிழர் கட்சியினர் கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

13 தொகுதிகளில் அமமுகவினரை விட மக்கள் நீதி மய்யம் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.

25 தொகுதிகளில் 50,000-க்கும் குறைவான வாக்குகளையும், 4 தொகுதிகளில் 1 லட்சம் + வாக்குகளையும் பெற்றுள்ளது.

5 சதவிகிதத்திற்கும் மேல் வாங்கிய 9 தொகுதிகள் : பொள்ளாச்சி, திருப்பூர், திருவள்ளூர், மதுரை, மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், கோவை. நகர்ப்புறங்கள். தனிச் செல்வாக்கும் கொண்ட வேட்பாளர்கள்.

0.82% உடன் 8,590 வாக்குகள் என்பதுதான் மக்கள் நீதி மய்யத்தின் குறைவான வாக்கு. 11 தொகுதி களில் மக்கள் நீதி மய்யம் 1.50 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகள் பெற்றிருக்கிறது.

ஆனால் நாம் தமிழரோ ஆகக் குறைவான வாக்கே 1.63% 17,000+ வாக்குகள் என்று கணக்கை ஆரம்பிக்கிறது.

இந்தப்படி பார்க்கும் போது மக்கள் நீதி மய்யத்தை விட நாம் தமிழர் கட்சிக்கு பரவலான வாக்குகள் அனைத்துத் தொகுதிகளிலும் கிடைத்துள்ளன என்பது தெரிகிறது.

அமமுக கதை என்பது வேறு. அதிமுக வோட்டுகளைப் பிரிக்க முயன்றும் அவர்களால் 5.20%தான் பெற முடிந்துள்ளது.

கிடைத்த புள்ளி விபரங்களைக் கொண்டு நான் தொகுத்த விபரங்கள் இவை. இதில் ஏதேனும் தவறிருந்தால் சுட்டிக் காட்டினால் திருத்தப்படும்.

புரிந்துணர்வுக்கு நன்றி.

– மாயவரத்தான் கி. ரமேஷ்குமார்